கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடி மஹா உற்சவத்தை முன்னிட்டுப் பன் நெடுங்காலமாக இடம்பெற்றுவரும் கதிர்காமக் கந்தன் ஆலயத்திற்கான பாதயாத்திரை வரலாற்றுப் பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கடந்த சனிக்கிழமை (04.6.2022) காலை ஆரம்பமானது.
சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தின் அனுசரணையுடன் வேல்சாமியின் ஆசியுடன் குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, ஆலயக் கருவறையில் பூசை வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட பாதயாத்திரைக்கான முருகப் பெருமானின் பிரதான வேல் கப்புறாளையால் பாத யாத்திரைக்குத் தலைமை தாங்கிச் செல்லும் மா.நடராஜா சாமியிடம் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து பஜனைகள் பாடியவாறு பாதயாத்திரையில் கலந்து கொண்ட அடியவர்கள் சந்நிதி முருகன் ஆலயத்தை வலம் வந்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சந்நிதி ஆலயச் சூழலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தைச் சென்றடைந்த பாத யாத்திரைக் குழுவினர் அங்கு இடம்பெற்ற சிறப்புப் பஜனை, பூசை வழிபாடுகளிலும், தொடர்ந்து காலை வேளை ஆகாரத்தையும் நிறைவு செய்தனர்.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்ற அடியவர்கள், தொடர்ந்து முற்பகல் 10 மணியளவில் மீண்டும் தமது பாதயாத்திரையை ஆரம்பித்து பக்திப் பரவசத்துடன் தொடர்ந்து வருகின்றனர்.
பாதயாத்திரைக் குழுவினர் தொடர்ச்சியாகப் பாதயாத்திரை மேற்கொண்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி கதிர்காமக் கந்தன் ஆடி மஹா உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா நாளன்று கதிர்காமக் கந்தன் சென்றடைந்து தரிசனம் மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, இந்த வருடப் பாதயாத்திரையின் ஆரம்பத்திலிருந்தே முன்னொரு போதும் இல்லாதவாறு வட- கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டுள்ளதுடன் பாத யாத்திரை செல்லும் பகுதிகளிலும் பல அடியவர்கள் இணைந்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை பாதயாத்திரையில் செல்லும் அடியவர்களுக்கு இன்று காலை யாழ் மிருசுவிலில் அமைந்துள்ள இராணுவ முகாம் வாசலில் உணவும் நீராகாரமும் வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.