பிரபாகரன், கருணாநிதி, வைகோ, சீமான்.. : மனம் திறந்து பேசுகிறார் பி.பி.சி. ஆனந்தி
சில வருடங்களுக்கு முன்பு… இலங்கையின் ஈழப்பகுதி முழுதுமே யுத்தகளமாய் கனன்று கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணம் உள்ளிட்ட எந்த தமிழ்ப்பகுதிகளிலும் மின்சாரம் அறவே கிடையாது. பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழல்.
இரவு நேரம். ஒரு பெண்மணி, தனது தையல் எந்திரத்தை காலால் மெல்ல ஓட்ட ஆரம்பிக்கிறார். தையல் எந்திரத்தின் சக்கரத்துடன் ஒரு டைனமோ இணைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு ஒயர், சிறிய டிரான்ஸிஸ்டர் ரேடியோவுக்குச் செல்கிறது.
தையல் எந்திரம் மிதிக்கப்பட… அந்த டிரான்ஸிஸ்டர் உயிர் பெறுகிறது. அதில் ஒலிக்கும் செய்திகளை உன்னிப்பாக கவனிக்கிறார்கள் அந்த பெண்மணியும், அவரது குடும்பத்தினரும்.
அதில் ஒலித்தது.. லண்டன் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சி!
அதே போல, சைக்கிளை நிறுத்தி அதை மிதித்து ஓடவிட்டு அதன் டைனமோ சக்தியில் டிரான்ஸிஸ்டரை உயிர்ப்பித்து, தமிழோசை நிகழ்ச்சிகளை கேட்டார்கள் ஈழ மக்கள்.
அவர்கள் மட்டுமல்ல.. உலகின் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களும் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சிக்காக தவமிருப்பார்கள்.
காரணம், இப்போது போல அப்போது ஊடகத்துறை வளர்ச்சி பெறாத காலம். தமிழோசை நிகழ்ச்சிதான் ஈழத்தின் கள நிலவரத்தை எடுத்துரைத்தது. அதில் பெரும்பங்குபணி ஆற்றியவர் ஆனந்தி.
தமிழோசை நேயர்களால் “ஆனந்தி அக்கா” என்று அன்போடு அழைக்கப்படும் இவர்தான், பலவித தடைகளை மீறி முதன் முதலில் பிரபாகரனை சந்தித்து பேட்டி கண்டவர்.
பிரபாகரனின் குரலை ஆகப்பெரும்பாலோர் முதன்முதலாக கேட்டது அப்போதுதான்.
யுத்த பூமியாய் ஈழம் தகித்துக்கொண்டிருந்த காலத்தில் மூன்று முறை அங்கு சென்று சென்று கள ஆய்வு செய்து வெளி உலகுக்கு அறிவித்தவர் ஆனந்தி.
சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை சந்தித்து பேசினோம். சற்று இடைவெளி விட்டு வந்திருப்பதால், பல நண்பர்களை சந்திக்க வேண்டிய நிலை, தனிப்பட்ட நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்தவரிடம்சில கேள்விகளை முன்வைத்தோம்.
லண்டன் பி.பி.சியில் உங்களுக்கு பணி கிடைத்தது எப்படி?
கொழும்பில் பட்டப்படிப்பு முடித்த நான், மேற்படிப்புக்காக 1970களின் துவக்கத்தில் லண்டன் வந்தேன். ஏற்கெனவே கொழும்பில், பகுதி நேரமாக இலங்கை வானொலியில் பணியாற்றியிருந்தேன். அந்த அனுபவத்தில், லண்டன் பி.பி.சி. தமிழோசையில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் ப்ரீலேன்சராக இருந்தேன். பிறகு நிரந்தபணி கிடைத்தது. 2007ம் ஆண்டுவரை அங்கு பணி புரிந்தேன்.
உங்கள் குரல் இனிமையோடு, தெளிவான தமிழ் உச்சரிப்புக்காகவும் பாராட்டப்படுவபவர் நீங்கள். தற்போதைய தமிழ் ஊடகங்களில் உச்சரிப்பு எப்படி இருக்கிறது?
வருத்தமான உண்மை என்னவென்றால், தமிழைக் கொலை செய்து இந்திய தமிழர்கள்தான். ல,ள,ழ ஆகியவற்றுக்கு வித்தியாசமே தெரிவதில்லை. வாலைப்பழம் என்கிறார்கள். இதே நிலைதான் ஊடகத்திலும் நிலவுகிறது. தமிழ் ஊடகத்தில் பணிபுரிகிறோம் என்றால், தமிழ் உச்சரிப்பில் கவனமாக இருக்க வேண்டாமா? இவர்களை பணிக்கு தேர்ந்தெடுப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும். அல்லது, பணிக்கு சேர்ந்த பிறகாவது பயிற்சி கொடுக்க வேண்டும்.
தற்போது பெரும்பாலானவர்கள் ஆங்கிலவழியில் படிப்பதால் இப்படி இருக்குமோ?
