வல்வை றோ.த.க பாடசாலை மூடப்படும் அபாயம்? தக்கவைக்க நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தற்பொழுது மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து செல்வதால் அப்பாடசாலை மூடப்படும் ஒரு அபாயத்தை எட்டிவருவதாக நம்பப்படுகின்றது. இந்த வருடம் பாடசாலையின் தரம் 1 ற்கான புதிய வகுப்பில் வெறும் 2 மாணவர்களே சேர்ந்துள்ளனர்.
குறித்த இந்த அபாயத்தைப் போக்கி மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ரேவடிப் பகுதியில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவில், இந்தப் பாடசாலையில் ஒரு சிறார் முன்பள்ளி ஒன்று அமைக்கும் முயற்சி ஒன்று எடுக்கப்பட்டுவருகின்றது. இதன் மூலம் படிப்படியாக பாடசாலையின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முற்றுமுழுதாக இலவசமாக அமையவுள்ள இந்த முன்பள்ளி முதலில் இப்பகுதியில் உள்ள தனியார் வீடு ஒன்றிலும், பின்னர் ஒரு சில மாதங்களில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் கீழ் கட்டத்திலும் இயங்கவுள்ளதாக அறியமுடிகிறது.
மேலும் முன்பள்ளி ஆசிரியர்களிற்கான கொடுப்பனவின் ஒரு பகுதியினை வடமாகான கல்வி அமைச்சின் உதவியுடன் வடமராட்சி வலயம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
90 களின் ஆரம்பம் வரை வல்வையில் தரம் 5 வரையான மாணவர்களிற்கான சிறந்த பாடசாலையாக றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.