தமிழர்களின் கடல்சார் தொன்மையை வெளிகொணர்ந்த ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2023 (சனிக்கிழமை)
கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60. திருச்சி உறையூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் சிவ பாலசுப்ரமணியன். பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர்தான்.
மேலும், குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. இதனிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்கான சிகிச்சை பெற்றுவந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பண்டைய கால தமிழர்களின் கடல் அறிவை உலகுக்கு வெளிப்படுத்திய கடல்வழி ஆராய்ச்சியாளரும், தமிழ்சார் ஆய்வாளருமான ஒரிசா பாலு, உலக வரலாற்றில் தமிழர்களின் மதிப்பை உயர்த்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அவரது மறைவு பேரிழப்பு” என சமூக வலைதளங்களிலும் அஞ்சலிக் குறிப்புகள் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த 2020-ல் பெரும்பாக்கம் அரசு கல்லூரியில் ஒரிசா பாலு பேசியதன் சிறிய தொகுப்பு: "தமிழர்கள் பண்டைக் காலம் தொட்டே நாகரிக வளர்ச்சி அடைந்தவர்கள். தங்களது வணிகத்தின் மூலமாகவும் படையெடுப்புகளின் வாயிலாகவும் பல நாடுகளுக்குப் பரவி இருக்கிறார்கள். அங்கெல்லாம் தமிழ் அடையாளத்தை பதித்திருக்கிறார்கள். அந்த வகையில் பல சுவடுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, உலகின் பல நாடுகளில் பல ஊர்ப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. பல பழங்குடி இனங்கள் பண்டைய தமிழ்ச் சொற்களை அப்படியே பயில்கிறார்கள்.
நாம் மறந்து போன சங்ககால சொற்களை அவர்கள் இன்னமும் பயன்படுத்துகிறார்கள். பண்டைத் தமிழரின் கடல் அறிவு என்பது மிகவும் வியக்கத்தக்கது. பல்வேறு வகையான கப்பல்களை பண்டைக் காலம் தொட்டே தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். கடலின் நீரோட்டம் அறிந்து கலங்களை செலுத்தி இருக்கிறார்கள். கடல்வாழ் உயிரினமான ஆமைகள் கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும் வழித்தடங்களை அறிந்து கடல் பயணத்துக்காக அந்த தடங்களை பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று தெரியவருகிறது. ஆழ்கடலில் நான் பல இடங்களில் ஆய்வு செய்து இருக்கிறேன்.
தரையில் இருக்கும் பண்டைய தமிழரின் சுவடுகளைவிட கடலில் தமிழர்களின் சுவடுகள் அதிகமாக இருக்கக்கூடும். அவற்றை இன்னும் விரிவாக ஆய்வு செய்து வெளிக்கொணர வேண்டும். நமது மரபுச் செல்வங்களை மீட்டெடுக்க வேண்டும்." (Hindhutamil)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.