இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முருகனை கதிர்காம கொடியேற்றம் காண வழியனுப்பி வைக்கும் பயண பூசை நேற்று நடைபெற்றது.
கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயண பூசையின் மகத்துவம்
மருதர் கதிர்காமரை முருகன் ஆட்கொண்டு பூசை செய்ய பணித்தபோது, தனக்கு பூசை செய்யும் முறை தெரியாது என கதிர்காமர் கூற, முருகன் அவரை கதிர்காமம் அழைத்துச் சென்று அங்கு பூசை செய்யும் முறையினை காட்டி, அதன் படி பூசை செய்யப் பணித்தார். வரும் போது கதிர்காமர் அங்கிருந்து ஒரு வேலினை எடுத்து வந்து சந்நிதியில் வைத்து பூசை செய்து வந்தார்.
கதிர்காம கொடியேற்றம் வந்தது. முருகன் கதிர்காமரிடம் தான் கதிர்காம கொடியேற்றம் காணசெல்ல வேண்டும் எனக் கூற, கதிர்காமரும் உழுத்தம்பிட்டு அவித்து முருகனுக்கு கொடுத்து கோயின் முகப்பு பாதை வரை அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்து விட்டு வந்தார்.
தற்காலத்திலும் கதிர்காம கொடியேற்றத்திற்கு முதல் நாள் மாலை உழுத்தம்பிட்டு படைத்து பக்தர்கள் புடைசூழ கோயிலின் முகப்பு வீதியில் முருகனை கதிர்காமம் அனுப்பி வைக்கும் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கதிர்காம தீர்த்தம் முடிந்து முருகன் சந்நிதிக்கு நள்ளிரவில் வரும் போது பயற்றம் துவையலும், இளநீரும் படைத்து வரவேற்கும் வைபவமும் இடம்பெறுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.