இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள் கனடாவில் வெளியிடப்பட்டது - படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2016 (திங்கட்கிழமை)
வல்வை எழுத்தாளர்களில் ஒருவரும், வல்வை ஆவணக் காப்பக ஸ்தாபகருமான திரு.நகுலசிகாமணி மற்றும் திருமதி உமா நகுலசிகாமணி ஆகியோரினால் எழுதப்பட்ட இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள் (Historical Anecdotes of Srilankan Tamils) கனடாவில் பலதரப்பட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
கடந்த ஒக்டாபர் 8 சனி மாலை ஸ்கார்பரோ நகரசபை மண்டபத்தில் திரு.வீரசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் திரு.சோமசச்சிதானந்தம் (பொதுநல சேவையாளர்) அவர்களின் தமிழ்த் தாய்வாழ்த்தும், கனேடிய தேசியகீதமும் பாடியபின், இலங்கையில் அனைத்துப் போராளிகள் மக்களுடன், சந்துரு சௌமியன் ஆகியோருக்கும் வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்பு பிரமுகர்களின் உரையும் நூல் அறிமுகமும் ஆரம்பமானது. ரொராண்டோ அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் வரலாறுகள் பாதுகாக்கப் படவேண்டிய அவசியத்தைக்கூறி இந்தக்கடினபணியை பலவருடங்களாக நகுலசிகாமணி அவர்கள் ஆற்றிவருவதைப்பற்றி நான் நன்கறிவேன் என்றார்.
அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஹரி. ஆனந்தசங்கரி இரண்டு நாட்களுக்கு முன்னர் கனடிய பாராளுமன்றத்தில் 'தமிழ் மரபுரிமை மாதம்' பற்றி சட்டவாக்கம் நிறைவேற்றியபின்னர,; முதலாவதாக இங்கு வருகைதந்த பொழுது அவருக்கு மல்லிகை மாலை அணிந்து கௌரவிக்கப்பட்டார்.
திரு.ஹரி.ஆனந்தசங்கரி உரையாற்றும்போது தான் இங்கு வருவதற்கு முக்கியகாரணியாக இருந்தது, சந்துரு சௌமியன், கனடிய இளையோர் அமைப்பினூடாக சுனாமி நிதிசேர்ப்பின்போது அதிக பணம் சேர்த்து உதவியவர் என்பதையும், தான் சந்துருவுடன் பழகியநாட்கள் இன்றும் என்மனதில் உள்ளது. இவர்களது பெற்றோர் இந்தப் பணியோடு நின்றுவிடாமல் தாயகம்சார்ந்த வேறுபணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள.; இந்நூலை ஆங்கிலத்திலும் வெளிக்கொணர்ந்திருப்பது மேலும் சிறப்பானதாகும் என்றார்.
திரு.கனகமனோகரன் தனதுரையில் நகுலன் வரலாற்றுப் புதையல்களைத்தேடி அவற்றை அரும்பெரும் ஆவணக்காப்பகமாக, காவியமாக பொருட்செலவில் ஆக்கியுள்ளார். வல்வைக்குவரும் சுற்றுலாப்பயணிகள் யாவரும் சிதைந்துகிடக்கும் பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இல்லத்தையும், வரலாற்று ஆவணக்காப்பகத்தையும் பார்ப்பதற்கு தவறுவதில்லை. எனக்கும் அதைப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
நண்பன் நகுலன் ஒளவையின் கூற்றுப்படி 'திரைகடல் ஓடித்திரவியம்தேடு' என்பதற்கு அமையதிரவியம் தேடியதல்லாமல் 18 நூல்களையும் தேடியும், எழுதியும் 18 குழந்தை களாக நிலைத்துநின்று வாழக்கூடிய குழந்தைகளாக எமக்குத் தந்துள்ளார். அவர்கள் செயற்பாட் டிற்காக எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
சட்டத்தரணி சிறிபதி 'நண்பன் நகுலசிகாமணி நூலில் பலவிடயங்களை எழுதியுள்ளார்கள். அரசியல்பற்றி சமநிலையில் யாரையும் புண்படுத் தாமல் எழுதியமைபற்றிகூறி மறுபதிப்பு வருமாயின் மேலும் பலவிடயங்கள் சேர்த்து வெளிவர வேண்டுமென தனது விருப்பத்தைக்கூறினார்.
அதன்பின்பு திரு.ஈழவேந்தன், கவிஞர்.கந்தவனம், திரு.பொன்னையா.விவேகானந்தன், உதயன்ஆசிரியர் திரு.லோகேந்திரலிங்கம், திரு.பொன்.புவனேந் திரன். திரு.மு.தியாகலிங்கம் ஆகியோரின் சிறப்பான உரையைத் தொடர்ந்து திரு.லோகன்கணபதி (மாக்கம் நகரசபை உறுப்பினர்) தனது உரையின் இறுதியில் மாக்கம் மேயர் உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துமடலை நூலை எழுதிய நகுலசிகாமணி, உமா நகுலசிகாமணிக்கும் வழங்கினார். வழங்கினார்.
டென்மாக் திரு.கி.செல்லத்துரை (எழுத்தாளர், படத்தயாரிப்பாளர்), சுமார் 25 வருடங்கள் கப்பல் மாலுமியாக உலகின் பலஇடங்களுக்கும் சென்ற இவர், போர்காரணமாக கனடாவில் குடியேறி னார். ஆனாலும் அவருடைய செயற்பாடுகள் ஓய்ந்துவிடவில்லை.
