வல்வெட்டித்துறை சிவன் கோவில் வரலாறு (பாகம் – 4) - திரு.பா.மீனாட்சிசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2015 (திங்கட்கிழமை)
இராமசாமி அவர்களுக்குப் பின் கோயில் ஸ்தாபகர் வெங்கடாசலம்பிள்ளை அவர்களின் இரண்டாவது புத்திரரான சின்னத்துரை என அழைக்கப்படும் திருமேனிப்பிள்ளை அவர்கள் கோயில் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில் பல திருப்பணி வேலைகள் இடம்பெற்றன.
இந்தியாவைச் சேர்ந்த தெலுங்குதேச வர்த்தகரான காரஞ்சேடு ஏர்லக்கட்டர் அரங்கநாயுடுகாரு என்னும் பிரபு, முன் வாயில் மண்டபத்தையும் கோபுர அடிப்பாகத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்த வர்த்தகர் பல கப்பல்களுக்கு அதிபதியாக இருந்ததுடன் தனது கப்பல்களுக்கு எல்லாம் வல்வை வாசிகளையே தண்டையல்களாகவும் இதர மாலுமிகளாகவும் பணிக்கு அமர்த்தியவர் ஆவார்.
சிவன் ஆலய வீதி
வல்வை பிரபுவாகிய விஸ்வநாதர் சரணவமுருகுப்பிள்ளை என்பவர் நடராஜர் மண்டபத்தை அமைத்துக் கொடுத்ததோடு கோயில் வாயில் பெருவீதிக்கும் தனது நிலத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து உதவினார்.
கம்பர்மலையைச் சேர்ந்த வல்லியப்பர் வேலுப்பிள்ளையும் பெண் பாறுவதிப்பிள்ளையும் வேறு சில திருப்பணி வேலைகளைச் செய்துகொடுத்துள்ளார்கள்.
1908 ஆம் வருடமளவில் காசியில் இருந்து வந்த காசிப கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ குமாரசாமி குருக்களின் மகனும் நீர்வேலியில் ஜனனமும், கோப்பாயில் வாசம் செய்தவரும், ஆரிய திராவிட மொழிகளில் திறமையுடையவரும், கிரியா
விற்பன்னரும், குரு லட்சணமும் நிறைந்தவருமான பிரம்மஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் பிரதம பூசகரானார்.
திருமேனிப்பிள்ளை அவர்கள் எசமானாக இருந்த காலத்தில் நொத்தாரிசு சபாரத்தினம் முகதாவில் 08.03.1921 இல் 4889 இலக்கம் கொண்ட கோயிலின் பொறுப்பாளி நியமிப்புச் சாதனத்தில் சுவாமியின் பெயர் வைத்தீஸ்வரர் என்றும் அம்பிகையின் பெயர் தையல்நாயகி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1883 ஆம் வருடம் இயற்றமிழ் போதகாசிரியர் வல்வை வைத்திலிங்கப்பிள்ளை அவர்கள் பாடிய ஊஞ்சல் பதிகத்திலும் அம்மையின் பெயர் தையல்நாயகி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (ஊஞ்சல் பதிகம் கீழே இணைக்கப்பட்டுள்ளது)
மேலும் 4889 இலக்க சாதனத்தில் கோயிலுக்கான அசைவுள்ள சொத்துக்கள், அசைவற்ற ஆதனங்கள் யாவற்றையும் தன்னுடன் சேர்ந்து பராமரிப்பதற்காக அறங்காவலர்களாக தனது மூத்த சகோதரன் வேலுப்பிள்ளையின் மகன்
திருவேங்கடத்தையும் (திரு.பிரபாகரனின் பேரனார்) இளைய சகோதர்களின் மகன்களாகிய அருணாசலம் வெங்கடாசலம், அருணாசலம் சபாரத்தினம் ஆகிய மூவரையும் நியமிப்பதோடு, மூத்தவரான வேலுப்பிள்ளை திருவேங்கடமே மற்றைய
இருவரையும் ஒருப்படுத்தி முதன்மையுடையவராக இருந்து சகல செய்கைகளையும் செய்து வரவேண்டுமெனவும், குறித்த மூவரின் சீவியகாலத்தின் பின், அவர் அல்லது அவர்களின் ஆண் சந்ததியாரே கோயிலைப் பராமரிக்கவேண்டுமென்றும்,
குறித்த மூவருக்கும் அல்லது அவர்களின் வழித் தோன்றல்களில் ஆண் சந்ததி இல்லாமல் போனால், தனதும் தனது சகோதரர்களினதும் பெண் சந்ததியரில் வரும் ஆண் சந்ததியாரே, கோயிலையும் இதர ஆதனங்களையும் பராமரித்து
வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.மீனாட்சிசுந்தரம்
மேலும் இந்த அறங்காவலர்கள் கோயிலைப் பராமரிப்பதிலும், கணக்கு காட்டுவதிலும் ஒழுங்கீனங்கள் ஏற்பட்டால் அதனை விசாரிப்பதற்காக 9 பேர் கொண்ட விசாரணை கர்த்தாக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமேனிப்பிள்ளை அவர்கள் காலத்தில், 1919 ஆம் வருடம் அமிர்தானந்த சுவாமிகள் என்னும் அந்தணப் பெரியார் இவ்விடம் வந்து, ஊரவர்கள், அயல் ஊரவர்கள், ஆகியோருடைய பொருள் உதவியோடு புனராவர்த்தனப் பிரதிஷ்டா
கும்பாபிஷேகம் ஒன்றினை நடத்திவைத்தார்.
பிரம்மஸ்ரீ கார்த்தியேகக் குருக்கள் காலத்தில் அவரது விருப்பபடி சிறிய தந்தையாரான மாப்பிள்ளை குருக்கள் என அழைக்கப்படும் இராமலிங்கக் குருக்கள் பிரதான ஆசாரியாக இருந்து இக் கும்பாபிஷேகம் சிறப்பாக நடாத்தி வைக்கப்பட்டது.
தொடரும்..........
இயற்றமிழ் போதகாசிரியர் வைத்திலிங்கப்பிள்ளை பாடிய ஊஞ்சல் பதிகம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.