வல்வெட்டித்துறை சிவன் கோவில் வரலாறு (பாகம் – 2) - திரு.பா.மீனாட்சிசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2015 (சனிக்கிழமை)
தமக்கு பரம்பரையாக வந்த தோட்டங்கள், வயல்கள் ஆகியவற்றை திருத்திப் பயிரிட்டும், பல புதிய காணிகளை விலைக்கு வாங்கியும் செல்வத்தைக் குவித்து, அத்தோடு கப்பல்களுக்கு அதிபதியாகி செல்வத்தைக் குவித்தார். அம்மன் கோயிலுக்கு தெற்குப் பகுதியிலிருந்த மடத்திலிருந்து கொண்டே, அம்மடத்திற்கு தெற்குப் பக்கமாக இருந்த 60 பரப்புக் காணியை விலை கொடுத்து வாங்கினார்.
ச.வைத்திலிங்கம்பிள்ளை புலவர்
“இராசிந்தான்” கலட்டி என அழைக்கப்படும் இக்காணியை துப்பரவு செய்து, 1867 ஆம் ஆண்டு அத்திவாரம் இடுதலாகிய சங்குத்தாபனம் செய்திருந்தார். இக்கோயிலைக் கட்டுவதற்காக இவரின் தம்பிமார்களாகிய குழந்தைவேற்பிள்ளையும், இராமசாமியும் தங்கள் செல்வங்களையும் வழங்கியிருந்தார்கள்.
இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறந்த சிற்பிகள், பலவகைக் கம்மியர்கள் கோயில் கட்டுமான வேலைகளைச் திறம்படச்செய்தனர். கோயில் கட்டத் தொடங்கிய 1867 ஆம் வருடம் தொடக்கம் சிவபத மெய்திய 1900 ஆம் வருடம் வரை கோயில் எசமானர்களுக்கு கோயில் கட்டுவதற்கும், பூசைக் கிரமங்களுக்கு வேண்டிய அறிவுரைகளையும் சரீர உதவி வகைகளையும் வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் ச.வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் வழங்கிவந்துள்ளார்கள்.
இக்கோயிலுக்குக்கான லிங்கத்தையும், ஆவிடையாரையும் காசிவரை சென்று அக்காலத்தில் பிரவுவாயிருந்த ஆ.விஸ்வநாதப்பிள்ளை என்பவர் கொண்டு வந்திருந்தார்.
வல்வை சிவன் கோயில் மடம்
கொழும்பிலுள்ள சிவஸ்ரீ நா.குமாரசாமிகுருக்களுடன் திரு.குழந்தை வேற்பிள்ளையவர்கள் தொடர்பு கொண்டு, அவரை வரவழைத்து, சுபானு வருடம் 08.06.1883 இல் நூதனப் பிரதிட்டா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
இந்தக் கோயிலின் லிங்கம் “பாணலிங்கம்” என்று சொல்லப்படுகின்றது.
விஸ்வநாதப்பிள்ளை அவர்கள் லிங்கத்துடன் உற்சவ மூர்த்திக்களாகிய நடேசர், சந்திரசேகர், ஆகியவற்றைக் கொண்டுவந்து கொடுக்க, இவரது மகன் சரவணமுத்துபிள்ளை அவர்கள், சுவாமி கோயிலுக்குத் தங்கத் தகடு மருவிய தூபி முடியை இயற்றுவித்துக் கொடுத்துள்ளார்.
பா.மீனாட்சிசுந்தரம்
நடந்து முடிந்த கும்பாபிஷேகத்திற்கு பருத்தித்துறை, வண்ணார் பண்ணை, நல்லூர், வல்வெட்டி, உடுப்பிட்டி, கம்பர்மலை, சரசாலை, மீசாலை, மந்துவில், கற்கோவளம், தொண்டைமானாறு, மயிலிட்டி, காங்கேசன்துறை, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, காரைதீவு, திருகோணமலை, கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள அடியவர்களும், நாட்டுக்கோட்டை செட்டிமார்களும், கும்பாபிஷேகக் கிரியைகளுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் நிதியுதவி என்பவற்றை வழக்கியிருந்தார்கள்.
கும்பாபிஷேகத்தை அடுத்து முறையாக ஆறுகாலப் பூசைகள் நடைபெறலாயின.
முதன்முதலாகப் புலோலியைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ சண்முக நாதக் குருக்கள் பிரதம பூசகராயிருந்து பூசைகளை நடாத்தி வந்தார். ஆறுகாலப் பூசையுடன் நித்தியோற்சவம் நித்தியாக்கினி என்பனவும் நடைபெறத் தொடங்கின.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.