வல்வெட்டித்துறை சிவன் கோவில் வரலாறு – மீனாட்சி சுந்தரம் (பாகம்–1)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2015 (வெள்ளிக்கிழமை)
இக்கோயில் பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதியில், வல்வைச் சந்தியிலிருந்து 300 யார் தூரத்தில் மேற்குத் திசையில், முத்துமாரி அம்மன் கோயிலுக்கு தென்திசையில் “இராசிந்தான் கலட்டி” என்று சொல்லப்படும் காணியில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் வரலாற்றை எழுத முன்னர், இதன் ஸ்தாபகர் வெங்கடாசலம்பிள்ளை அவர்களைப் பற்றி முதலில் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். இப்பெரியோரைப் பற்றியும், அவர் மீட்டு எடுத்த கப்பலை பற்றியும் பிறிதொரு
இடத்தில் குறிப்பிட்டிருந்தாலும் கூட, கோயிலைப் பற்றிய ஆராச்சிக் கட்டுரைகளை, பல்கலை மாணவர்கள் தயாரிப்பதற்கு ஏதுவாக அவற்றின் சுருக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு.வெங்கடாலசலம்பிள்ளை அவர்களின் தந்தையாரான திருமேனியாரின் தந்தையார் – ஐயம் பெருமாள் வேலாயுதம் என்பவர், அரசாட்சியினரால் “அடப்பன்” என்ற பதவி வழங்கப்பெற்றவர். இது நெய்தல் நிலத்தவனை குறிப்பதாகும்.
யாழ்ப்பாணப் பகுதியில் அக்காலம் வாழ்ந்த முன்னணி பிரமுகர் வரிசையில், வல்வெட்டிதுறையைச் சேர்ந்த மேற்குறிக்கப்பட்ட ஐயம்பெருமாள்வேலாயுதர் பற்றியும் அவரது புத்திரர்கள் பற்றியும், வசாவிளான் க.வேலுப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட “யாழ்ப்பாண வைபவ கெளமுதி” என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலாயுதர் அவர்களின் புத்திரர்களில் ஒருவரான புண்ணிய மூர்த்தி என்பவர் அம்மன் கோயிலைக் கட்டியவர் ஆவார். இன்னொரு புத்திரரான திருமேனியார் மேற்படி முத்துமாரியம்மன் கோயிலுக்கு தர்மகர்த்தாவாக இருந்தவர் ஆவார்.
திருமேனியாரின் புத்திரர்களில் ஒருவரான குழந்தைவேற்பிள்ளை என்பவர் கொழும்பிலுள்ள யாழ்பாணத்தார் கதிர்வேலாயுதசுவாமி கோயிலையும், பர்மாவில் (மியன்மாரில்) ஒரு முருகன் கோயிலையும் ஸ்தாபித்தவர் ஆவார்.
இன்னொரு புதல்வரான பெரியதம்பியார் அல்லது பெரியவர் என அழைக்கப்படும் வெங்கடாசலம்பிள்ளை என்பவரே மேற் குறிப்பிட்ட வைத்தீஸ்வர சுவாமில் கோயிலை ஸ்தாபித்தவர் ஆவார்.
கடலில் மூழ்கியிருந்த “பிறிக் அத்திலாந்திக் கிங்” (Brig Atlantic King) என்னும் கப்பலை மூழ்கியநிலையில் விலை கொடுத்து வாங்கி, அதனை மீட்டெடுத்து, வேண்டிய திருத்தங்களைச் செய்து, அதன் மூலம் கடல் வணிகம் செய்து, கிடைத்த செல்வத்தில் ஒரு பகுதியை கொண்டே இக்கோயிலைக் கட்டினார்.
இக் குடும்பத்தவர் இத்தோடு நின்றுவிடாமல், வல்வையிலுள்ள ஏனைய கோயில்களான திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில், முத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றினை கட்டுவித்தலிலும், புதுப்பித்தலிலும், பரமாரித்தலிலும் மற்றைய
பிரமுகர்களுடன் சேர்ந்து பங்காற்றியிருக்கின்றார்.
வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் இவ்வூரிலுள்ள கோயில்களுக்கான மகமைகளைப் பொறுப்பேற்று, செலவுகள் செய்து, கணக்குகள் தயாரிப்பதற்கு பொறுப்பாக இருந்ததோடு, முத்துமாரி அம்மன் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாகவும் இருந்துள்ளார்.
தாம் அம்மன் கோயில் பக்கமிருந்து தெற்கு நோக்கி வரும் சமயம், பற்றை காடாக மஞ்சள் பூச்செடிகள் நிறைந்த பகுதியில் நெருப்பு எரிவது போன்ற ஒரு ஒளி தென்பட்டதாகவும், இருவரும் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அவ்விடத்தில் மாட்டுச் சாணம் தெரிந்ததாயும், மறுநாள் இவரின் தந்தையாரான திருமேனியார் கனவில் தோன்றி அவ்விடத்தில் சிவனுக்கு ஆலயம் எடுக்கும்படி பணித்தார் என்றும் தெரியவருகின்றது.
(இக்கட்டுரையின் ஆசிரியரான திரு.மீனாட்சிசுந்தரம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் சிறந்த ஆவணக்காப்பாளர் என்ற விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.