வல்வை அம்மன் கோயில் வரலாறு – பாகம் 8 – பா.மீனாட்சி சுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2015 (வெள்ளிக்கிழமை)
ஆலயத்தின் அசையாச் சொத்துக்கள்
ஆலயத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குருக்கள் தங்கும் இடம் வ.இராமசாம்பிள்ளை அவர்களால் வாங்கப்பட்டு, ஆலயத்திற்கு தர்ம சாதனமாக எழுதப்பட்டுள்ளது. இந்தக் காணியின் பராமரிப்பாளராக (Trustee) அவரது மூத்த மகன் ஆனந்தவேல் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
முத்துமாரி அம்மன் கலாச்சார மண்டபம்
இது தவிர ஆலயத்திற்கு கிழக்குப் புறமாக உள்ள மடம் 1975 இல் நா.மார்க்கண்டு சகோதர்களால் ஆலயத்திகு தர்மசாதனமாக எழுதப்பட்டுள்ளது. வட பகுதியில் முன்னர் தபாற் கந்தோர் இருந்த காணியும் (தற்பொழுது கலாச்சார மண்டபம் அமைந்துள்ளது) ஆலயத்திற்கு தர்ம சாதனமாக எழுதப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வட மேற்குப்பகுதியில் குளத்துடன் 5 பரப்புக் கொண்ட ஒரு காணியும், சமரபாகு குறிச்சியில் 30 பரப்புக் கொண்ட ஒரு காணியும் தரும சாதனம் செய்யப்பட்டுள்ள போதிலும் அதன் பராமரிப்பாளர் யார் என்பது போன்ற முழு விபரமும் அறிய முடியாதிருக்கின்றது.
இதைவிட வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியில் 2 ஏக்கர் கொண்ட இன்னொரு காணியும் முத்துமாரி அம்மன் கோயிலுக்கும், நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயிலுக்கும் தர்மசாதனம் செய்யப்பட்டு அதன் பராமரிப்பாளராக தர்மசாதனம் செய்தவரின் உறவினரான ஐயாமுத்து அவர்கள் நியமிக்கப்படிருந்தார்.
ஆலயத்தில் நிறைவேற்றப்படும் நேர்த்திக்கடன்கள்
இவ் ஆலயத்தில் அடியார்கள் நேர்த்தி வைத்து தீக்குளிப்பு, கரகம், பாற்சொம்பு எடுத்தல் என்பவற்றை நிறைவேற்றிவைப்பார். இது தவிர சூரியனது கடும் வெப்பத்தினால் சின்னமுத்து, பொக்கிழிப்பான், செங்கண்மாரி போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் காலங்களில் நேர்த்தி வைத்து நீர்ச்சாதம் போன்றவற்றை அம்பாளுக்கு நைவேத்தியம் வைத்துக்கொள்வர்.
இன்னும் சில அடியார்கள் மடிப்பிச்சை எடுத்துவந்து ஆலயத்தில் காணிக்கை இடுவர். வேறு சிலர் நேர்த்தி வைத்து பொங்கல் இடுவர். உற்சவ காலங்களில் பல அடியார்களினால் அங்கப் பிரதட்சணை மேற்கொள்ளப்படும்.
கரகம்
முத்துமாரியம்மன் உற்பத்தி மூர்த்தி விசேடம்
முன்னொரு காலத்தில் கைலயங்கிரி நாதனாகிய சிவபிரான் தனது பாகத்திலிருந்த பாலாம்பிகை அம்பிகையைப் பார்த்து தமது மேனியினின்றும் விபூதியை எடுத்துக் கொடுத்து, இதனைக் கொண்டு உலகில் ஐந்தொழில்களையும் நிகழ்த்தி வருக என்று பணித்தார். உமாதேவியார் தம்மில் இருந்து 7 பேரைத் தோற்றுவித்து தம்பணியைத் தொடரலானார். அவ்வாறு தோற்று விக்கப்பட எழுவரில் ஒருவரே முத்துமாரித் தாயார் என்று கூறப்படுகின்றது.
முத்து மாரியம்மன் கிழவி ரூபமாக கோடியாக் கரையினின்றும் வந்து வல்வை வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளும் இம்மூர்த்தியை பலராலும் போற்றப் படுகின்ற சுயம்பு மூர்த்திக்கு ஒப்பாக போற்றுதலும் பொருத்தமாகும்.
