மருதடியும் வாகையடி சுமைதாங்கியும் – வாரம் ஒரு பழங்கதை – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2015 (திங்கட்கிழமை)
வல்வை – உடுப்பிட்டி வீதியில் தெணியம்பை தாண்டிவர, எமக்கு வலது கைப்பக்கமாக “முருகையைன் கோயில் வீதி” வருகின்றது. நீண்ட - நேரான - தார் வீதி இது.
இந்தச் சந்தியில் வீதிக்கு கிழக்காக இரண்டு பாரிய மருத மரங்கள் 10 அடி தூர இடைவெளியில் நின்றிருந்தன. மருத மரங்களின் அடிப்பாகம் முதிர்ச்சியின் காரணமாக நன்கு உருண்டு திரண்டு, வீதியை நெருக்கிய படி கிளைபரப்பி பெரு விருட்சமாகக் காணப்பட்டன.
இரு மருத மரங்களுக்கும் இடையே ஒரு தகரக் கொட்டகையில், வல்வெட்டி அன்பருக்குச் சொந்தமான ஒரு சுருட்டுக் கடையும் இருந்தது. இந்தச் சுருட்டுக்கடை கூட அந்நாளில் இவ்விடத்தின் அடையாளமாகவே கருதப்பட்டது.
வல்வை நகரசபையின் பொறுப்பில் இருந்த மின்சாரப் பகுதியினை, மின்சாரசபை முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட போது, உயர் மின் அழுத்த மின்கம்பிகளின் இணைப்புக்காக மருத மரங்கள் இரண்டும் தறித்து அகற்றப்பட்டன.
மருத மரங்கள் மாண்டுபோனாலும் “மருதடி” என்னும் பெயர் இன்றுவரை நிலைத்து நிற்கின்றது.
ஊரிக்காட்டில் பிரதான வீதியின் தென்புறமாக கெருடாவிலுக்குப் பிரிந்து செல்லும் ஒழுங்கையின் ஆரம்பத்தில் “சுப்ரமணியம் சோடாக் கம்பனி” என்னும் பெயருடன் ஒரு சோடாத் தொழிற்சாலை அண்மைக் காலம் வரை இருந்து வந்தது.
இந்த தொழிலகத்தில் தயாரிக்கப்பட்ட சோடா வகைகள் குடா நாட்டினுள் மட்டுமின்றி வட பகுதியின் பல்வேறு நகரங்களுக்கும் விநியோக்கிகப்பட்டுவந்தது.
இந்த தொழிற்சாலைக்குக் கிழக்காக (வீதி ஓரத்தில்) 100 மீட்டர் நீளம் வரையுள்ள தூரத்திற்கு இடையே 5 அல்லது 6 வாகை மரங்கள் வரிசையாக நின்றிருந்தன.
வீதியை மூடி வெயில் உட்புகாதவாறு நிழல் கொடுத்து நின்றிருந்தன இந்த வாகை மரங்கள். இதனால் இந்த இடம் “வாகையடி” என அழைக்கப்பட்டு வந்தது.
மின்சார சபையின் மின் இணைப்பு வேலைகளுக்காக இந்த வாகை மரங்களும் பின்னாளில் தறிக்கப்பட்டன. அதனால் நாளடைவில் “வாகையடி” என்னும் பெயர் மங்கி மறைந்து போக “சோடாக் கடையடி” என்னும் பெயரே இந்நாள் வரையும் பேசப்பட்டுவருகிறது.
மேற்குறித்த “சுப்ரமணியக் சோடாக் கம்பனி” க்கு எதிர்ப்பக்கம் (வீதிக்கு வடக்காக) ஒரு கிணறு இருப்பதை நீங்கள் இப்பொழுதும் பார்க்கலாம்.
வாகை மரங்கள் கொடுத்த கூடுதல் நிழல் காரணமாக குளிர்ந்த இக்கிணற்று நன்னீர் பலபேரின் குடி நீர் தேவையையும் ஒரு காலத்தில் பூர்த்திசெய்து வந்தது. இப்பழங்கிணறு மிக அண்மைக் காலத்தில் நிறுவனம் ஒன்றினால் புதுப் பொலிவு பெற்றுத் திகழந்தாலும், அந்நாளில் துலா மூலம் நீர் அள்ளும் வசதியுடனேயே இருந்தது.
துலா நின்றாடும் (நின்று + ஆடும்= நின்றாடும்) மையம் “பேண்” எனப்பட்டது.