அப்படி இல்லை. ஏனென்றால் நானும் பள்ளி இறுதி வரை ஆங்கில வழியில்தான் படித்தேன். தமிழ்ப்பாடம் மட்டும்தான் தமிழில்! ஆனால் தமிழ் மீது எனக்கு பற்று உண்டு. ஆகவே தமிழ் இலக்கணம், இலக்கியம் எல்லாம் ஆர்வத்துடன் படித்தேன். ஊடகத்தில் இருப்பவர்களுக்காவது இந்த ஆர்வம் இருக்க வேண்டும்.
ஈழ விவகாரம் குறித்து நீண்டகாலமாக ஆராயந்து வருபவர், செய்திகள் சேகரித்தவர் நீங்கள். ஈழ விவராகத்தில் தமிழகத்தின் பங்கு எப்படி இருந்தது, இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
(நீண்ட மவுனத்துக்குப் பிறகு) தமிழகத்திலிருந்து எந்த ஒரு உருப்படியான உதவியும் கிடைக்கவில்லை. இதை உதவி என்றுகூட சொல்லக்கூடாது.. தார்மீகக்கடமை. அதை தமிழகம் நிறைவேற்றவில்லை என்பதே உண்மை.
இந்தியாவை எங்கள் தந்தையர் நாடு என்றே மனதில் வைத்திருக்கிறோம். ஆனால் அதுவும், இலங்கையுடன் சேர்ந்துகொண்டு எங்களை அழித்தது.
அதுகூட போகட்டும். 2009ம் வருடம் நாங்கள் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தபோது, தமிழின தலைவர் என்று அழைக்கப்படக்கூடிய கருணாநிதிதான் இங்கே முதல்வராக இருந்தார். அப்போதைய மத்திய அரசிலும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால் அவர் எங்களை கைவிட்டார். அவருக்கு தமிழரின் நியாயமான கோரிக்கைகளைவிட, தமிழரின் அழிவைவிட.. தனது சுயநலான குடும்பப்சமே முதன்மையாக இருந்தது. இது எங்களக்கு தாளாத துயரைக் கொடுக்கிறது. அதற்கு முன்னதாக ஓரளவு ஈழத்தமிழர்க்காக குரல்கொடுத்தார் கருணாநிதி. அதையும் நினைவு வைத்திருக்கிறோம். ஆனால், மிக முக்கிய கட்டத்தில் எங்களை கைவிட்டார் கருணாநிதி. இது ஈழத்தமிழர்கள் மனதில் ரணமாகவே பதிந்துவிட்டது.
வைகோ போன்ற மற்ற சில தலைவர்கள் அப்போதும் சரி, இப்போதும் சரி, ஈழ விசயத்தில் உறுதியாக நின்று குரல் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அதே நேரம் சீமான் போன்ற சிலர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. தனிப்பட்ட முறையில் சீமான் என் தம்பிதான். “அக்கா அக்கா” என பாசத்துடன் பேசுவார். ஆனால் அவரது செயல்பாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.
மற்றபடி அரசியல் சாராத, தமிழக மக்கள் எங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள். எங்களுக்காக முதன் முதலில் தீக்குளித்து தியாகம் செய்தவர்கள், தமிழக தமிழ் மக்கள்தானே! அவர்களை மறக்க முடியுமா?
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் நீங்கள்தான். அந்த சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்…
லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்துவிட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள்.
அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார்.
யாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன்.
குளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.
திறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள்.
நான் ஆச்சரிப்பட்டுப்போனேன்.
நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது.
இதிலிருந்து ஒரு விசயத்தை என்னால் தெளிவாகப்புரிந்துகொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள்.
ஓ.. அதன் பிறகு பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது?
பிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்க சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார்.
பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்தபோதுகூட ரசித்து சிரித்தார்.
தானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.
தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்?
விமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணு ம் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது.
தாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைதை பிரபாகரன் அமைத்திருந்தார்! நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்!
அந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன்.
பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும்.
அவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன்.
ஆனால் அவரை பார்க்கும்போது அந்த கேள்வியே எழவில்லை.
சரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு.
உண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டி ருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது.
எப்போதாவது உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால்கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?’ என்றுதான் கேட் பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.
அது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தி னால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்கு தண்டனை வழங்கப்படும்.
பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகோயரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு.
ஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்தபோதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள்.
உங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது?
பல விசயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான்.
அதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர்.
புலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை.
பிரபாகரன் தற்போது உயிருடன்

இருப்பதாக சிலர் சொல்லி வருகிறார்களே.. உங்கள் கருத்து என்ன?
முள்ளிவாய்க்கால் பகுதியை அறிந்தவர்கள், பிரபாகரன் உயிருடன் இருப்பார் என்பதை நம்ப மாட்டார்கள். (FB அருள் நாராயணா)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.