பிலிப்பைன்சுக்கு அடுத்ததாக மாலுமிகளை (Ratings) அதிகம் கொண்ட நாடாக விளங்கிவருகின்றது இந்தோனிசியா. நான் பணிபுரியும் கப்பல் நிறுவனத்திலும் கப்பல் ஒன்றில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து இந்தோனிசிய மாலுமிகள் எப்பொழுதும் என்னுடன் பணிபுரிவது வழக்கம்.
பல வருடங்களாக இந்தோனிசிய மாலுமிகளுடன் பணிபுரிந்து வருகின்றேன்.
இந்தோனிசிய மாலுமிகளிடம் “நீர் எந்த இடத்தைச் சார்ந்தவர்” என்று கேட்டால் நால்வரில் மூவர் கூறும் பதில் “மதுரா”.
மதுரா – இந்தோனிசியாவின் ஜாவாத்தீவுக்கு கிழக்காக பாலித்தீவுக்கு வடமேற்ககாக உள்ள ஒரு சிறிய தீவு. ‘மாலுமிகள் தீவு’ என்று கூறுமளவுக்கு கிட்டத்தட்ட மதுராவில் அனைவரும் மாலுமிகள் தான்.
‘மதுரா’ போல்தான் இங்கு தமிழர் பிரதேசத்தில் ‘வல்வெட்டித்துறை’ இன்று விளங்கியிருக்க வேண்டும். மதுரா போலன்றி ‘ஊர் முழுவதும் மாலுமிகள்’ என்று கூறுமளவுக்கு இல்லாவிட்டாலும் குறைந்தது ஊரின் மூன்றில் ஒரு பங்கினர் மாலுமிகளாக இருந்திருக்கவேண்டும்.
வரலாறு தெரிந்த காலத்திலிருந்து யாழைப் பொறுத்தவரை வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, தொண்டைமானாறு, ஊர்காவற்துறை, காங்கேசன்துறை, கச்சாய் போன்ற பகுதிகளில் கடல் வாணிபம் இடம்பெற்றிருந்தாலும், இவற்றுள் வல்வெட்டித்துறைதான் கொடிகட்டிப் பறந்திருந்தது என்பது பலரும் அறிந்த உண்மை.
இந்தியாவிலிருந்தான தபாற்சேவை வல்வெட்டித்துறையின் வாடி ஒழுங்கையூடாக உத்தியோகபூர்வமாக இடம்பெறும் அளவுக்கு கடலியலில் அந்தக்காலத்தில் வல்வை சிறப்பித்திருந்தது.
எனது பாட்டனார் ஒரு கடலோடி – கிட்டத்தட்ட 100 வருடங்கள். அன்றிலிருந்து இது தொடர்ந்திருந்தால் வல்வையும் இன்று ஒரு குட்டி மதுராபோல்தான் விளங்கியிருக்கவேண்டும். யாழ்பாணத்தில் GDP உயர்வாக உள்ள இடமாகவும் வல்வை விளங்கியிருக்கும்.
80 கள் வரை மாலுமிகள் வளர்ச்சி ஏறுமுகத்தில்தான் இருந்தது.
83 இல் ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் பலரை வெளிநாடுகளுக்கு இழுக்க, கப்பலில் பணிபுரிந்த எம்மவர் பலருக்கு, மிக இலகுவாக தாம்விரும்பிய நாடுகளுக்குச்சென்று அகதி அடைக்கலம் கேட்பதற்கு வாய்ப்பாக அமைந்தது கப்பற்தொழில். இவ்வாறாக சர்வதேசக் கப்பல்கள் மூலம் ஏராளமான வல்வையர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம்கோர, ஒருபக்கத்தில் வல்வையில் மாலுமிகள் எண்ணிக்கை குறைய, மறுபக்கத்தில் பலர் வேலைவாய்ப்பை இழக்கத்தொடங்கினர்.
வல்வையில் மாலுமிகள் எண்ணிக்கை மேலும் சரியத்தொடங்கியது.
