ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று, இங்கு தமிழர் தாயகப் பகுதிகளைப் பொறுத்தவரை, ஒரு ஊரில் காலை முதல் இரவுவரை தைப்பொங்கல் சிறப்பிக்கப்படுவது வல்வையில்தான் என்றால் அது மிகையாகாது.
தமிழர் பண்பாட்டையும் மரபையும் விளக்கும் வகையில் வல்வை சந்தியில், வல்வெட்டித்துறை கலை இலக்கிய கலாச்சார மன்றத்தினரால் பொங்கப்படும் பொங்கல். தமிழர்களின் உடையாம் வேட்டியுடன், மாவிலை தோரணங்கள் கும்பங்களுடன், தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களான மாடு, மாட்டு வண்டில்கள் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் இதர சோடனைகள் போன்றவற்றுடன் காலையில், சந்தியில் பொங்கும் பொங்கல் முதலாவது நிகழ்வாக ஆரம்பமாகின்றது.
இரண்டாவதாக தமிழர் கைவண்ணத்தை வானில் கொண்டுசெல்லும் பட்டக் கலைஞர்களின் கலை வடிவங்கள். கலைஞர்களில் ஓரிருவரைத் தவிர ஏனைய அனைவரும் வல்வையைச் சேர்ந்தவர்கள் என்பது சிறப்பு. 93 இல் வல்வை சனசமூக சேவா நிலையத்தால் வல்வை ரேவடி கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்ட பட்டப்போட்டி, பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தபட, கடந்த 7 வருடங்களாக படிப்படியாக இதனை சிறப்புற வளர்த்து வருகின்றனர் வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையத்தினர்.
பட்டப்போட்டியின் சிறப்புபற்றி இங்கு நான் எழுதுவதில் அர்த்தமில்லை, ஏனெனில் நீங்கள் யாவரும் இதன் சிறப்புப்பற்றி அறிந்துள்ளீர்கள். எழுத்தாளர்கள் திரு.சிவரத்தினம் மற்றும் திரு.அப்பாதுரை ஆகியோர் ஏற்கனவே பட்டப் போட்டியின் சிறப்புப்பற்றிய ஆக்கங்களை இதே இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
மூன்றாவதாக ஆனால் முக்கியமானதான அதாவது தைப்பொங்கல் தினத்தை அடையாளப்படுத்தி நிறைவுசெய்துவைக்கும் நிகழ்வு - ஊர் முழுதும் விநாயக முகூர்த்தங்கள் (சாணி அல்லது மஞ்சள் கொண்டு மார்கழி மாதத்தில் வீடுகள் தோறும் வைக்கப்படும் பிள்ளையார்) சேகரிப்பு, அதுவும் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பொம்மல்லட்டத்துடன் கூடிய நிகழ்வாகும்.
இங்கு குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், முதல் இரண்டு நிகழ்வுகளும் கடந்த ஏழு வருடங்களாகத்தான் இடம்பெற்றுவருகின்றது. ஆனால் விநாயக முகூர்த்தங்கள் சேகரிப்பு என்பது கடந்த பல ஆண்டுகளாக இடம்பெற்றுவருகின்றது.
இந்த நிகழ்வை நடாத்திவரும் வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த நிகழ்வையும் தொடர்ந்து மெருகேற்றிவருகின்றார்கள்.
ஆனால் அண்மைக் காலங்களில் எம்மில் எத்தனை பேர் இந்த முக்கிய சமய பண்பாட்டு நிகழ்வை நின்று நிதானமாக பார்த்துள்ளோம். பலர் பார்த்திருக்கலாம், சிலர் விநாயக முகூர்த்தங்களைப் போட்டிருக்கலாம். ஆனால் நின்று நிதானமாகவா? நிதானமாக எத்தனை பேர் இதனை பார்த்துள்ளார்கள். எத்தனை குழந்தைகளுக்கு இந்த நிகழ்வு காட்டப்பட்டுள்ளது, விளங்கப்படுத்தப்பட்டுள்ளது?
பல இன, சமய பண்பாடுகள் மழுங்கடிக்கப்படுவது போல், மறைந்துவருவது போல், இந்த நிகழ்வும் எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம்.
வீதிகளில் விநாயக முகூர்த்தங்களைப் போடுவது என்பது எதிர்காலத்தில் மருவி ஒன்று இரண்டானால், விநாயக முகூர்த்தங்களை சேகரிக்க எனக் கூறிக்கொண்டு யார் வீதி வழியாக வரப்போகின்றார்கள்?
