உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் வெளியீட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2018 (திங்கட்கிழமை)
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆசிரியர் கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் கடந்த 16 ஆம் திகதி ஞாயிறன்று மாலை மூன்று மணியளவில் வடக்கு மாகாண முதல்வர் திரு. சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
நூல் வெளியீட்டு முயற்சிகளில் இந்த நூல் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டிருந்தது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள உதைபந்தாட்ட வீரர்களையும், பாடசாலை மாணவர்களையும் சிந்தனை ரீதியாக சர்வதேச தரத்திற்கு மேலுயர்த்தும் நோக்குடன் எழுதப்பட்ட இந்த நூலின் வெளியீட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர்கள் உட்பட அகில இலங்கை அணியில் விளையாடும் வீரர்கள் வரை பெரும் எண்ணிக்கையில் விளையாட்டு வீரர்களால் நிறைந்திருந்தது.
விளையாட்டுத்துறைக்கான யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வடக்கு மாகாணத்தில் உதைபந்தாட்ட விற்பனர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் முன்னாள் அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் றஞ்சித் றொட்றிக்கோ, அகில இலங்கை பிரதி உதைபந்தாட்ட தலைவர் திரு. அ. அருளானந்தசோதி வரை இந்த அணி வியாபகம் பெற்றிருந்தது.
மறுபுறம் சிங்கப்பூர், தமிழகம், டென்மார்க் நாடுகளில் இருந்தும் பேச்சாளர்கள், உதைபந்தாட்ட ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்புரைகளை வழங்கியதால் புத்தகத்தின் உள்ளடக்கம் மட்டுமல்ல நிகழ்ச்சியும் சர்வதேசத்தன்மை கொண்டதாக இருந்தது. அத்தோடு நடன நிகழ்வுகள், வாழ்த்துப் பாடல்கள் என்று விழா கலைத்தன்மை நிறைந்ததாகவும் இருந்தது.
இன்றுள்ள நிலையில் இளைஞர்களை சாதனை மயப்படுத்தி அவர்களை தன்னம்பிக்கை வழியில் இட்டுச் செல்வதற்கான முயற்சிகள் அவசியம் அதற்கு இது போன்ற படைப்புக்கள் உதவுகின்றன என்று முதல்வர் வலியுறுத்தியதுடன் ஆசிரியரின் முயற்சியை வரவேற்றார்.
நூலசிரியரின் இதற்கு முந்தைய நூலான 'கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா 'என்ற நூலை வெளியீட்டுக்காக எடுத்துச் சென்ற வேளை சாலை விபத்தில் மரணித்த தமிழர் நடுத்தின் தலைவர் செல்வா பாண்டியரின் உருப்படத்தை முதல்வர் திறந்து வைத்தமை உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட கருத்துக்களில் முக்கியமானவை நூலின் எழுத்து முறை, அதன் நடை, விறுவிறுப்பான போக்கு, தகவல்களில் புதுமை போன்ற பல்வேறுபட்ட கோணங்களில் பலராலும் சிலாகித்து பேசப்பட்டன.
விழாவில் சிங்கள மொழியில் உரையாற்றிய றஞ்சித் றொட்றிக்கோ அவர்கள் சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் இது போன்ற புத்தகங்கள் அதிகம் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில் தமிழ் மொழியில் இப்படியொரு முயற்சி முன்னெடுக்கப்படுவது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றார்.
தமிழகத்தில் இருந்து வந்த பேச்சாளர்களும், சிங்கப்பூர் பேச்சாளர்களும், தாயக விமர்சகர்களும் தத்தமது கோணத்தில் பார்வைகளை பதிவு செய்தனர். இது ஒரு தன்னம்பிக்கை நூல் என்றும் வெற்றிப்பயணத்திற்கான வழிகாட்டி நூல் என்றும் இரு கோணத்தில் இவர்களுடைய கருத்துக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. டென்மார்க்கில் இருந்து அரசியல் செயற்பாட்டாளர் தர்மா தர்மகுலசிங்கம் நூலசிரியரை பற்றிய தகவல்களை எழுத்துரைத்தார்.
