தகவல் தொழில்நுட்பத்தால் ஒர் கிராமமாக சுருங்கிக்கொண்டிருக்கும் இந்த அகலப்பரந்த உலகில் துளிர்விட்டு எழும் யாழ் ஐடி ஹப்(Yarl IT Hub) இன் மற்றுமொரு மாபெரும் முயற்சி யாழ் கீக் சாலன்ஜ்(Yarl Geek Challenge).
தகவல் தொழில்நுட்ப அறிவும் புத்தாக்க சிந்தனையும் கொண்ட இளைஞர் யுவதிகளின் அடி மனதுகளில் பொதிந்து கிடக்கும் புத்தாக்க சிந்தனைகளை வெளியுலகுக்கு கொண்டு வருவதோடு புதிய முயற்சியாண்மைகளுக்கு தேவையான உதவிகளை பெற்றுத் தந்து அவற்றை நிறுவனங்களாக உருவாக்கும் முயற்சியே “யாழ் கீக் சாலன்ஜ்”.
யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு தகவல் தொழில்நுட்பவியலாளர்களையும் கல்விமான்களையும் சமூக நலன்விரும்பிகளையும் தன்னகத்தே இணைத்து வளர்ந்து வரும் அமைப்பான யாழ் ஐடி ஹப், இந்த சமூக பயன்மிகு கைங்கரியத்தை அரங்கேற்றியிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் தொழில்முயற்சியொன்றை சுயமாக ஆரம்பிக்கும் கலாச்சாரத்தை ஆழ ஊன்றுவதிலும் நமது ஆக்கம் என்று சொல்லக்கூடிய புத்தாக்க முயற்சிகளை உருவாக்குவதையும் யாழ் ஐடி ஹப்பின் நோக்கமாகும். யாழ்ப்பாணத்தில் இப்பாரியதொரு முயற்சியை இளைஞர்கள் அரங்கேற்றியிருப்பது உலகெலாம் வாழும் தகவல் தொழில்நுட்பவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யாழ் கீக் சாலன்ஜ் - 2014 என்கிற தொழில்முயற்சி ஆரம்பிப்புக்களுக்கான இந்த போட்டியானது லங்கன் ஏன்ஜல் வலையமைப்புடன் (Lankan Angel Network) என்கிற முதலீட்டாளர்களின் வலையமைப்பை இணைத்துக்கொண்டு இம்முறை யாழில் நடத்தப்பட்டது.
லங்கன் ஏன்ஜல் வலையமைப்புடன் டயலோக் ஐடியா மார்ட்(Dialog's Idea Mart), 99x டெக்னோலொயீஸ்(99x Technologies), WSO2, செனிட் (hSenid), கிரியேட்டிவ் சொலுசன்ஸ் (Creative Solutions) போன்ற மென்பொருள் துறைசார்ந்த ஜாம்பவான் நிறுவனங்களும் அணுசரனையாளர்களாக இணைந்துள்ளன. கனிஷ்ட, சிரேஷ்ட என்று இரு பிரிவுகளாக நடக்கும் இப்போட்டியானது கனிஷ்ட பிரிவு பாடசாலை மாணவர்களின் கணினி நிரலாக்கம் தொடர்பான அறிவையும் தேர்ச்சியையும் ஊக்கப்படுத்துவற்கான முயற்சியாகும்.
யாழ் கீக் சாலன்ஜ் இன் மூன்றாவது பருவகாலம் கடந்த வருடங்களையும் விட வேறுபட்டு, செயற்படக்கூடிய முன்மாதிரி(Working Prototype) ஒன்றை கொண்டிருக்க வேண்டும் என்பதை அத்தியாவசியமாக்கியதுடன் மூன்று கட்டங்களாக போட்டியை நடத்துகின்றது. முதல்கட்டத்தில் பங்குகொள்ளும் அணிகள், தமது அணியின் திட்டத்தை விளக்கி அதை எவ்வாறு தொழிநுட்ப ரீதியாக செயற்படுத்தலாம் மற்றும் வர்த்தக ரீதியாக வருமானமீட்டக் கூடியதாக மாற்றலாம் என்று திட்ட முன்வரைபை(Proposals) சமர்ப்பிக்க வேண்டும்.
