2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் இங்கு வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் துயர்மிகு நாட்களில் ஒன்றாகிய முள்ளிவாய்க்கால் னப்படுகொலை நினைவு நாளான மே 18ல் மீண்டும் ஒரு தடவை நாம் கூடியுள்ளோம். இந்த நாள் எங்கள் தேசத்தின் மீது தொடர்ந்து வந்த சிங்கள அரசுகள் நிகழ்த்தி வருகின்ற இனவழிப்பின் பாரதூரத் தன்மையையும், அச்ச மூட்டும் அதன் பரிமாணத்தையும், அவற்றால் எங்களுக்கு ஏற்பட்ட தாங்கொணா இழப்புகளையும் நினைவு கூர்வதற்கான ஒரு நாள் மட்டுமல்ல.
எத்தனை துயரங்கள் வந்தாலும் அழுத்தங்கள் தரப்பட்டாலும் நாங்கள் தோற்றுப் போக மாட்டோம்.முள்ளிவாய்க்கால் எமது எழுச்சியின் முடிவல்ல எனப் பிரகடனம் செய்கின்ற ஒரு நாளுமாகும்.
இந்த நாளில் முள்ளிவாய்க்கால் மண்ணிலே வீழ்ந்திட்ட பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்து விதையாகிப்போன மற்றும் தங்கள் எதிர்காலத்தை -வாழ்க்கையை எங்களுக்காக தியாகம் செய்து இன்று துன்பத்தில் வாடுகின்ற எங்கள் செல்வங்களையும் நினைந்து நாங்கள் கண்ணீர் சிந்துகின்றோம்.
முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்தும் அதனை ஒட்டிய நாட்களிலும் தாயகமெங்கும் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட எங்கள் உறவுகளையும் நாங்கள் இந்த நேரத்தில் நினைவு கூருகின்றோம்.
உலகின் மனசாட்சி எங்கள் துயரங்களைத் தொடர்ந்தும் பாராமுகமாய் உள்ளது. எங்களுக்கு நடந்ததை இனப்படுகொலை என்றோ, அல்லது இன்றும் எங்களுக்கு நடந்து வருவதை இனவழிப்பு என்றோ பெயரிட உலகின் அதிகார சக்திகள் மறுத்து வருவதையும் இந்த நேரத்தில் நாங்கள் கவலையுடன் கவனித்தே நிற்கின்றோம்.
சிங்கள மக்களின் மனவுலகு விசித்திரமானது. அது மகாவம்ச ஐதீகத்தினடிப்படையில் பௌத்த- சிங்கள மேலாதிக்க மனப்பாங்காகப் பின்னப்பட்டுள்ளது. இத்தீவு முழுவதும் தமக்கென வாக்களிக்கப்பட்ட பூமி என்ற மகாவம்ச சொல்லாடலை உளமார நம்பும் சிங்கள தேசம் அதனையே தனது இயக்கு சக்தியாகக் கொண்டுள்ளது. 1948ல் ஆங்கிலேயர் வெளியேறிய போது அதிட்டவசமாக முழுத் தீவையும் ஆள்வதற்குத் தமக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பௌத்த-சிங்கள பேரினவாதம் ஏனைய இனங்களை இனவழிப்புச் செய்ய ஆரம்பித்தது.
இனவழிப்பை நோக்காகக் கொண்டு சிறீலங்கா அரசியல் யாப்பு உட்பட அரசின் சகல கட்டுமானங்களும் ஆரம்பம் முதலே கட்டியெழுப்பப்பட்டன.பௌத்த – சிங்கள மேம்போக்கான மனப்பாங்கால் அவர்களிடையே உண்மையில் ஏற்பட்டுள்ள பயத்தை பேரினவாதமாக வளர்த்தெடுத்த சிங்கள அரசியல்வாதிகள் தமது தேர்தல் வெற்றிகளுக்கானதும் ஊழல்களுக்கானதுமான கவசமாக வெற்றிகரமாகப் பாவித்து வருகின்றார்கள்.
சிங்கள மக்களின் பேரினவாத அபிலாசைகளை பூர்த்தி செய்பவர்களே தேரதல்கள் மூலம் அரசியல் தலைமைப் பீடங்களுக்கு வர முடியும் என்பதை சிங்கள மக்கள்தான் தமது வாக்களிக்கும் முறை மூலம் தமது அரசியல்வாதிகளுக்கு வெளிக்காட்டி வருகின்றனர். அதுவே மறுதலையாக அந்த அரசியல்வாதிகள் அதே மக்களைச் சுரண்டுவதற்கான பாதுகாப்பாகவும் மாறியுள்ளது.