வெளிநாடுகளுக்குச் செல்லவிரும்பாத சில மாலுமிகளையும் யுத்தசூழல் பயத்தில் கப்பலில் இருந்து பாய (Jump ship) நிர்ப்பந்திதது. இதைவிட கப்பலில் பணிபுரிந்த பலர் தமது உறவினர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளுக்கு கப்பல்கள் சென்றபோது, தமது உறவினர்களால் கப்பலில் இருந்து பாய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இது இன்றும் தொடர்கின்றது.
உள்நாட்டு யுத்தம் முடிந்தபின்னர், வல்வையர்கள் மத்தியில் கப்பல் தொழிலை மீண்டும் உயர்த்தும் நோக்குடன் எமது சீனியர்கள் பலர் முயற்சித்தார்கள். பலரிடம் இருந்து அபிப்பிராயமும் கேட்டார்கள்.
‘பாய்வதைத் தடுக்கவேண்டும், வெளிநாட்டு விருப்பம் உள்ள இளைஞர்கள் வேறாக இனம் காணப்பட்டு அவர்கள் இந்த வட்டத்துக்குள் வருவது தவிர்க்கப்படவேண்டும் – இதற்குப் பின்னர்தான் உருப்படியாக ஒன்றைச் செய்யமுடியும்’ என்று எனது கருத்தை முன்வைத்தேன்.
ஓட்டைப் பாத்திரத்துக்குள் எவ்வளவு நீர் ஊற்றினாலும் அது நிறையாது. ஓட்டையை அடைக்காமல் அதாவது பாய்வதைத் தடுக்காமல் இந்த முயற்சியை எடுப்பது - வீண் முயற்சி என்பது என் வாதமாகயிருந்தது.
வெளிநாடு செல்வது அவரவர் விருப்பம் என்று ஓரிருவர் என்னுடன் பலமாக வாதத்தில் ஈடுபட்டார்கள். உருப்படாத முயற்சி என்று ஒதுங்கிவிட்டேன்.
கப்பலால் இறங்கியவர்கள், இறங்கியவர்களால் வேலை இழந்தவர்கள் என்பது ஒரு புறமிருக்க, யுத்தம் ஏற்படுத்திய வெளிநாட்டு இடப்பெயர்வும் வல்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்த, அதுவும் இயல்பாகவே மாலுமிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
கப்பலுக்கு போனாலும் திரும்பவும் யுத்தசூழலுக்குத்தானே - அதுவும் 'வல்வெட்டித்துறை'க்குத் தானே வரவேண்டும் - என்று எண்ணி பாதையை மாற்றிய மாலுமிகளும் பலர்.
நான்கூட பிரச்சனை காலத்தில் விடுமுறையில் வரும்பொழுது பல கெடுபிடிகளுக்கு ஆளாகியிருக்கின்றேன். எனக்குத் தந்தையார் முழு பக்கபலமாக இருந்த காரணத்தால் ஒருவாறு கெடுபிடிகளுக்கு மத்தியில் என்னால் சமாளிக்க முடிந்திருந்தது. ஆகவே யுத்தகாலத்தில் கப்பல் தொழிலிருந்து பாதையை மாற்றியவர்களை குறைகூற முடியாது.
சமதான காலத்தில் ஒரு முறை ஊரில் நின்ற பொழுது, ரேவடியில் ஒரு இளைஞன் வந்து என்னிடம் கேட்டான், ‘அண்ணா பாய்கின்ற கப்பல் ஒன்றுக்கு என்னை அனுப்ப முடியுமா’ என்று. அதற்கு நான் ‘எனக்கு கப்பல் மட்டும்தான் தெரியும் பாய்கின்ற கப்பல்பற்றி தெரியாது’ என்றேன். வெளிநாடு செல்வதற்கு சிறந்தவொரு வழியாக ஊடகமாக இருந்தது - இருந்து வருகின்றது கப்பல். வல்வையர்கள் கப்பல் தொழிலில் எவ்வளவோ மேலாண்மை செலுத்துகின்றார்களோ அதேபோல் பாய்ந்ததிலும் பெருமையை தேடிக்கொண்டுள்ளனர்.