இம்முறை கடந்த முறையை காட்டிலும் இருமடங்கிற்குக்கும் அதிகமான அணிகள் சமர்ப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதிகரித்த பங்கேற்ப்புக்கு புளு ஓசன் வென்சர்ஸ்(Blue Ocean Ventures) வழங்கவுள்ள 1 மில்லியன் ரூபா முதலீடும் ஒரு முக்கிய காரணமாகும். சிறப்பாக தொழிற்பட்டு முயற்சியாண்மையை தன்னகத்தே கொண்ட சிரேஷ்ட பிரிவு அணிக்கு இம்முதலீடு வழங்கப்படவுள்ளது. 38 கனிஷ்ட அணிகள், 29 சிரேஷ்ட அணிகளும் முதலாவது கட்டத்திற்காக பதிவு செய்திருந்தன.
இரண்டாவது கட்ட தேர்வுகளுக்காக, இலங்கை முழுவதும் இருந்து அழைக்கப்பட்ட புத்தாக்க சிந்தனை கொண்ட பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அணிகள் கடந்த ஒக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நல்லூரில் தமது புத்தாக்க திட்டங்களை செயற்படுத்தி முன்வைப்பதற்காக ஒன்றுகூடியிருந்தன.
பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய 11 கனிஷ்ட அணிகள், பல்கலைக்கழக மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வியகங்களிருந்து வருகை தந்திருந்த தகவல் தொழில்நுட்பவியலாளர்களின் 20 சிரேஷ்ட அணிகள் தத்தமது கண்டுபிடிப்புக்களோடு நல்லூரில் களம் கண்டனர்.
இவ்வணிகளின் ஆலோசகர்களாக 25 தொழிற்துறை நிபுணர்களும் நல்லூரை வந்தடைந்தனர். போட்டியாளர்கள் வெளிப்படுத்தும் புதிய தயாரிப்புக்களில் முதலீடு செய்வதற்காக பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அங்கு பிரசன்னம் ஆகியிருந்தனர். அணிகளின் கண்டுபிடிப்புக்களை மதிப்பிடுவதற்காக 10 நடுவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் பல தொழிற்துறை வல்லுனர்கள், அனுசரணையாளர்களையும் உள்ளடக்கியதாக 50 க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பவியலாலர்களை தன்னார்வ தொண்டர்களாக இணைத்து வெகு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றன இரண்டாம் கட்ட தேர்வுகள்.
ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்களை அங்கே வெளிப்படுத்திய விதமும் அவர்களது புத்தாக்க சிந்தனையும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது. இலங்கையிலிருந்தும் வர்த்தக நயம் மிக்க தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் விரைவில் வெளிவரும் என்பதனை அந்த 3 நாட்கள் பறைசாற்றியிருந்தன.
ஒவ்வொரு அணியும் தத்தமது திட்டங்களை செயற்படக்கூடிய முன்மாதிரி ஒன்றின் உதவியுடன் விபரிக்குமாறு கோரப்பட்டிருந்தனர். அவர்களின் கற்பனை வளங்களாலும் கடும் உழைப்பாலும் முன்மொழியப்பட்ட கண்டுபிடிப்புக்களை நடுவர்கள் மதிப்பிட்டிருந்தனர். அவர்களின் மதிப்பிடுகைகள்,
• புதுமையான ஆக்கபூர்வமான தயாரிப்பு (innovative)
• குறைந்தபட்ச செயற்படக்கூடிய முன்மாதிரியின் முழுமைதன்மை (completeness of minimal viable product)
• பிரதியாக்கம் இல்லாத சுய தயாரிப்பு (originality)
• தொழில்நுட்பரீதியாக ஸ்ரத்தன்மை(Technical stability of the product)
• பயன்படுதன்மை மற்றூம் பயனாளிகளின் அனுபவம் (usability and user experience)
• வர்த்தக ரீதியான உறுதியான தயாரிப்பு (sustainable business model)
என்ற அடிப்படைகளில் மேற்கொள்ளப்பட்டன.
