தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் திரு இன்குலாப் அவர்கள். மக்கள் பாவலர் (Makkal Ppavalar Inkulab) என செல்லமாக அழைக்கப்பட்டவர் . சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.
ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக காரணம் தெரிவித்து 2006 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தவர்.
பிரபாகரன் அவர்களுடன் கவிஞர் இன்குலாப்
இன்குலாப்பின் இயற்பெயர் எஸ். கே. எஸ். சாகுல் அமீது. தமிழகத்தின் கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியக் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் மீரா என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.
மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா.பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளர் ஆனார். கீழவெண்மணியில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைச் சந்த்திதிருந்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.
இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
'மார்க்சு முதல் மாசேதுங் வரை' என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள். மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.
உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இன்குலாப் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.