என்னைப்போல் சிலர் மற்றவர்களுக்கு உதவிசெய்ய சில வேலைகளில் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றாலும் பாய்வாரா மாட்டாரா என்பதை உறுதிப்படுத்த முடியாதநிலையில் உதவி செய்யத்தயங்கி வருகின்றார்கள். பலர் இந்த விடயத்தில் சூடும் பட்டிருகின்றார்கள்
வல்வையில் மாலுமிகள் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு விடயம் விடுதலைப்புலிகளின் ஸ்தாபகமும் வளர்ச்சியும். ஆரம்பத்தில் ஏராளாமானோரும் தொடர்ந்து குறிப்பிடக் கூடியவளவானோருமாக பல இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்தார்கள்.
வல்வையில் மாலுமிகள் வளர்ச்சியில் இது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கடற்புலிகளின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் வல்வை இளைஞர்களின் பங்கு மிகப்பெரிது என்று பரவலாகப் பேசப்பட்டிருந்தது.
இதைவிட விடுதலைப்புலிகளின் சர்வதேசக் கப்பல்களிலும் பணி புரிந்தவர்களில் பெரும்பாலானோர் வல்வெட்டித்துறைச் சேர்ந்தவர்கள்தான் எனக்கூறப்பட்டது. மிகவும் ரகசியமாக இந்த விடயமும் விடுதலைப்புலிகளால் பேணப்பட்டு வந்ததால் இதன் உண்மைபற்றி உறுதிபடக்கூறமுடியாது.
ஆனாலும் சமாதான காலத்தில், வங்காள விரிகுடா கடற்பகுதியில் விடுதலைப்புலிகள் இழந்த இரு கப்பல்களிலும் பணிபுரிந்த புலிகள் இயக்க மாலுமிகளில் பெரும்பாலானோர் வல்வெட்டித்துறைச் சேர்ந்தவர்கள் என்பது, விடுதலைப்புலிகளால் அப்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கைகளில் தெளிவாகத் தெரிந்திருந்தது.
இவ்வாறாக வல்வை இளைஞர்களும் கப்பல் தொழிலும் எவ்வாறாகவோ ஒன்றிணைந்துள்ளது.
வியக்கவைக்கும் விடயம் இன்றும் பல வல்வை இளைஞர்கள் கப்பலில் சேர்வதற்கு அடிப்படையான CDC யை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். எப்படியோ கப்பல்களுக்கும் இவர்கள் சென்றுகொண்டுதான் இருகின்றார்கள். இதற்குள் ஏராளமான வலிகளும் வேதனைகளும் இழப்புக்களும் அவர்களுக்குள் இருக்கின்றது என்பது வேறு.
ஆனாலும் இருக்கவேண்டிய வளர்ச்சி இல்லையே என்பதையிட்டு அடிக்கடி வேதனைப்படுவேன். நான் பணி புரியும் கப்பல்நிறுவனத்தில் அதிக வருடங்கள் சேவையில் உள்ள நான்கு கப்டன்கள் இருந்தோம் – நால்வரும் வல்வெட்டித்துறைச் சார்ந்தவர்கள்.
எம்மவர்களை தற்போதைய கப்பற்துறையில் குறிப்பாக அதிகாரிகள் தர ஆரம்பநிலைகளில் (Cadets) இருந்து தள்ளிவைக்கும் விடயம் ஆங்கிலம். நேர்காணல் ஆங்கிலத்தில், கற்கை நெறியும் ஆங்கிலத்தில். ஊரில் எத்தனைபேர் அவ்வாறு ஆங்கிலத்துடன் தயாராகவுள்ளார்கள். இதைவிட க.பொ.த (உ/த) இல் கணிதத்தில் மூன்று பாடங்களில் சித்தி. தெரிந்த ஒரு சிலரை கணிதம் படி என்றேன். வர்த்தகம் தான் படித்தார்கள்.
முன்னரைப் போலன்றி, எந்தவொரு தர மாலுமியாகவும், CDC யைப் பெற தற்பொழுது ஆங்கில பாடத்தில் க.பொ.த (சா/த) இல் சித்தி அவசியம். அத்துடன் க.பொ.த (சா/த) இல் ஆறு பாடங்களில் சித்தி. சிலவருடங்கள் முன்பே இலங்கை முழுவதற்கும் கொண்டு வரப்பட்ட இந்த விதியை, வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு மட்டும் கடந்தவருடம் வரை விதிகளுக்கு மாறாக தளர்த்தி வைத்திருந்தது இலங்கை அரசு. பலர் - குறிப்பாக வல்வையைச் சேர்ந்த பலர் இதனால் பயன் அடைந்தார்கள். கடலியல் செய்திகள் பொதுவாக பத்திரிகைகளில் இடம்பிடிப்பதில்லை. இந்த நற்செய்தியும் எந்தவொரு தமிழ் பத்திரிகையிலும் வந்ததாகத் தெரியவில்லை.