சிங்கள மக்களின் இந்த மனப்பாங்கு சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீதும் ஏனைய இனங்கள் மீதும் தொடர்ச்சியாக நிகழ்த்துகின்ற இனவழிப்பை மனிதாபிமானப் பிரச்சினையாகத்தன்னும் கருத முடியாத மன இறுக்கத்தை அவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சிங்கள மக்களின் இந்த மனப்பாங்கை பயன்படுத்துவதன் மூலம் தமது ஊழல்களையும், சுரண்டல்களையும் பெரும்பான்மை மக்களிடையே பேசு பொருளாகாமல் தவிர்க்க முடியும் என்ற பாடத்தையும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பௌத்த மத நிறுவனங்களும் அறிந்து கொண்டுள்ளனர்.
ஆனால் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னான காலம் என்பது தனியே அரசின் ஏனைய இனங்கள் மீதான இனவழிப்பு என்பதுடன் மட்டுப்பட்டிருக்கவில்லை. ஆரம்பம் முதலே அரசின் உள்ளடக்கம் ஊழல் என்பதையும் பொறுப்புக் கூறாத்தன்மையையும் தன்னகத்தே கொண்டிருந்தது. சகல அரச இயந்திரங்களும் இனவழிப்பை நோக்காகக் கொண்டிருந்ததால் மக்களுக்கான பேண்தகு பொருளாதார அபிவிருத்தி இலக்குகள் இலகுவில் தவிர்க்கப்பட்டன அல்லது புறந்தள்ளப்பட்டன.ஏனைய இனங்கள் நன்மை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகப் பொருளாதார இலக்குகள் மாற்றியமைக்கப்பட்டன.
பெருமளவு நிதியும் மனித வளமும் ஏனைய இனங்களின் அடையாளங்களை அழிப்தற்காக இருப்புகளைச் சிதைப்பதற்காக செலவு செய்யப்பட்டன. இதே வேளை பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் அரசியல் கோட்பாடாக கவசமாக ஒற்றையாட்சி முறைமை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தப்பட்டது. மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டமை பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தாமை சிங்கள அரசுக்கு ஏனைய தேசங்களின் இருப்பின் மீதும் ஆதிக்கத்தைச் செலுத்தலாம் என்ற துணிவைத் தந்தது.
மாறாக தமிழ் மக்கள் இனவழிப்புக்கு எதிராக எதிர்ப்பை வெளிக்காட்டியபோது – உரிமைகளைக் கோரிய போது சிங்கள அரசு வன்முறையை பதிலாகக் கையிலெடுத்தது. அரசின் அடக்குமுறைகள் அழித்தொழிப்புகளுக்குப் பாதுகாப்பாகத் தமிழர்களின் எதிர்ப்பு வடிவங்களும் காலத்துக்குக் காலம் பரிமாண வளர்ச்சியடைந்தது. அத்தகைய வளர்ச்சிக்கு ஏற்ப அரசின் வன்முறைக் கொடூரங்களும் மிகையாக அதிகரிக்கத் தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக 2009ல் முள்ளிவாய்க்காலில் ஒரு பாரிய இனப்படுகொலை தமிழ் மக்கள் மீது ராஜபக்ச தலைமைதாங்கிய சிங்கள அரசால் நடத்தி முடிக்கப்பட்டது.சிறீலங்கா அரசின் அந்த வெற்றி பௌத்த-சிங்கள மேலாதிக்க வெற்றியாக மடைமாற்றம் செய்யப்பட்டது.
நாட்டில் வெற்றிவாதம் திட்டமிடப்பட்ட வகையில் கட்டமைக்கப்பட்டது.ஏனைய இனங்கள் மற்றும் மீதான மேலாண்மையையும் தீவு முழுவதும் தமக்கென வாக்களிக்கப்பட்டது என்ற பேரினவாதச் சித்தாந்தங்களையும் மேலும் வலியுறுத்துவதன் மூலம் எந்த இனத்திற்கும் உரிய தனித்துவமான உரிமைகளை மறுதலிக்கும் வகையில் பௌத்த-சிங்கள பேரினவாத்தை மேலும் இறுக்கமடையச் செய்வதற்கு இந்த போர் வெற்றிவாதம் பயன்படுத்தப்பட்டது. பௌத்த-சிங்கள மேலாதிக்கம் அதன் வழி வந்த தீவு முழுவதும் தமக்கு வாக்களிக்கப்பட்ட பூமி என்ற கற்பிதம் அதனால் ஏற்பட்ட பேரினவாத அபிலாசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை ராஜபக்ச அரசு கட்டியெழுப்பிய போர் வெற்றிவாதம் சிங்கள மக்களுக்கு வழங்கியது. அதேவேளை அந்த வெற்றியின் நாயகர்களாக ராஜபக்ச குடும்பம் தங்களை நிலை நிறுத்தும் வாய்பையும் தவறவிடவில்லை.