(ஊருக்குள்ளே இருந்த பல பொதுக் கிணறுகள் ஒரு காலத்தில் பேணும் துலாவுமுள்ள கிணறுகளாகவே இருந்து, பிற்காலத்தில் கப்பிக் கிணறுகளாக மாற்றம் பெற்றன. உ+ம் : வாகையடிக் கிணறு, சிவன் கோவில் வாசற்கிணறு - தங்கவேலாயுதம் கிணறு - வழுக்கல் மடம் கிணறு - எசமான் கிணறு, அம்மன் கோவில் வாசற்கிணறு - மணல் கிணறு, நெடியகாடு தெணிக் கிணறு, சந்நிதிச் சுற்றாடல் கிணறுகள், தோட்டக்கிணறுகள் இன்னும் பலவும்)
வாகையடி கிணற்றின் பேண் அருகே, ஒரு “சுமை தாங்கி”, கால்நடைகள் நீர் அருந்த ஒரு தண்ணீர் தொட்டி, கால் நடைகள் தம் உடலை உரஞ்சிக்கொள்ள ஒரு “ஆ உரஞ்சிக்கல்” ஆகியவை இருந்தன.
ஆனாலும் கால ஓட்டத்தில் "தண்ணீர்த் தொட்டி", “ஆ உரஞ்சிக்கல்” ஆகிய இரண்டுமே இல்லாமற்போக, இன்று சுமை தாங்கியும் பேணும் மட்டுமே பாசிபடர்ந்து - சிதைவடைந்து காணப்படுகின்றது.
சுமைதாங்கிகளின் கதை என்ன ?
இந்த நாளைய வாகன வசதிகள் எதுவுமின்றிட, ஒற்றையடிப் பாதைகளும் – வண்டிப் பாதையுமாக வீதிகள் இருந்தபோது, அனைவரும் நடந்துசென்றே தம் பணிகளை மேற்கொண்டனர்.
தலைச்சுமையுடன் நடந்துவரும் ஒருவர் (வேறு ஒருவரின் உதவியின்றி), தலைச் சுமையை இறக்கிவைக்க வசதியாக இந்த சுமைதாங்கிகள் ஒரு குறித்த உயரத்தில், (5 அடிக்கு மேற்படாமல்) கட்டப்பட்டன.
சுமை தாங்கிகள் இன்னொரு கதையையும் “தாங்கி” நிற்கின்றன.
வயிற்றில் சிசுவைச் சுமந்தபடி – சுமையுடன் ஒரு தாய் மரணித்தால், அந்த தாயின் நினைவாக அக்காலத்தில் ஒரு "சுமைதாங்கி"யை கட்டிவைத்ததாகவும் ஒரு பரம்பரைக் கதையுமுண்டு.
இந்த வாகையடிக் கிணற்றுக்கு மேற்காக 200 மீட்டர் தூரத்தில், வீதிக்குத் தெற்காக “நில அளவையாளர் கதிக்காமத் தம்பி விமலாதாஸ்” என்னும் வழிகாட்டுப் பலகைக்கு கிழக்காக வீதி ஓரத்தில் “அப்பக்காத்தர் மடம்” என்னும் பெயருடைய மடமும் – ஒரு கிணறும், ஒரு சுமைதாங்கியும் அருகருகே இருந்தன.
காலமாற்றத்தால் மடமும், சுமைதாங்கியும் இப்பொழுது இல்லை. ஆனாலும் அந்தக் கிணறு இப்பொழுதும் உள்ளது.
அப்பக்காத்தர் மடத்தடியில் நிழல் மரங்கள் நின்றிருந்தன. என்பதற்கு அடையாளமாக வீதியின் வடக்காக தறித்த ஒரு மரத்தின் அடிக்கட்டை இன்னமும் இருப்பதை நாம் காணலாம்.
மயிலியதனையில் இப்பொழுது மின்மாற்றி உள்ள இடமருகே ஒரு மிகப்பெரிய புளியமரமும் – மரநிழலில் ஒரு சுமைதாங்கியும் இருந்தது ஒரு காலத்தில். ஆனால் தற்பொழுது புளியமரமோ
சுமைதாங்கியோ அங்கில்லை.
ஊரின் மேற்கே வாகையாடியில் ஒரு சுமைதாங்கியின் மிச்சம் மீதி இருப்பதைப்போல, ஊருக்கு கிழக்கே கணபதி பதிப்பகத்திற்கும் - பிள்ளையார் வடக்கு வீதிக்குமிடையே ஒரு சுமைதாங்கியும், ஊறணி தீர்த்த மடத்தின் எதிர்ப்புறம் (வீதியின் தெற்காக) ஒரு சுமை தாங்கியும் ஓரளவு முழுமையான நிலையில் உள்ளதை இப்பொழுதும் பார்க்கலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Raagee (Toronto, Canada)
Posted Date: March 31, 2015 at 02:04
மிக்க நன்றி! பழைய நினைவுகளை மீட்டுக்கொள்ள மட்டுமல்லாமல் அதன் நினைவுகளை மீளவும் மனிதில் காட்சிப்படுத்துவதற்கு இந்தப் பதிவுக்கு நன்றிகள் பல. பழைய ஒளிப்படங்களுடன் தற்போது இவை எவ்வாறு காட்சி தருகின்றன என்பதைக் காட்டும் புதிய ஒளிப்படங்களையும் இணைத்தால் பதிவின் சிறப்பு இன்னும் மேம்படும் என நினைக்கின்றேன்!
நன்றி
ராஜி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.