காலமென்னும் பேராறு கரைபுரண்டு ஓடுகிறது.. இன்றிலிருந்து சுமார் அரை நூற்றாண்டுகள் தாண்டி தொலைவில் பார்க்கிறேன்..
வல்வை மகளிர் மகாவித்தியாலயம் வரவில்லை.. அதோ சவுக்கு மரங்களுடன் ஊறணி இடுகாடு.. தாண்டி இரண்டு எட்டு நடந்தால் பண்டிதர் சங்கரவைத்தியலிங்கன் வீட்டை அடைந்துவிடலாம்..
நான், காலஞ்சென்ற சோதிலிங்கம் கலாமோகன், தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் ராதா ராதா கிருஷ்ணன், கம்பர்மலை றணராஜா ஆகியோர் எண்கணிதமும் தமிழும் படிக்க பண்டிதர் வீடு போகிறோம்..
நல்ல கறுப்பான உருவம், அளவான உயரத்தைவிட சிறிது பதிவு, கம்பிபோல வாரிய முடி, மூக்குக் கண்ணாடி, வெறும் மேல், செல்லமான கள்ளு வண்டி, மடித்துக்கட்டிய வேஷ்டி... மனம் அவர் படத்தை வரைகிறது..
பண்டிதரா.. வல்வையிலா.. வித்தியாசமாக இருக்கிறதே.. ஆச்சரியமாக இருந்தது கதைக்கத் தொடங்குகிறார்... மேலும் ஆச்சர்யம்... வல்வையில் இப்படியும் அழகு ஒழுக யாரும் தமிழைப் பேசுவர்களா.. சந்தேகமே வேண்டாம் இவர் வல்வையில் வித்தியாசமான ஒருவர்.. என்று மனம் அப்போதே சொல்லிவிடுகிறது..
ழகர ளகர லகர வேறுபாடுகள் துல்லியமாக விழ மாசற்ற தமிழில் நம்மோடு உரையாடுகிறார்... நண்பர்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொள்கிறோம்..
" டேய்.. மச்சான் அந்தாள் சாதாரண ஆளில்லை இயற்தமிழ் போதனாசிரியர் வைத்தியலிங்கம் பிள்ளையின் பேரன், ஸ்டேசன் மாஸ்டராக இருந்தவர், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு ஊர் வந்திருக்கிறார்.. " நண்பர்களில் ஒருவர் சொன்னார்.
இவர் எப்படி வல்வையில் தாக்குப் பிடிக்கப்போகிறார்.. கறிக்கடையிலும், மரக்கறி சந்தையிலும், மற்றய இடங்களிலும் கேட்ட தமிழ் வழக்கை இவர் ஒருபோதும் பேசமாட்டார்.. இவருடைய தமிழ் மற்றவர்களுக்கு விளங்குமா.. கேலியாகப் பார்க்க மாட்டார்களா.. மனம் சிந்தித்தது..
அந்தக்கால வல்வையின் வாழ்வு தூயதமிழறிஞருக்குரிய களமாக இல்லை..
ஒன்று பணம் படைத்த வியாபாரியாக இருக்க வேண்டும், இல்லை அவரை அண்டி வாழ்பவர்களாக இருக்க வேண்டும்.. எப்படி வந்தது என்ற நதிமூலம் தேவையில்லை பணம் கையில் இருக்க வேண்டும்.. ஆபரணங்கள், டெக்கர் மோதிரங்கள் என்று பெருமைக்குரியதாக நாம் எண்ணிய தங்கத்தோற்றங்கள் எதிலுமே அவர் இல்லை..
அப்படிப்பட்ட பிரதேசச் சூழலில்... தமிழிலும், தமிழ் இலக்கிய சுகத்திலும் வாழ்வது மாபெரும் கடினமான செயல்..
இலக்கியத்தில் இருக்கும் ஓர் அபாரமான, அற்புதமான இன்பசாகரத்தை சொல்லிப் பேச வேண்டுமானால் யாருடன் பேசுவது.. யார் கேட்கப் போகிறார்கள்.. பேசினாலும் யாருக்கு விளங்கப்போகிறது.. இப்படி மனது கேள்வி கேட்டது.. அச்சத்துடன் அவரைப் பார்த்தது..
ஒரு நாள் சிதம்பராக்கல்லூரி நவராத்திரி விழாவில் சிறப்பு பேச்சாளராக வந்திருந்தார்.. திருக்குறள் இன்பம் பற்றிப் பேசினார்.. பின்புறத்தில் இருந்து உயர்வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து கைகளை தட்டி பேச்சை குழப்ப முயன்றார்கள்...