சிரேஷ்ட அணிகளின் போட்டியில் முதலில் பங்குபற்றிய Puissance அணி டிஜிட்டல் ரீதியான் மின்மாணியையும் அதனை வலைத்தளங்களோடு இணைத்து பயனாளர் பயன்படுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தினர். சிறப்பான கண்டுபிடிப்பாக இருந்த போதும், அதன் பொருளாதர ரீதியான முதலீட்டல் கவர்ச்சியானதாக அமையவில்லை.
தொடர்ந்து வந்த Cyborgs அணி தன்னியக்க ரீதியாக இயங்கக்கூடிய பாரம் தூக்கும் ரோபோ வினை முன்மொழிந்தாலும் அவர்களின் செயற்படக்கூடிய முன்மாதிரி முழுமையடைந்திராத்தினால் நடுவர்கள் நிராகரித்தனர்.
அடுத்ததாக மேடையேறிய Strikers அணி பலரதும் பாராட்டுக்களை பெற்றது. மனிதர்களை எங்கள் பேச்சால் கட்டுப்படுத்துவதுபோல் எங்கள் வீடுகளில் இருக்கும் மின்விசிறி, மின்குமிழ் ஆகியவற்றை நாங்கள் இருந்த இடத்தில் இருந்தே வாய் வார்த்தைகளால் இயக்கக்கூடியதாக இருந்தால் எப்படியிருக்கும்? Strikers அணியினர் இது நிஜமாகும் என்பதை நிரூபித்திருந்தனர்.
போட்டி நடந்த இரண்டே நாட்களில் அவர்கள் தங்களது வாய் வார்த்தைகளால் கட்டுப்படுத்த கூடியவாறான மின்குமிழை தயாரித்திருந்தனர். அவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு மின்குமிழ் ஒளிர்ந்தும், அணைந்தும் "Yes Sir" என்று இயந்திர குரலில் கணினி பதில் கூறியும் இயங்கிய விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. படுக்கையில் இருந்தவாறே நாம் Good Night கூறியதும் அணையும் மின்குமிழ்கள் வெகுவிரைவில் இலங்கையில் தயாராகும்; அதற்கான களம் யாழில் அமைக்கப்பட்டிருக்கின்றது.
மொறட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து பங்குபற்றிய Tracklers அணியின் தன்னியக்க கட்டுப்பாட்டு கருவி பல விதங்களில் பயன்படுத்தக் கூடியதாகவிருந்தது. கொழும்பில் இருக்கும் விவசாயி ஒருவர் கிளிநொச்சியில் இருக்கும் தன்னுடைய தோட்டத்தின் வெப்பநிலையை அறிந்து கொழும்பிலிருந்தவாறே நீர் பாய்ச்சும் இயந்திரத்தை இயக்ககூடியதான முறையும் அவர்களால் உதாரணமாக விபரிக்கப்பட்டது.
இவர்களின் தயாரித்திருந்த முன்மாதிரியையும் மற்றைய ஆயத்தங்களையும் கண்ட முதலீட்டாளர்கள், எப்பொழுது இந்த கருவி தயாராகும் என வினவிய விதம் அவர்கள் இந்த தயாரிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிக்காட்டியது.
அதிகரித்து வரும் வாகனங்களின் தொகையும், அவற்றிற்கான தரிப்பிடங்களை செல்லுமிடங்களில் தேடுவதும் இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களாகும். இக்கால தேவை அறிந்து கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து பங்குபற்றிய Azers அணியினர் வாகனங்களின் நிறம் மற்றும் இலக்கதகடுகளை வைத்து அடையாளம் கண்டு அவற்றிற்கான தரிப்பிட கதவுகளை தன்னியக்கமாக இயக்கக்கூடிய முறையினை முன்வைத்திருந்தனர்.