வல்வையில் இந்த நிகழ்வு தற்பொழுது மழுங்கடிக்ப்பட்டு வருவதற்கு முக்கிய காரணம், பட்டப் போட்டியைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இசை நிகழ்ச்சி தான். விநாயக முகூர்த்தங்கள் சேகரிப்பும், குறித்த இசை நிகழ்ச்சியும் ஏக காலத்தில் இடம்பெறுகின்றன. இது ஒன்றும் உள்நோக்கத்துடன் நடாத்தப்படவில்லை, மாறாக மக்களை மகிழ்விக்கத்தான் நடாத்தப்படுகின்றது என்பதில் ஐயத்துக்கு இடமில்லை.
ஊரைவிட எம்மவர்கள் நாட்டின் இதர பகுதிகள், தலை நகர் கொழும்பு, தமிழகம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் வாழ்கிறார்கள். ஊரில் உள்ளவர்களை விட பிற இடங்களில் வாழ்பவர்களுக்கு பல களியாட்டங்களை அனுபவிக்க வாய்ப்பு. ஆகவே இங்கு ஊரில் நிகழும் ஓரிரு களியாட்டங்களை பலரும் தவற விரும்புவதில்லை. இது யாதர்த்தமான விடயமும் கூட.
அதுவும் தமிழக தொலைக்காட்சி மற்றும் சினிமா சார்ந்த விடயங்களில் எம்மில் பலர் அளவுக்கு அதிகமாகவே உள்வாங்கப்பட்டுள்ளார்கள். 2009 பின் கிட்டத்தட்ட மைத்திரி ஜனாதிபதியாக வருவரை இங்கு இது போன்ற நிகழ்சிகளுக்கு வாப்பில்லாமல், கடந்த சில வருடங்களாகத்தான் இவை இடம்பெற்றுவருவதால், இவற்றைக் கண்டுகளிக்க பலர் நாடுவதும் இயற்கையே.
கிராக்கியான ஒன்றுக்கு நாட்டம் அதிகம் என்பார்கள்.
இதற்கு என் மனதைத்தொட்ட உதாரணம் ஒன்றைக் கூறுகின்றேன்.
வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், ஒமந்தை ஊடாக கட்டுப்படுத்தப்பட்டளவில் வவுனியாவிற்கு பயணம் அனுமதிக்கப்பட்டிருந்தது.
குறித்த ஓமந்தை – தாண்டிக்குளம் ஊடான (No Man land) பயணம் என்பது ஹோலிவூட் இராணுவ சண்டைப் படங்களில் வருவது போல் தான். வயதானவர், நோய்காரர் என்றாலும் ஓடித்தான் செல்லவேண்டும்.... என்று பெரிய கதை.
எனது உறவினர் ஒருவர் (வயதானவர், பெண்மணி) அப்பொழுது ஒரு முறை வவுனியா வந்து, வன்னியில் இல்லாத சில பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளார். அவர் வாங்கிய (சில) பொருட்களில், நான்கு கொக்க கோலாக்கள் (பெரிய போத்தல்கள்) அடக்கம் !!!
இதில் தவறில்லை.
இது போல்தான் இசைநிகழ்ச்சி மேல் பலருக்கு தற்பொழுது நாட்டம் உள்ளது எனலாம்.
இசை நிகழ்ச்சி தரமானதா? வீரம் விளைந்த மண்ணில் இவை போன்றவை தேவையா? என்பது எனது இந்தப் பத்திக்குச் சம்பந்தமில்லாத விடயம்.
நடாத்த விரும்புவதும், நாடிச் செல்வதும் உங்களில் பலர் சார்ந்த விடயம்.
ஆனால் தைப்பொங்கல் தினத்தன்று இதை நடத்துவது மிகவும் தவறு என்பது எனது தாழ்மையான கருத்து. காரணம் ஏற்கனவே பல மணித்தியாலங்கள் பகலில் பட்டப்போட்டியில் தமது நேரத்தைச் செலவிட்ட மக்கள், மீண்டும் இரவும் தமது நேரத்தினை இங்கு செலவழிக்கின்றார்கள். விநாயக முகூர்த்தங்கள் சேகரிப்பும் அதனுடன் கூடிய பொம்மலாட்டமும் அடிபட்டுக்கொண்டுவருகின்றது.
