ஆதவன் பக்கம் (6 ) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பலரும் சிறு வயதில் தமக்கு ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை -தற்போதும் உள்ள ‘நல்ல ஞாபகங்களாக’ சித்தரிப்பார்கள்.
திண்ணையில் மண்ணை பரப்பி ‘அ’, ‘ஆ’, ‘இ’.................. எழுத்துக்களை வேதா ரீச்சரும் மதுரா அக்காவும் எழுதப் பழக்கியது – எனது 4, 5 வயதில் இடம்பெற்ற அழகான மேற்போன்ற நல்ல ஞாபங்களில் ஒன்று. இன்றும் கண்களில் நிறைந்து நிற்கின்றது.
வேதா ரீச்சர் (திருமதி கலா யோகரத்தினம்) – தமிழர் ஆயுதப் போராட்ட முன்னோடி குட்டிமணி அவர்களின் மூத்த சகோதரர் மனைவி. அமரர் யோகரத்தினம் வல்வையில் இரவுப் பாடசாலை உருவாக்கத்தில் ஒருவர். மதுரா அக்கா வேதா ரீச்சரின் மகள்.
76 இல், ஆரம்பப் பள்ளிக்காக வேதா ரீச்சரிடம் அம்மா என்னைக் கொண்டுபோய் சேர்த்திருந்தார். வேதா ரீச்சர் வீடு தற்பொழுது ஊரிக்காட்டில் ‘மக்கள் கடை’ அமைந்துள்ள இடத்திற்கு பக்கத்தில் உள்ளது.
அம்மன் கோவிலடியிலிருந்து ரீச்சர் வீடு வரை அம்மாதான் நடந்து கூட்டிக்கொண்டு போய்வருவார். அவ்வப்போது அப்பா பாலசிங்கம் - அம்மாவின் தகப்பனார் சைக்களில் கொண்டு வருவார்.
அம்மன் கோவிலடியிலிருந்து ஊரிக்காட்டில் ரீச்சர் வீடு வரை இருந்த பகுதி மிகவும் செழிப்பானதாக விளங்கியிருந்த காலம் அது. யாவாரங்களுக்கும் பெயர் போன பகுதி.
அம்மன் கோவிலடியில் உள்ள எமது வீடு தாண்டி மடம் (தற்பொழுது ஆதிகோவில் கலைமன்றம் அமைந்துள்ள இடம்), மடத்தில் பெரும்பாலும் குடிமகன்கள், வாடி தாண்டி விறகு டிப்போ, ஆலடியில் தணிகாசலம் பீடாக்கடை மற்றும் இரவில் விளமீன் யாவாரம், ஆலடி தாண்டி ஐஸ் வாடி – இங்கு ஏராளமான லொறிகள், பிரதான வீதியில் கம்பர்மலை, கொம்மந்தறை, கெருடாவில் போன்ற பகுதிகளிலிருந்து காலையில் சந்தைக்கு வரும் காய்கறி யாவாரிகள், மீன் எடுக்க வரும் வெளியூர் மீன் யாவாரிகள், ஆதிகோவிலில் இருந்து சந்தி மீன் சந்தைக்கு வரும் மீன் யாவாரிகள், சிதம்பராவிற்குச் செல்லும் அக்காமார்கள், அண்ணாமார்கள், சங்கக்கடை, கிடுகு மாட்டு வண்டில்கள் என மிகவும் பரபரப்பாக இருந்த பகுதி இது.
இப்பகுதியில் இருந்த சிலர் வீடுகளும் அப்பொழுது பிரபல்யம். சிங்கப்பூரான் வீடு, முட்டையம்மா வீடு, நடராசா குடும்பத்தின் நான்கு வீடுகள் என்பன இவற்றில் சில.
இவைகளை நடந்து தாண்டி ஒவ்வொரு நாளும் சென்று முன்பள்ளிப் படிப்பு.
வேதா ரீச்சர் எப்பொழுதும் வெள்ளை நிறப் புடவை தான் கட்டியிருப்பார்.
இப்பொழுது குழந்தைகள் தூக்கிக் கொண்டு செல்வது போல் ஒரு பாக் நிறைய புத்தகங்கள் அப்பொழுது இல்லை. ஒரு புத்தகம், ஒரு கொப்பி, ஒரு கலர் பெட்டி இவ்வளவுதான். கொண்டு சென்றவை சிறிதாக இருந்ததால் ரீச்சர் படிப்பித்தவை அதிகம் ஞாபத்தில் இன்றும் உள்ளது.
திருப்பித் திருப்பி சொல்லித் தருவார். திருப்பித் திருப்பி கையைப் பிடித்து எழுதப் பழக்கினார். மதுரா அக்கா, வீட்டில் நிற்கும் நாட்களில், முன் திண்ணையில் மண்ணை பரப்பி கையைப் பிடித்து எழுதப் பழக்கினார்.
ரீச்சரோ சரி, மதுரா அக்காவோ சரி எந்தத் தடவையிலும் நச்சரித்ததாகவோ, நிந்திததாகாவோ எனக்கு ஞாபகம் இல்லை.
11 மணி வரை படிப்பு. அம்மா சில வேளைகளில் திருப்பிக் கூட்டிப்போக தாமதமாக வருவார். அதுவரை ரீச்சர் மகன் பிரதாபனுடன் விளையாடிக் கொண்டிருப்பேன்.
என்னுடன் படித்த 7, 8 சக மாணவ நண்பர்களை ஞாபத்தில் உள்ளது. ஒருவர் 85 இன் நடுப் பகுதியில் காணாமல் போன சோடா சுப்ரமணியத்தின் பேரன் அரவிந்தன். மற்ற ஒருவர் ரீச்சரின் மகன் பிரதாபன். இவரும் போராட்டத்தில் மரணித்துவிட்டார்.
பின்னாட்களில் சிவகுரு, ஹாட்லி, கொழும்பு, மும்பாய் மற்றும் செமினார்கள் எனச்சென்று, பல ஆசிரியர்களிடம் கல்வி பெற்றாலும் – கற்பித்தவர்களில் மறக்க முடியாதவர் இவர்கள் இருவர். இன்னும் மூவர். ஐவரும் பெண்கள். ஆச்சரியம்.
தொழிற்கல்வியில் சிறப்பானதொரு இடம், எழுத்துத்துறையிலும் ஓரளவு ஆற்றல் – இவைகள் பின்னாட்களில் நான் கற்றவை, பெற்றவை என்றாலும் – இவைகளுக்கு மூல காரணமாக அமைந்தது ‘வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்’ என்ற சிறப்பான ஆரம்பப்புள்ளிதான். அவர்களுக்கு எனது பக்கத்தில் ஒரு இடம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
நா. விக்னேஸ்வரன் (ஐக்கியராட்சியம்)
Posted Date: February 17, 2018 at 21:15
ஆதவன் பக்கம் 7 ஒவ்ஒரு மனிதனின் வாழ்கையிலும் இது ஒரு பசுமையான நினைவுகளில் மறக்கமுடியாத ஒன்று. நான் மறந்து போயிருந்த ஒரு விடயத்தை நினைக்க துாண்டிய ஆதவனுக்கு நன்றி. மறைந்த திரு யோகரெட்ணம் அண்ணா அவர்கள் ஒரு சிறந்த நாடகக்கலைளுர் அவருடன் நானும் மேடையில் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றியது நினைவுக்கு வருகிறது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.