மாங்கல்யான் விண்கலத்திலிருந்த LAM(440 Newton Liquid Apogee Motor) என்ஜின் இன்று புதன்கிழமை இந்திய நேரப்படி காலை 7.17இலிருந்து 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதில் செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தில் முதற்தடவையிலேயே வெற்றி பெற்ற நாடு என்ற பெருமையை தனதாக்கி கொண்டுள்ளது இந்தியா.
இந்தியாவின் செவ்வாய் நோக்கிய திட்டமானது 10க்கு மேற்பட்ட வெற்றிகரமான செய்மதி ஏவல்களுடனும். 2008ம் ஆண்டு சந்திரனை நோக்கி அனுப்பிய சந்திராயன்-1 விண்கலம் சந்திரசுற்றுவட்டப்பாதையில் பயணித்து சந்திரனில் நீர் உள்ளது என்பதற்க்கான முக்கிய ஆதாரத்தை கண்டறிந்ததை தொடர்ந்து, 2010ம் ஆண்டு செவ்வாயை நோக்கிய திட்டம் முன்மொழியப்பட்டு மத்திய அரசு 2011இலேயே ஒப்புதல் அளித்து 2012 இலேயே முறையாக அனுமதிக்கபட்டு 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி PSLV-C25 ரொக்கெட் மூலம் ஏவப்பட்டது.
தொடர்ந்து பயணித்த மாங்கல்யான் 6 தொடர்ச்சியான எரியூட்டல்கள் மூலம் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி பூமியின் சுற்ற்வட்டப்பாதையில் இருந்து செவ்வாயை நோக்கியதான தனது பயணத்தை ஆரம்பித்தது. பின்னர் செவ்வாயை நோக்கிய பயணத்தில் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி திரவ என்ஜின்கள் எரியூட்டப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதை நோக்கி செல்லுவது உறுதிப்படுத்தபடுகிறது. மீண்டும் இரண்டாவது தடவையாக 2014ம் ஜூன் மாதம் 14ம் திகதி பயணப்பாதை திருத்தபடுகிறது. இறுதியாக இம்மாதம் 14,15ம் திகதிகளில் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் செல்லுவதற்கான கட்டளைகள் இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ள இந்திய விண்வெளி மையம் இஸ்ரோவில் இருந்து மாங்கல்யானுக்கு வழங்கப்படுகின்றன.பெங்களூரில் இருந்து கட்டளைகள் மாங்கல்யானுக்கு சென்றடைய 12 நிமிடங்கள் எடுக்கின்றன.
இறுதியாக நேற்று முன்தினம் 22ம் திகதி செவ்வாயின் சுற்ற்வட்டப்பதைக்கான இறுதித்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு LAM எஞ்சினும் 4 செக்கன்கள் எரியூட்டப்பட்டு பரிசோத்திக்கப்ட்டு செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து 515 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் வலம்வருவதற்கு ஏற்ற முறையில் தயார் செய்யப்பட்டு இன்று இறுதியாக வெற்றிகரமாக சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது.
மேற்படி மாங்கல்யான் விண்கலமானது ஒரு சாதாரண காரை ஒத்த வெறுமனவே 1337 கிலோகிராம் ஆகும். இதற்கான தயாரிப்பு செலவு வெறுமனவே 74 மில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும். என்னடா வெறுமனவே 74 மில்லியன் டாலர் என்று சொல்கிறேன் என்று பாக்கிறீர்களா? மாங்கல்யான் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதைக்கு முன் சரியாக 48 மணிநேரம் முன்பு 22ம் திகதி சென்றடைந்த அமெரிக்காவின் MAVEN இன் தயாரிப்பு செலவு 671 மில்லியன் டாலர்கள் ஆகும்.
இவ்வளவும் சரி மாங்கல்யானின் நோக்கம் என்னவென்று பார்ப்போமானால், செவ்வாயின் வளிமண்டலம் பற்றி ஆராய்வது, செவ்வாயின் மேற்பரப்பை வரைபடமாக்குவது,மேலும் செவ்வாயில் உள்ள கனிம வளங்களை பற்றி ஆராய்ச்சி செய்யவுள்ள நிலையில் மேலதிகமாக இதில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சென்சரின் மூலம் செவ்வாய்க்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதுக்குரிய சாத்தியங்கள் உள்ள மெதேன் இருக்கின்றதா என்றும் பரிசோதிக்கவுள்ளது. கிட்டதட்ட ஒரே நோக்கத்துடன் அனுப்பட்ட MAVEN இல் இது இல்லை என்பதில்தான் இந்தியா இன்னும் ஒருபடி மேலே நிற்கின்றது.
மாங்கல்யானுடன் விண்வெளிபோட்டியில் இந்தியா மாபெரும் பாய்ச்சல் ஒன்றை செய்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களுக்கு இணையாக வந்துள்ளதோடு மட்டுமல்லாமல் இதன் தாக்கம் அரசியல் ரீதியாகவும் பிராந்தியத்தில் ஜப்பான் 2003ம் ஆண்டும். சீனா 2011ம் ஆண்டும் தோல்வியுற்றதில் இந்தியா ஒரே படியில் சாதித்து காட்டியுள்ளது.
என்னதான் இருந்தாலும் மாங்கல்யான் தொடர்பான சர்ச்சைகளும் ஆரம்பத்தில் இருந்தன. நாட்டின் சனத்தொகையில் 30 வீதமானோர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும்போது இத்திட்டம் அவசியம்தானா என்று இதற்கு அந்நேரம் பதிலளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மொத்த பட்ஜெட்டில் 1 வீதம்தான் இஸ்ரோவுக்காக ஒதுக்கபடுகிறது என பதிலளித்திருந்தார்.
மேலும் இந்தியா முதன்முறையாக செவ்வாய்க்கு விண்கலத்தை செலுத்துவதால் தொடர்ச்சியான எரியூட்டல்கள் மூலம் விண்கலத்தை நீண்ட தூரம் விண்வெளியில் நகர்த்தி செல்வது, சுற்றுவட்டப்பாதையில் விண்கலத்தை செலுத்தும் உத்திகள், விண்கலத்தின் நிலையை கண்டறிவதற்கான உத்திகள், விண்கலத்துடன் தொடர்பு கொள்ளும் உத்திகள் என்பவற்றை சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் உற்றுநோக்கியிருந்தன. இந்த மாங்கல்யான் வெற்றி தொழிநுட்பரீதியாகவும் இந்தியாவுக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றது.
செவ்வாய்க்கிரகத்தின் தமது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து அடுத்து இந்தியா அதன் வெற்றிகர தொழில்நுட்ப விடயங்களை சந்திரனுக்கான தமது பயணத்தில் புகுத்தி 2016ம் ஆண்டு ஏவப்பட்டவுள்ள சந்திராயன் 2க்கான வடிவமைப்புக்கான பணிகளில் துரிதமாக மேற்கொள்ளவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.