மற்றவொரு சாதகமற்ற விடயம், இலங்கையில் உள்ள சகல கடலியல் கல்லூரிகள் பெரும்பான்மையினரால் நிர்வகிக்கப்படுவது.
கடலியற்துறையில் துவேசம் என்பது பெரிதாகக் காணப்படாத ஒன்று எனினும், ஆங்கில மொழியில் புலமை, க.பொ.த (சா/த) க.பொ.த (சா/த) பாடச் சித்திகள் மற்றும் கடலியல் கல்லூரிகள் அமைவிடம் போன்றன நம்மவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.
தற்பொழுதும் வல்வை மாலுமிகள் பலர், பல சிறிய மற்றும் பெரிய கப்பல் நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணிபுரிகின்றார்கள். என்னோடும் சிலர் பணிபுரிந்துள்ளார்கள். நான் கேட்டதும், கண்ணால் கண்டதும் ஒன்றுதான் – இவர்கள் சராசரிக்குமேல் மற்றவர்களைவிட திறமையானவர்கள்.
இலங்கையில், ஒரு ஊரின் பெயரில் மாலுமிகள் சங்கம் என்று ஒன்று இருப்பது வல்வையில் மட்டும் தான் – ‘வல்வை மாலுமிகள் சங்கம்’. பெரிதாக இதன் மதிப்பு பலருக்குத் தெரியாவிட்டாலும், நாம் எல்லோரும் மிகப்பெருமைப்பட வேண்டிய விடயம் இது.
தென்னிலங்கையில் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த மாலுமி ஒருவரிடம், ‘நாம் ஒரு மாலுமி’ என்றால், பெரும்பாலும் உடனடியாக அவர்கள் கேட்பது இது தான் - ‘நீர் வல்வெட்டித்துறையா? !!!!!
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Capt.I.Thurailingam (UK)
Posted Date: May 20, 2018 at 13:18
கப்டன் ஆதவன்,
உங்கள் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. சிறிய கட்டுரையில் வல்வையின் திறமான மாலுமிகள் பற்றி நன்றாகச் சித்தரித்துள்ளீர்கள்.
ஒரு முறை எனது பேத்தியார் ஒரு கதை கூறினார். ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் தாங்கள் துப்பரவாக தேனீர் அருந்துவது கிடையாது. தேனீர் என்றால் என்னவென்றே தெரியாத எங்களுக்கு ஆங்கிலேயர் மாதக்கணக்காக வல்வை போன்ற ஊர்களுக்கு கிரமமாக வருகை தந்து எப்படி தேனீர் பழக்கத்தை புகட்டினார்கள் என்ற கதை அது.
எங்கள் ஊர் மக்கள் வலிமையானவர்கள் திறமையானவர்கள். ஆங்கிலேயர் எங்களுக்கு தேனீர் அருந்தப்பழக்க முடியுமாயின் ஏன் எங்கள் ஊர்ப் பெரியவர்களினால எங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்ற நடவடிக்கை எடுக்க முடியாது.
ஆங்கிலம் கற்பது தமிழை மறப்பதற்காக அல்ல. வேலை வாய்ப்புக்கு இலங்கையில் தங்கியிராது வெளிநாடுகளில் (கப்பல் தொழில் போன்ற) எல்லாத் தொழில்களுக்கும் ஆங்கிலம் தேவை. இன்ரநெற் படிக்கத் தெரிந்தால் உலகம் தெரிந்தது போல!
ஊர்ப் பெரியவர்கள் அனைவரும் அதை நினைக்க வேண்டும் (ஆங்கிலேயர் நினைத்தது போன்று). அவர்கள் நினைத்தால் கட்டாயம் நடக்கும். அவர்கள் நினைப்பார்களா?
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: May 20, 2018 at 03:15
வலிநிறைந்த சிறந்த பதிவு ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.