இந்த நூலானது நூல்களை எழுதும் பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி உதைபந்தாட்டத்தில் உலகத்தில் ஒருவர் என்ற தங்கப்பந்து விருதைப்பெற்ற பத்துப்பேரை தேர்வு செய்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நூலாக மட்டும் இது அமைவு பெறவில்லை.
மேதைகளின் விளையாட்டு முறைகளையும், அவர்கள் ஆட்டங்களில் பெற்ற வெற்றிகளையும் சோதனைகளையும் விபரித்து உலகப்புகழடைய என்ன தகுதி வேண்டும், எங்கிருந்து அவற்றை பெற வேண்டும் என்ற கோணத்தில் ஆய்வு செய்து, இன்றைய பரபரப்பு வாழ்வில் தேடிப் பெற முடியாத ஏராளம் தகவல்களை சுவைபட தொகுத்து முற்றிலும் புதிய கோணத்தில் தந்திருப்பதாக பலரும் பாராட்டினார்கள்.
வரும் வாரங்களில் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் இதன் வெளியீடுகள் நடைபெற இருப்பதாக அந்தந்த நாடுகளின் பேச்சாளர்கள் தெரிவித்தனர். நூலாசிரியரின் புது மாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து நூல் எழுத்துலக வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம் என்று கூறிய தமிழக பேச்சளர்கள் அதைத் தொடர்ந்து அவருடைய எழுத்துக்களை தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் அறிமுகம் செய்யும் பணிகளை தாம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாகவும் கூறினார்கள்.
நூலை வெளியிட்டதில் இருந்து பிரதி பார்த்தது வரை பணியாற்றிய செல்லப்பாண்டியன், நாகேஷ் முத்து பாண்டியர், தங்கராஜ் பாண்டியர் ஆகிய மூவரும் தமது அனுபவங்களை ஆசிரியரின் பல நூல்களில் இருந்தும் தேர்வு செய்து உதாரணம் காட்டி பேசினர்.
தாயக உதைபந்தாட்ட வீரர்களை தெற்கு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடும் இந்த நிகழ்வில் இணைக்கப்பட்டிருந்தது. இதற்காக சிங்கப்பூர் முதல் தமிழகம் வரை பல்வேறு தொழில் குழுமங்களின் அதிபர்களாக இருப்போரும் சமூகமளித்திருந்தனர்.
தொடர்ந்து வெளியீட்டு உரையினை கவிஞர் யோ. புரட்சி நிகழ்த்தினார். அத்தருணம் இது போன்ற புத்தகங்களுக்கு மிகப்பெரிய தேவை இருப்பதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். அத்தருணம் வல்வை எப்.சி வீரர்களை பாராட்டி முதல்வர் வெற்றிக் கேடயங்களை வழங்கினார். கூடவே அரங்கில் சமூகமளித்திருந்த அத்னை பேருக்கும் முதல்வர் கரங்களால் நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.
வெளியீட்டன்றே 500 பிரதிகளும் தீர்ந்து போனதால் இலங்கை முழுவதிற்குமான பாடசாலைகள் நூல் நிலையங்களுக்காக மேலும் 10.000 பிரதிகளை அச்சிட இருப்பதாக இலங்கைக்கான ரியூப்தமிழ் பிரதிநிதி தெரிவித்தார். இதற்கான பணிகள் இன்று ஆரம்பித்துள்ளன.
விழாவின் ஏற்புரையை வழங்கிய நூலாசிரியர் கி.செ.துரை, இந்த அரங்கில் தமிழகத்தை சேர்ந்த தோழர் செல்வா பாண்டியரின் உருவப்படம் திறக்கப்பட்டது எதற்காக என்ற விளக்கத்தை வழங்கினார்.
