ராஜேந்திரனின் கலையில் உருவான சரஸ்வதி சிலை திறப்பு விழா ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2015 (வெள்ளிக்கிழமை)
வல்வையின் பல்கலை கலைஞனும், சித்திரக் கலை ஆசிரியருமான திரு.வெற்றிவடிவேல் ராஜேந்திரனால், யாழ். ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் வடிவமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்புவிழா, கடந்த 03.02.2015 அன்று இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக இப்பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர் மு.சிற்றம்பலமும் சிறப்பு விருந்தினாராக மருதங்ககேணி கோட்டக் கல்வி அலுவலர் ச.திரவியராசாவும், கௌரவவிருந்தினராக ஓய்வுபெற்ற தபால் அதிபர் வி. இராஜேந்திரமும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
குறித்த சரஸ்வதி சிலை மற்றும் இதனுடன் கூடிய தாமரைத் தடாகம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் ஆனது, கடந்த 03.02.2014 ஆம் அன்று இடம்பெற்று, ராஜேந்திரனால், பிள்ளையார் சிலை, சரஸ்வதி சிலை மற்றும் அதனுடன் கூடிய தாமரை தடாகம் என்பன பாடசாலையிலேயே பாடசாலை மாணவர்களின் உதவியுடன் கடந்த ஒரு வருடத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
திறப்பு விழாவில் திரு.இராஜேந்திரன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டிருந்ததுடன், இந்த சிலை நிர்மாணிப்புக்கு அனுசரணை வழங்கியிருந்த பாடசாலையின் பழைய மாணவர்களால் இராஜேந்திரனுக்கு தங்க மோதிரம் ஒன்றும் அணிவிக்கப்பட்டது.
ஆழியவளை சி.சி.த.க தற்பொழுது சித்திரக்கலை ஆசிரியராகப் பணியாற்றும் இராஜேந்திரன், யாழ் பல்கலை கழக நுண்கலை – சித்திரப் பிரிவு பட்டதாரி மாணவர் ஆவார்.
அத்துடன் இவர் வல்வை குழவிகள் கலா மன்றத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர் என்பதுடன், வல்வையின் பட்டப் போட்டி, மற்றும் இந்திரவிழா போன்றவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்த தவறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.