வல்வையில் இரண்டாவது நாளாக கடும் மழை, சீரற்ற காலநிலை தொடரலாம் என அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2018 (புதன்கிழமை)
நாட்டின் தென்பகுதியில் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் யாழப்பாணத்தில் பல இடங்களில் இன்று காலை 10 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
வல்வையில் இன்று இரண்டாவது நாளாகவும் முற்பகல் பத்து மணி முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இதேவேளை வடகிழக்கு, வடமேல், மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70-80கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.