பாற்செம்பு
அம்பாள் வலது பக்கக் கரங்களிலே வாளும் உடுக்கையும் இடது பக்கக்கரங்களிலே கபாலமும் சூலமும் பொருந்திய நான்கு கரங்களுடன் வலது திருப்பாதத்தை தொட்டுவிட்டு இடது திருப்பாதத்தை மடித்து வீற்றிருக்கின்றார்.
ஏந்திய வாழும் உடுக்கையும் மனித குலத்திற்கு துன்பம் செய்கின்ற கெட்ட ஆவிகளின் வலிமையை அடக்கி அவற்றினை நிலைகுலையச்செய்யும் பேற்றினை உணர்த்தி காத்தல் தொழிலை சிறப்பாக விளக்குகின்றது.
காபலத்தை ஏந்திய கரமானது பழியைச் செய்கின்றவர்களுக்கும் இரக்கமற்ற சிந்தனையுடைய மிருகங்களைப் போன்றவர்களுக்கும் தெய்வீக சிந்தனையற்ற வர்களுக்கும் திருந்தும்படியாக அவர்களது மனதைத்திருத்தி பக்தராக்கி உருகச்செய்கின்ற திருச்செயலை உணர்த்துகின்ற மானின் பார்வையைப் போன்ற கண், வருத்தமுடன் வரும் அடியார்கள் பால் கருணையைச் சொரிகின்றன.
தீக் கரகம்
தாயாரரின் மருட் பார்வையானது அடங்காபிடாரிகள் ஒடுங்க அவர்களை அவர்களை அடக்கியே வைப்பது என்பதை உணர்த்துகின்றது. தாயார் எப்போதும் நாகபடத்தை தனது திருமுடிமேல் குடியிருப்பது தினமும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சூரிய சந்திரர்களது ஒளி தமது திருமேனியின் பிரகாசத்தில் மழுங்காதிருக்க வேண்டும் என்ற கருணையிலே ஆகும்.
அக்காலத்தில் வாழ்ந்த கொடியவன் ஆன அரச குல மன்னன் ஆகிய மகிஷா சூரனோடு போர் புரிந்து அவன் சேனையை அழித்து அவனோடு சண்டையிட்டு அவனை வீழ்த்தி மார்பில் சூலத்தாற் குத்தி அவனை அழித்தார். அதன் காரணத்தினாலேயே அம்பாள் மகிஷாசுர மர்த்தினி என்றும் பெயர் பெற்றார். மழைக்கு மாரி என்னும் பெயர் உண்டு. அடியவர்களாகிய எங்கள் மீது அம்பாள் கருணையை மாரி போலப் பொழிந்து அவைகள் கலக்கமடையாமல் காப்பாற்றுகின்ற காரணத்தினால் மஹாமாரி எனப்படுகின்றாள்.
நீர்ச்சாதம்
மஹாமாரன் என்ற ஓர் அரசன் தனது சக்தியால் மருந்தால் நீக்கமுடியாத வைசூரி என்ற நோயை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தான். இதன் காரணத்தால் அவனை வதம்செய்ய அம்பாள் மஹாமாரி என்னும் மாபெரும் ரூபத்தை எடுத்து, அந்த அசுரனைக் கொன்று வைசூரியைத் தீர்த்து வைக்கின்ற காரணத்தினாலும் மஹாமாரி எனப்படுவதுடன் கிராம தேவதையாகவும் போற்றப்படுகின்றாள்.
அம்பாள் அக்கினி சுவாலை போல் மேல் நோக்கிய கூந்தலை உடையவளாகவும் இருக்கின்றாள்.
அம்பாளின் கருவறையைச் சுற்றிவர வெளிப்பக்கமாக இருக்கும் கற்சுவர்களின் ஓரத்தில் ஒரு அடி அகலத்தில் 3 பக்கமும் கட்டப்பட்டிருக்கும் குழிவான தேக்கத்தில் நீர் நிறைத்து வைக்கப்பட்டிருப்பதை யாவரும் அறிவர். அம்பாள் குளிர் காற்றை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் இப்படிக் கட்டப்பட்டு நீர் நிறைக்கப்பட்டிருக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.