ஆதவன் பக்கம் (17) – பாணாக்கம், மோர், தயிர்ச்சோறு, சர்பத்..........
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2018 (சனிக்கிழமை)
அம்மன் கோவில் திருவிழாக் காலங்களின் போது பாணாக்கம், மோர், சர்பத், நீர், தயிர்ச்சோறு…… என்று பலவற்றை கோயில் நிர்வாகமும் கொடுக்கின்றது, தொண்டர்களும் கொடுக்கின்றார்கள்.
பூசை, விசேட நிகழ்ச்சிகள், அம்பாள் வீதியுலா, மேளச்சமா, அண்மைக் காலமாக நாட்டியங்கள் என மொத்த நிகழ்வுகள் கூடிக்கொண்டு 7, 8 மணித்தியாலங்கள் என திருவிழா நிகழ்வுகள் நீடிக்கின்றன, குறிப்பாக பூங்காவனம் தொடக்கி தீர்த்தம் வரை.
இங்கு பலர் கூறக் கூச்சப்படும் அல்லது பயப்படும் ஒரு விடயத்தை எனது இந்தப் பக்கத்தில் பதிவிடுகின்றேன்.
பூங்காவனத்தை நோக்குவோம். காலை 8 மணியில் ஆரம்ப வேலைகள் ஆரம்பமாகி, 9 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகின்றது. உள் மேளச்சமா பின்னர் வீதிஉலா, பூங்காவனத்தில் பூசைகள், வனப்பாட்டு, மேளச்சமா நிகழ்வுகள், பின் அம்பாள் கோயில் செல்லல், இறுதிப் பூசை என்று மொத்த நிகழ்வுகள் சுமார் 8, 9 மணித்தியாலங்கள் நீடிக்கின்றன.
பூங்காவனம் ஒரு உதாரணம். இதுபோல் புலி வேட்டைத் திருவிழா. எனது சிறு பராயத்தில் புலி வேட்டை திருவிழா நிகழ்வுகள், மாலை மகோர்க்கடம் அவர்களின் கெர்ப்பக் கலக்கி (அவுட் வெடி) களுடன் தொடங்கி அதிகாலை மூன்று, நான்கு மணி வரை கூட நீடித்திருந்தது. தற்பொழுதும் பழைய வீச்சு படிப்படியாக ஓங்கிவருகின்றது.
ஏற்கனேவே வீட்டில் நீராகாரம் கொண்ட பின் கோவில் வருபவர்கள், இங்கு கோயிலில் சுமார் 6 இலிருந்து 10 மணித்தியாலங்கள் வரை எப்படி அடி வயிற்றை அடக்கிக் கொள்கின்றார்கள் என்று புரியவில்லை.
வெறும் வயிற்றுடன் இருந்தாலே கடினம். இங்கு நான் ஏற்கனவே கூறிய பாணாக்கம், மோர், சர்பத், நீர், தயிர்ச்சோறு போன்றவற்றுடன் ஐஸ்கிறீம் போன்றவற்றையும் அருந்த அடி வயிறு மேலும் நிரம்பும். ஆண்களில் சிலர் பின் வீதி அப்படி இப்படி என்று போவார்கள். பெண்கள் எங்கே போவார்கள். ஆத்தாக் கொடுமைக்கு ஒரு சிலர் சுற்றியுள்ள, எங்கள் வீடு உட்பட, வீடுகளுக்கு மிகவும் அடக்கமுடியவில்லை என்றால் செல்வார்கள்..
மிகவும் யதார்த்தமான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டிய ஒரு விடயம் இது.
நடைமுறைக்கு ஒவ்வாத பல விடயங்களை செய்கின்றோம். கேட்டால் காலம் மாறிப்போச்சு என்கின்றோம். ஆனால் இந்த அடிப்படை விடயத்தை ஆராயவே துணிவின்றியுள்ளோம்.
கோயில்களில் கழிப்பிடம் கூடாது என்பீர்கள் அனைவரும். சற்றுத்தள்ளி அமைக்க வேண்டியதுதானே. சந்நிதிகோயில் திருவிழாக் காலங்களில் கோயில் வளாகத்திற்கு அப்பால் தற்காலிக கழிப்பிடங்கள் அண்மைக் காலங்களாக வைக்கப்பட்டுவருகின்றன.
இதர நிகழ்வுகள்
திருவிழாவை விட இந்திரவிழா மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி அதிகாலை, காலை வரை நீடிக்கின்றது. பிரபாகரனின் ஊர் நோக்கி இலட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டார்கள் இந்திரவிழாவை பார்க்க என்றெல்லாம் செய்தி போட்ட்டுள்ளார்கள். அனைத்து லட்சம் பேருமா அடக்கிக் கொண்டு திரும்பிச் சென்றார்கள்?
இந்திரவிழாவை விட தற்பொழுது பட்டப்போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் இசை நிகழ்ச்சிகள். இந்த நிகழ்வும் பல மணி நேரங்கள் நீடிக்கின்றது. கழிப்பிடங்கள் தேவை என்பதை ஏன் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க தவறுகின்றார்கள் என்பது புரியவில்லை.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரும்போது அல்லது போகும்போது முருகண்டிப் பிள்ளையார் கோவிலடியில் பஸ் நிறுத்தப்பட்டவுடன் முதலில் நாம் எல்லோரும் எங்கு ஓடுகின்றோம்? இங்கு ஊரிலும் திருவிழா நிறைவின் பின்னர் வீடு திரும்பியதும் முதலில் எங்கு ஓடுகின்றோம்? ஏன்?
சந்தியில்
கோயில் பிரச்சனை வருடந்தோறும் இடம்பெறும் பிரச்சனை அல்ல. ஆனால் வல்வெட்டித்துறைச் சந்தியை எடுத்துக்கொள்ளுங்கள். சந்தியில் ஓரளவு கடைகள் கூடி விட்டது. முன்பு போல் சன நடமாட்டம் அதிகரிக்கத் தொடக்கிவிட்டது. பல அயற்கிராமங்களைச் சேர்ந்த பெண்பிள்ளைகள் இங்கு பணி புரிகின்றார்கள். சந்தியில் கழிப்பிடம் ஒன்று உண்டு என்பது பலருக்கும் தெரியாத விடயம். அதிவிட முக்கியமானது அதன் கொண்டிஷன்
ஒரு தேனீர் கடை, பனடோல் வாங்க ஒரு பலசருக்குக் கடை, நல்லவொரு கழிப்பிடம், போக்குவரத்துக்கான வசதி – இவை ஒரு நகரின் சந்தி ஒன்றைப் பொறுத்தவரை முக்கியமாக இருக்கவேண்டிய விடயங்கள்.
கழிப்பிடம் (தரமான மாபிள்கள் பதித்த, இலகுவாக சுத்தம் செய்யக் கூடிய) ஒன்றை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வாருங்கள். நீங்கள் தெரிந்தெடுத்த நகரசபை உறுப்பினர்களுக்குத் தெரிவியுங்கள்.
கழிப்பிடம் அமைப்பதற்கு பொதுமக்களின் நிதியும் தேவை என்றால் என் பங்கிற்கு நானும் ஒரு சிறு தொகையைத் தருகின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.