1997ம் ஆண்டு 'வல்வெட்டித் துறை வரலாற்றுச் சுவடுகள்' என்ற நூல் வெளிவந்தபோது இவரை யாவரும் திரும்பிப் பார்த்தார்கள். நூலின்மேல் பல விமர்சனங்கள் வருமளவிற்கு தாக்கமான பணியாக இருந்தது. அதன் பின்பு இரண்டாவது பதிப்பை வெளியிட்டு தற்போது 'இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சுவடுகள்' என்ற நூலை உலகமன்றில் புதுவரவு கொடுக்கின்றார். நகுலசிகாமணி அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் எனது வாழ்த்துக்கள் எனது வாழ்த்துக்கள் என்றார்.
திரு.சேதுமாதவன் (வல்வை) ஆங்கிலத்தில் இந்நூலின் சிறப்புப்பற்றி உரைiயாற்றினார்.
ஏற்புரையில் நகுலசிகாமணி இன்று பல நிகழ்ச்சிகள் இருந்தும் நேரத்தை இதற்கென ஒதுக்கி தனது அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கும், இலவசமாக எமது நிகழ்ச்சியை ஒலிபரப்பிய தமிழ்வண், ரிவிஐ, வானொலிகள், பத்திரிகைகள் யாவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசியல் பிரவாகத்தில் அணில் போல நானும் ஒருவன். இலங்கைத் தமிழர் வரலாற்றை ஒரு நூலாக எழுதவேண்டும் என்ற விருப்பத்திற்கமைய பின்பகுதியில் 25 பகுதிகள் எமது கடந்தகால அரசியல் வரலாற்றை எழுதியுள்ளேன். நான் திரட்டிய நூல்களை ஆதாரமாகவும் வர்ணப்புகைப்படங்களாகவும் கூடவே ஆங்கிலத்திலும் இருப்பதைக் நீங்கள் காணும்போது தெளிவும் உணர்வும் நெஞ்சில் நிலைத்திருக்கும் என நம்புகிறேன் என கூறினார்.
மின் அஞ்சல் மூலம் பலர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். னுச.கேதாரன்.யோகசிகாமணி குடும்பம், சந்திரசிகாமணி(சிவா) குடும்பம் ஆகியோர் லண்டனில் இருந்து சித்தப்பா! சின்னம்மா! உங்கள் செயற்பாட்டிற்கும் நூல்வெளியீடு சிறப்பாக நடைபெறவும் நல்வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு மறவன்புலவு: திரு.சச்சிதானந்தன், தமிழறிஞர் (காந்தளகம் அச்சகம் தமிழ்நாடு) அவர்க ளின் வாழ்த்துச் செய்தி :
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (Denmark)
Posted Date: October 27, 2016 at 19:51
இது சாதாரண விடயமல்ல..
எங்கே யாரிடம் எப்படி பணத்தை பிடுங்கலாம் என்று ஓடுவோர் மலிந்த உலகில் தன் பணத்தை முதலிட்டு உலகை வாழ வைக்கும் உன்னத மனிதர்கள் நகுலசிகாமணி அண்ணா, அவர் துணைவியார் உமா நகுலசிகாமணி இருவரும்.
முன்னொருநாள் டென்மார்க்கில் நான் ஒரு விழாவை நடத்திக்கொண்டிருந்தேன், அப்போது கொலன்ட் நாட்டில் இருந்து மூன்று தமிழர்கள் டென்மார்க்கிற்குள் நுழைந்து வங்கி ஒன்றின் தானியங்கியில் பணத்தைத் திருடி மாட்டிக்கொண்டனர்.
இவர்கள் யார்... எந்த ஊரவர்... டென்மார்க்கில் உள்ள தமிழ் மக்களில் சில வேறு ஊரவர்கள் செல்லத்துரை மாஸ்டரின் விழாவுக்கு வந்த வல்வெட்டித்துறை ஆட்களாகத்தான் இருக்க வேண்டும் என்று கதையை பரவவிட்டார்கள்.
ஆனால் வந்து அகப்பட்டவர்கள் நமது ஊரவர்கள் அல்ல.. வேறு ஊரவர்கள்..
இப்படியொரு சம்பவம் நடந்ததும் நமது ஊரை இழுத்துவிடும் நிலை ஏன் வந்தது என்று ஆராய விரும்பவில்லை.. ஆனால்..
நமது செயல்களின் தொகுப்பு நமது புகழ் மிக்க ஊரை இக்கட்டான நிலைக்கு தள்ளுமென நினைத்து வாழ தவறிவிட்டோமா என்ற ஆதங்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இருந்தாலும்...
நகுலசிகாமணி அண்ணா போன்றவர்கள் செய்யும் புகழ் மிக்க செயலை வல்வையின் புகழாக பேச பல ஊரவர்கள் முன் வருவதில்லை... ஏன்..
ஆகவேதான் நமது ஊரவர்கள் செய்யும் நல்ல செயல்களை முன்வந்து வாழ்த்தவும் தவறுகளை துணிந்து கண்டிக்கவும் வேண்டிய சமுதாய பொறுப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.
முதலில் நமது பெருமைகளை பேசுவோம்.. சிறுமைகளை திருத்துவோம்..
பெருமை தரும் செயல் செய்யும் நகுலசிகாமணி அண்ணா குடும்பத்தவரை கனடாவில் உள்ள வல்வையர்கள் ஏகமனதாக ஆதரிக்க வேண்டும்.. அது கடமை..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.