ஈழத் தமிழர் எழுதிய எழுத்துக்களை தமிழகத்தில் அறிமுகம் செய்ய போராடியவர் தோழர் செல்வா பாண்டியர். ஈழத் தமிழன் ஒருவன் எழுதிய நூலை கையில் ஏந்தியபடியே தன் இரத்தத்தால் அந்த நூலை குளிப்பாட்டி மரணித்த முதல் பெரும் தமிழர். ஈழத்தின் இலக்கியத்திற்காக உயிர் கொடுத்த வரலாற்று பதிவை ஏற்படுத்தியவர் செல்வா பாண்டியர். இது சாதாரண சம்பவமல்ல 2000 ஆண்டு தமிழிலக்கிய வரலாற்றில் காணப்படாத பதியப்பட வேண்டிய நிகழ்வு. இத்தகைய பெரு மனிதரான அவர் இந்த அரங்கில் முதல்வரால் நினைவுகூரப்படுவது மிகப்பெரிய விடயம் தமிழ் இலக்கிய வரலாற்றின் அசாதாரண சம்பவம்.
மேலும் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு இத்தனை பெருந்தொகையான மக்கள் கூடியிருக்கிறார்கள் என்றால் நமது வாசிப்பு மோகம் வளரத்தொடங்கிவிட்டது என்பதே கருத்தாகும். கோடிக்கணக்கான மக்கள் உள்ள தமிழகத்திலேயே ஐம்பது பேருக்கு மேல் நூல் வெளியீட்டு விழாக்களில் காண முடிவதில்லை. ஆனால் இன்றோ வீரசிங்கம் மண்டபமே நிறைந்து கிடக்கிறதென்றால் இந்த மண்ணில் ஒரு மாற்றம் தொடங்கிவிட்டது என்ற நம்பிக்கையை அது தருகிறது.
நூலாய்வுரை செய்த துணுக்காய் பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் திரு.க.றிஜிபன் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி நீண்ட உரையை வழங்கியிருந்தார். நூலை முழுமையாக படித்து ஆற்றிய தரமான விமர்சனம் இதுவென்று றஜிபனை நூலாசிரியர் போற்றினார். இத்தகைய சிறந்த விமர்சகர்கள் நம்மிடையே வாழ்வதே இன்றும் எமது படைப்பிலக்கியத்தின் பலம் என்பதையும் அவர் சுட்டிக்காட்ட தவறவில்லை.
நிறைவாக வல்வை எப்.சி. அணியினர் என்.ஈ.பி.எல் ஆட்டத்தில் தாம் பெற்ற 15 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையுடன் அரங்கில் தோன்றி நூலாசிரியருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிறைவாக யு.எஸ் கோட்டலில் இடம் பெற்ற விருந்துபசாரத்தில் தாயக அணியை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயிற்சி ஆட்டத்திற்கு அழைத்துச் செல்லும் சிறப்பு ஏற்பாடு ஒன்றை சர்தேச தொழில் அதிபர்களுடன் இணைந்து முன்னெடுப்பதாக உடன்பாடு காணப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்டு சிறை மீண்ட முன்னாள் போராளி அக்னிச்சிறகுகள் அரவிந்தனை விழா தலைவராக்கி அதற்கு ஒரு புதிய பரிமாணம் கொடுக்கப்பட்டதையும் கூடவே காண முடிந்தது. அக்னிச்சிறகுகள் நடத்த ரியூப்தமிழ் அனுசரணை வழங்கியிருந்தது.
இதற்கிடையில் மாதம் ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் அடுத்த மாதம் கி.செ.துரையின் கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற சர்வதேச விவகார இராஜதந்திர நூல் இலங்கையில் வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்புடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. நிகழ்ச்சி முழுவதும் இணைய வழி ஒளிபரப்பானது.
நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தோர் : கவிஞர் யாழ். சபேசன், திரு. இரா.இராஜேஸ்வரன் எப்.எம்.ஈ ஊடகக் கல்லூரி வவுனியா, திருமதி பிரியமாதா பயஸ் ஊடகவியலாளர், திரு. மாணிக்கம் ஜெகன் தமிழ் விருட்சம் வவுனியா, செல்வி அ. பானுஷா ரியூப்தமிழ் எப்.எம், திரு. ர.ராகுலன் ரியூப்தமிழ் எப்.எம் ஆகியோர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : யோ. புரட்சி, மண்டப அமைப்பு வீரசிங்கம் மண்டபம் கண்ணன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.