கம்பன்விழா 2017 நேற்று கொழும்பில் கோலாகலமாக ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2017 (வெள்ளிக்கிழமை)
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன்விழா 2017 நேற்று (09) கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. நேற்று மாலை வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஸ்மி திருக்கோயிலிலிருந்து கம்பன் பட ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகி மங்கள விளக்கேற்றல், கடவுள் வாழ்த்து, தலைமையுரை, தொடக்கவுரை என்பன இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து கம்பனின் அரசியல் என்னும் நூலும் கம்பன் விழா 2016 மற்றும் இசை விழா 2016 என்னும் இறுவெட்டுகள் வெளியிடப்பட்டன. நேற்றைய நிகழ்வின் இறுதியாக 'பெரிதும் ஆச்சரியம் தரும் அனுமனின் அறிவுத் தடுமாற்றம் எது' என்னும் பட்டி மண்டபம் இடம்பெற்றது.
1. மண்டோதரியின் மாட்சியில் மயங்கியதே
2. சீதையை சிறை மீட்க விரும்பியதே
3. மாயாசீதை வலையில் கலங்கியதே
ஆகிய தலைப்புக்களில் இருவர் பேசியிருந்தனர். இவற்றில் 'மாயாசீதை வலையில் கலங்கியதே' என்னும் அணி வெற்றிருந்தது. தினமும் காலை முதல் மாலை வரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விழாவில் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது
இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்ளத் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களான பேராசிரியர் சாலமன் பாப்பையா, புலவர் தா.கு. சுப்ரமணியம், பேராசிரியர் வி. அசோக்குமாரன், பட்டிமண்டபம் எஸ். ராஜா, திருமதி பாரதி பாஸ்கர், டாக்டர் ரி. ரெங்கராஜா, மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் , புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய அம்மாநில சட்டசபை சபாநாயகருமாகிய கௌரவ வெ. வைத்திலிங்கம் , புதுச்சேரி சட்டசபையின் துணைச் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து அவுஸ்திரேலியக் கம்பன்கழக அமைப்பாளர் திரு. ஜெ.ஜெயராம் ஆகியோர் வருகை தருகிறார்கள்.
இவர்களோடு சென்னைக் கம்பன்கழகம், புதுவைக் கம்பன்கழகம், வேலூர்க் கம்பன் கழகம், இராமேஸ்வரம் கம்பன் கழகம், திருச்சிக் கம்பன் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.