அவர்கள் பயன்படுத்திய படிமுறைத்தீர்வு(algorithm) பெரும்பாலானோரை கவர்ந்திருந்தது. மேலும் இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் வாகனங்கள் தொடர்பாக அதிகரித்து வரும் பிரச்சனைகளை குறைக்க உதவும் என்பது திண்ணம். இத்திட்டத்தை அரச வலையமைப்புடனும் தொடர்மாடி குடியிருப்புகளிலும் பயன்படுத்துவது சாலப்பொருத்தமாக இருக்கும் என விருந்தினர்கள் கருத்திட்டிருந்தனர்.
GPS இன் உதவியுடன் இயங்க கூடியவாறான பஸ்களில் பயன்படுத்தக்கூடிய தரிப்பிடங்கள் அறிவிக்கும் தொகுதி Elite அணியினால் பிரேரிக்கப்பட்டது. RED KITES அணியினால் இலத்திரனியல் முறையில் இயங்கும் பஸ் பதிவு முறை சிறப்பாக விளக்கப்பட்டது. இப்படியாக ஏராளமான புத்தாக்க முயற்சிகளை அன்றைய தினம் நாம் கண்டிருந்தோம்.
இவ்வாறான புதிய கண்டுபிப்புக்களை அன்றைய தினம் வருகை தந்திருந்த முதலீட்டாளர்கள் வெகு உன்னிப்பாக கவனித்தவண்ணம் அமர்ந்திருந்தனர். போட்டி வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், முதலீட்டளர்களை கவரும் பட்சத்தில், அத்தயாரிப்புக்கள் வெகு விரைவில் சந்தை நிறுவனங்களால் கவரப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
முதலீட்டையும் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுத் தர யாழ் ஐடி ஹப் முழுவதுமாக முயற்சியில் ஈடுபட்டாலும் அவற்றை பெற்று வெற்றிகரமான நிறுவனமாக முயற்சியாண்மையாக மாற்றுவது அணிகளின் விடா முயற்சியிலேயே தங்கியுள்ளது.
இப்படியாக கோலாகலமாக சிறப்பான முறையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்வில் தெரிவு செய்யப்பட்ட ஆறு அணிகளும் மீள் வாய்ப்பின்(Wild Card Round) மூலம் தெரிவு செய்யப்பட்ட நான்குமாக பத்து அணிகள் இறுதிப்போட்டிக்காக கொழும்பு வருகை தந்துள்ளன.
யாழ் கீக் சாலன்ஜ் இன் மாபெரும் இறுதிப்போட்டியானது நவம்பர் 22 அன்று கொழும்பில் டயலோக் Future World மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ் இறுதிப்போட்டியில் புதிய தயாரிப்புக்களை காண மேலும் பல முதலீட்டாளர்களும் கலந்துகொள்ளவுள்ளமை போட்டியாளர்களுக்கு மகிழ்சி தரும் விடயமாகும்.
இலங்கை முழுவதையும் இணைத்து இவ் அரிய வகை போட்டியினை உருவாக்கியுள்ள யாழ் ஐடி ஹப், மேலும் பல தகவல் தொழில்நுட்ப செய்ற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது எல்லோருடைய அவாவாகும். யாழில் உருவாகும் இந்த புத்துயிர் முயற்சியினூடாக எம் எல்லோரையும் பெருமைப்படுத்தும் புதிய கண்டு பிடிப்புக்கள் உருவாக வேண்டும் இதனூடாக எம் இளைஞர் யுவதிகளின் திறமைகள வெளிவருவதுடன் வர்த்தக ரீதியில் இலாபமீட்டக்கூடிய பல படைப்புக்கள் உருவாகும் என்பதில் துளியும் ஐயமில்லை.
மாறும் தொழில் நுட்ப உலகில் நாங்களும் நெஞ்சை நிமிர்த்தி இது எம்மவர் படைப்பு என்ற கூறும் காலம் எம்மை நெருங்குகின்றது. யாழ் ஐடி ஹப்பின் தகவல் தொழில் நுட்ப புரட்சி வெற்றி நடை போடவும், புதிய முயற்சிகள் வெற்றி பெறவும் இறை ஆசி கிட்டட்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.