வல்வை அம்மன் கோயில் வரலாறு – பாகம் 1 – பா.மீனாட்சி சுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2015 (புதன்கிழமை)
பறங்கியர் காலத்திற்கு முன்னும் அவர்களுக்கு பின் நீராவிக் கப்பல்கள் வரும்வரைக்கும் தென் இந்தியாவிற்கும் வட இலங்கைக்குமான தொடர்புகள் விசேடமாக வல்வெட்டித்துறை துறைமுக வழியாகவே இடம்பெற்று வந்தன.
கோடியாக்கரை
இலங்கைக்கு மிகவும் கிட்டவுள்ள இந்தியப்பகுதி தமிழகத்தின் கோடிக்கரையாகும் (கோடியக்கரை). கோடிக்கரைக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையில் ஒழுங்கான தோணிப் போக்குவரத்து இருந்து வந்துள்ளது.
தென் இந்தியத் தபால்கள் கோடிக்கரையில் வள்ளத்தில் ஏற்றப்பட்டு வல்வெட்டித்துறை வந்தடையும். சிவன் கோயிலுக்குச் சொந்தமான பெரிய கப்பல் கட்டும் தளமான வாடியடிக்கு நேரே உள்ள “வான்” ஊடாக தபால் பொதிகள் கரைக்கு கொண்டுவரப்பட்டு இறக்கப்படும்.
‘வான்’ என்பது முருகைப் பாரிலுள்ள சிறிய இடைவெளியாகும். இந்த இடைவெளியூடாகவே கப்பல்கள், வள்ளங்கள் கரையைநோக்கி வந்து செல்லும்.
இவ்விதமாகக் கொண்டுவரப்பட்ட தபால் பொதிகள் நெற்கொழு வைரவர் கோயிலுக்கு அருகாமையில் உள்ள பாதை வழியாகச்சென்று, தொண்டைமனாற்றினை காலால் கடந்துசென்று, இடைக்காடு அம்மன் கோயில் இருக்கும் இடத்திற்கு அணித்தாய் கரையைக்கடந்து, அச்சுவேலி மார்க்கமாக யாழ்பாணம் அதாவது நல்லூர் சென்றடைந்ததாகச் சொல்லப்படுகின்றது.
அந்தக்காலத்தில் பாதைகள் (Road) இல்லாததோடு வண்டிப் பாதைகளும் குறைவாகவே இருந்தன.
இப்படியாகத் தென் இந்திய தபாற்போக்குவரத்து நடைபெறும் காலத்தில் ஒருநாள், கோடியாக் கரையிலிருந்து தபால்கள வள்ளத்தில் ஏற்றப்பட்டு, வள்ளம் புறப்படும் சமயம் ஒரு வயோதிப மாது, வள்ளக்காரன் முன் தோன்றி தன்னையும் வள்ளத்தில் ஏற்றிக்கொண்டுசென்று, இலங்கைக் கரையில் விடும்படி கேட்டுக்கொண்டாராம்.
அதற்கு வள்ளக்காரன் வயோதிபமாதுவுக்கு இலங்கை கரையில் பணிவிடைஎன்ன, வயோதிபத்தினால் புத்தி பேதலித்துவிட்டதா என்று அந்த வயோதிபமாதுவை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்டானாம். வயோதிபமாதுவும் விடாமுயற்சியுடன் திரும்பத் திரும்ப வற்புறுத்தவே, வள்ளக்காரர்களில் ஒருவன் இலங்கை கரையில் எங்கே போகின்றாய் எனவும், உனது பெயர் என்ன என்று கேட்டனன்.
(இடது பக்க படம் - குறித்த இந்த பத்தியில் கூறப்பட்ட கதையை விளக்கும் ஓவியம், கோயிலின் முன்பக்க முகப்பில் நிலத்தைப் பார்க்கும் வண்ணம் வரையப்பட்டுள்ளது)
வயோதிபமாது வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டும் எனவும் தனது பெயர் “கயிலைமலை மாதரசி” எனவும் கூறினர். என்ன காரணத்திற்காக போகின்றாய் என திரும்பவும் கேட்ட பொழுது வயோதிப மாது பதில் பகிரவில்லை.
கடைசியாக வள்ள ஓட்டிகள் வயோதிபமாதுவையும் வல்வெட்டித்துறைக்கு கொண்டுவந்துசேந்தனர். கரையில் இறங்கியதும் வயோதிபமாது வள்ளக்காரருக்கு ஆசிகூறிப் பிரிந்துசென்றார்.
வாடி ஒழுங்கை வான் (தற்போதைய தோற்றம்)
இது நடந்த இரண்டொரு நாட்களுள் தற்கால முத்துமாரி அம்மன் கர்ப்பக்கிரகம் இருக்குமிடத்தில் இரவில் சில நேரங்களில் ஒரு ஒளி தென்பட்டதாம். குறித்த இந்தப் பகுதி அந்தக் காலத்தில் பற்றைக் காடாகவும் ஒற்றையடிப் பாதையை மட்டும் கொண்டுள்ளதாகவும் இருந்தது.
இப்படியான வெளிச்சத்தை பலதடவை கண்ணுற்ற வல்வை வாசி ஒருவர், அவ்விடத்தில் அமைந்திருந்த வேப்ப மரத்தடியில் ஒரு கொட்டில் அமைத்து வழபடத் தொடங்கலானார்.
இதுவே வல்வை முத்து மாரியம்மன் கோயில் உருவாகக் காரணமென கருதப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.