எதிர்காலத்தில் இதன் முற்றான மழுங்கடிப்புக்கு இந்த நிகழ்ச்சியே காரணம் ஆகிவிடும். இசை நிகழ்ச்சியால் அவசரமாகப் பிள்ளையார் போட்டோர் சிலர், ‘பிள்ளையார் எடுக்க வாறாங்களாம்’ என்று ஓடியோர் சிலர், அவர்களில் பிள்ளையார் போட தவறவிட்டவர்கள் சிலர், ‘அடப்பரவாயில்லை அது போகட்டும் நாங்களே கடலில் கொண்டே நாளைக்கு போடுவம்’ என்று இசை நிகழ்ச்சியுடன் ஒன்றியோர் இன்னும் சிலர்.
இதை விட இன்னொமொரு விடயம்.
பாடப் புத்தகத்தில் தைப்பொங்கல் பற்றி, காலையில் புத்தாடை உடுத்தி................ என ஆரம்பித்து மாலையில் பலகாரங்கள் உண்டு, உறவினர் வீடு சென்று, பெரியவர்களிடம் கை விசேடம் வாங்கி........ என்றெல்லாம் முடிகின்றது. இவையும் அடியோடு அழிந்துவிடும்.
சிறுவயதில் உறவினர் வீடு சென்று, ரூபா கை விசேடங்கள் வாங்கியதும், இரவு நேரத்தில் சாணிப்பிள்ளையாரை எடுத்துப்போட்டதும் உங்களில் பலருக்கும் இன்றும் என்னைப்போன்று சந்தோசமான ஞாபகங்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எனது மகள்களும் அவர்கள் எதிர்காலத்தில் தைப்பொங்கல் தினத்தில் உறவினர் வீடு சென்றது, மஞ்சள் பிள்ளையார் எடுத்துக்போட்டது, பொம்மலாட்டம் பார்த்தது போன்ற தமிழர் பண்பாடுகளைத்தான் தமது ஞாபகத்தில் கொள்ளவேண்டும் என நான் விரும்புகின்றேன்.
டிரென்ட் மாறிப்போச்சு என சிலர் வாதிடலாம்.
மக்கள் தொகையில் முதலிடம், வளர்ந்த நாடுகளை ஒத்த கட்டுமானம், எங்களைப் போன்ற பல வறிய நாடுகளுக்கு அள்ளித் தெளிக்கக் கூடிய வல்லமை என உலகின் வல்லரசாக வரத்துடிக்கும் சீனாவில் மக்கள் எல்லாம் புதுயுகத்துக்கு மாறிவிட்டார்கள்.
ஆனாலும் வருடந்தோறும் இடம்பெறும் சீனப்புத்தாண்டு கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி தொடக்கி ஒருவாரம் நீடித்தது. சன நெருக்கடியால் உண்மையிலேயே மூச்சுவிடத்திணறும் சீனாவின் சகல பிரமாண்ட்ட நகரங்களும் குறித்த இந்தப் புத்தாண்டு காலத்தின்போது வழமைபோல் வெறிச்சோடியது. காரணம் அனைவரும் தமது சொந்தக் கிராமங்களுக் சென்றுவிட்டார்கள்.
என்னுடன் தற்பொழுது பல சீன நாட்டுக்காரர் பணிபுரிகின்றார்கள். ‘கிராமத்திற்குப் போய் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டேன். ‘குடும்பமாக ஒன்று கூடி, நடைமுறையில் இருந்துவரும் பழைய பண்பாட்டு நிகழ்வுகளை மறக்காமல் தொடர்கின்றோம்’ என்கிறார்கள் எல்லோரும் ஒருமித்த குரலில்.
இதேபோல் தமிழர்கள் பண்பாடுகள், காலாச்சார விழுமியங்கள் நடைமுறையில் பேணிப்பாதுக்காக்கப்படவேண்டும், பேச்சளவில் மட்டுமல்ல. அழியவிட்டால் அவற்றை மீட்டெடுப்பது என்பது சாத்தியமல்லாத ஒன்றாகிவிடும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 10, 2018 at 07:57
சிறப்பு நாம் சிறுவர்களாக இருந்தபோது தைபொங்கல் அன்று வல்வை சந்தியில் போர்த்தேங்காய் உடைத்தல் போட்டிகள் நடைபெறும் தற்போது அது நடைபெறுவதாக தெரியவில்லை . தமிழர்களுக்கான கலைகலாச்சாரம் மட்டும் அல்ல தமிழர்களின் மருத்துவம் விளையாட்டு இன்னும் பல மறக்கடிக்கபட்டுள்ளது அல்லது திட்டமிட்டு சிதைக்கபட்டுள்ளது .ஒன்று தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.