70 ஆண்டு கால பேரினவாத அரசியலின் விளைவை தற்போது பொருளாதாரச் சீர்குலைவாக நாடு அனுபவிக்கின்றது. இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவின் தாக்கங்கள் அனைத்து மக்களையும் தேசம் இனம் என்ற வேறுபாடு இன்றி பாதித்துள்ளது.
ஏழைகள் மட்டுமன்றி நடுத்தர வர்க்கத்தினர் மேற்தட்டு வர்க்கத்தினர் முதலாளிகள் தொழிலாளிகள் என அனைவரையும் பாதித்துள்ளது. உண்மையை ஆராய்ந்தறிய வரலாறு தந்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ராஜபக்ச ஆட்சியை மட்டும் காரணமாக்கி ஏனைய அரசாங்கங்களையும் எப்போதும் அழிவுகளின் பங்காளிகளாக இருக்கின்ற அதிகார வர்க்கத்தையும் இவற்றுக்கெல்லாம் மௌனமாக ஆதரவளித்த தங்களையும் இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்து தம்மிடையே புரையோடிப்போயுள்ள பௌத்த-சிங்கள பேரினவாத மனநிலையையும் அதன் நவீன வெளிப்பாடான வெற்றிவாதத்தையும் பொருளாதார பேரழிவுக்கான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யும் போக்கையே இன்று போராடுபவர்களிடையேயும் எம்மால் பார்க்க முடிகின்றது.
ஊழலுக்கும் அதிகார துஸ்பிரயோகங்களுக்கும் பொறுப்புக் கூற அழைப்பு விடுக்கும் போராட்டக்காரர்களால்
இன்றுவரை தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு மட்டுமல்ல இறுதி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் செய்யப்பட்ட இனவழிப்புக்காகத் தன்னும் பொறுப்புக் கூற வேண்டும் என இன்றுவரை கூற முடியவில்லை.
இந்த மே 18ல் தொடர்ந்து வந்த சிறீலங்கா அரசாங்கங்கள் தமிழ் மக்களின் தேசியத்தின் மீதான இனவழிப்பு
நடவடிக்கைகளையும் ஒட்டு மொத்தமாக சிங்கள அரசுகள் செய்த பாரிய படுகொலைகளையும் ஈற்றில் 2009ல் முள்ளிவாய்க்காலில் உச்சத்தை எட்டிய இனப்படுகொலையையும் நினைவு கூரும் நாம் சிங்கள மக்களுக்கு கூற விளைவது ஒன்றை மட்டுமே! இன்றைய உங்களின் நிலைக்கு நீங்கள் வினா ஏதுமின்றி தொடர்ந்தும் ஒற்றையை மையப்படுத்திய பௌத்த-சிங்களபேரினவாத அபிலாசைகளின்பாற்பட்டு சிங்கள அரசாங்கங்களுக்கு அளித்து வந்த ஆதரவின் விளைவையே இன்று நாடுஅனுபவிக்கின்றது.
இந் நாளில் எங்களின் ஆத்மார்த்த கோரிக்கைகளை மீண்டும் ஒரு தடைவ வலியுறுத்த விரும்புகின்றோம்.
1. நினைவுகூர்தலுக்கான உரிமையும் ஓர் அடிப்படை உரிமை. அது ஈழத்தமிழர்களின் பண்பாட்டு உரிமையும் கூட. ஈழத்தமிழர்களின் அந்த உரிமையை சிறிலங்கா அரசு ஒரு போதும் தடுக்க முடியாது.
2. தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மீள வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் வடக்கு-கிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிங்கள-பௌத்த மயமாக்கப்படும் தமிழர் தாயகம் உட்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
3. ஈழத்தமிழர்களின் பூர்வீக தாயகமாக வடக்கு – கிழக்கை அங்கீகரித்தல் வேண்டும்.
4. பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்கான ஒரு பொறிமுறையே ஒற்றையாட்சி முறைமை என்பதை ஏற்றுக் கொண்டு சிறிலங்காவின் ஒற்றையாட்சியை அகற்றித் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும்.
5. தமிழர்கள் ஒரு தேசமாக தங்களை அடையாளப்படுத்தத் தேவையான அனைத்து இயல்புகளையும் பண்புகளையும் கொண்டவர்கள் என்பதையும் அதன்வழி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமையும் ஒரு போதும் பராதீனப்படுத்தவியலாத இறைமையும் உள்ளது என்பதும் ஏற்கப்பட வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.