சுண்டற்கடலை அவல் அவர்களை விரட்டியது, இவரை பேசவிடாமல் விரட்ட வேண்டும் என்பது அவர்களுடைய கை தட்டலின் நோக்கம்..
சுண்டற் கடலையா...?
இல்லை கடுகைத்துழைத்து ஏழ் கடல் புகுத்திய திருக்குறள் என்னும் ஆழ் கடலையா..?
எந்தக் கடலை சிறந்தது.. முழங்க ஆரம்பித்தார்...
அவர் பேச்சை நிறுத்தவில்லை.. அவர்கள் தன்னை உற்சாகப்படுத்துகிறார்கள் என்று நினைத்து மேலும் உற்சாகமாகப் பேசினார்.. மாணவர்களுக்குள் கேலிச்சிரிப்பு மறுபடியும் கைதட்டல்.. திருக்குறள் மேலும் மேலும் ஆழமாகப் போனது..
ஒரு மணி நேரம் ஓடியது அவர் நிறுத்தவில்லை.. மாணவர்களின் கரவொலி ஓய்ந்தது.. அதன் பின்தான் பேச்சு முடிந்தது..
அந்த நாளை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை... ஏன்..?
காரணம் நாலு பேர் கைதட்டி குழப்புகிறார்கள் என்றால் அதற்காக அதனால் பயன்பெறும் மற்றவர்களுக்கு துரோகம் செய்து நிகழ்ச்சியை நிறுத்திவிடக் கூடாது.. ஒரு பேச்சாளன் மேடையேறினால் தனது கடமையை செய்தே ஆகவேண்டும் என்ற இரகசியம் இருந்தது..
நாம் எது செய்தாலும் தடைவரும் ஆனால் தளர்ந்து பின்வாங்கிவிடக் கூடாது என்பதை அவருடைய திருக்குறள் பேச்சால் கற்றுக்கொண்டேன்..
பின்னாளில் இதுபோலத்தான் எனது நாடகங்களுக்கு வெளிநாடுகளில் பகிஷ்கரிப்புக்கள் வந்துள்ளன, தடைகள் வந்துள்ளன, திரைப்படங்களுக்கு எதிர்ப்பும் பகிஷ்கரிப்பும் வந்தன.. ஆனால் எடுத்த காலை என்றுமே நான் பின் வைத்தது கிடையாது.. அதற்கு வழிகாட்டியது இந்த வீரத் தமிழ் பேச்சாளன் பண்டிதர் சங்கரவைத்தியலிங்கன்தான்.
அக்காலத்தே சிதம்பராக்கல்லூரியில் மேடைப்பேச்சுக்கலையை வளர்த்தவர் அதிபராக இருந்த திரு. சச்சிதானந்தமாகும், அவர் நடத்திய மணிவாசகர் விழாவில் பேசுவதற்கு பண்டிதர் எனக்கு ஓர் ஆக்கம் எழுதித்தந்து, அதில் ஜி.யு. போப் பற்றியும் குறிப்பிட்டு அனுப்பியிருந்தார்.
அந்தப் பேச்சுப்போட்டியில் என்னால் முதல் பரிசு பெற முடியவில்லை மூன்றாவது பரிசே கிடைத்தது, ஆனால் பண்டிதர் சொல்லித்தந்த பேச்சு நுட்பத்தை மத்தியஸ்த்தராக இருந்த திசைவீரசிங்கம் மாஸ்டர் வெகுவாகப் பாராட்டினார்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் பின்னாளில் கணபதி படிப்பகத்தில் ஒரு நூல் வெளியீட்டு விழா நடந்தது அதில் பேசிய பண்டிதர் ஜி.யு. போப் என்றதும் கதறி அழுதார்.. மணிவாசகர் பெயரை சொன்னதும் அவர் தேகமெல்லாம் விம்மி விம்மி அழுதது.. அதற்கான தொடர்பை விளக்கவே இதைக் கூறுகிறேன்..
அந்த அழுகையைப் பார்த்தவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.. போயும் போயும் ஒரு பெயருக்கு கண்ணீரை வரவழைக்கும் சக்தி இருக்கிறதா....? சிந்தித்தேன்..
அந்தக் கண்ணீரின் பேராழத்தை அன்று என்னால் விளங்க முடியவில்லை.. நாட்கள் உருண்டன..
ஒரு நாள் ஊறணி சம்புளியவத்தையில் தெருவோரம் இருந்த ஒரு தலைவாசலின் படியில், மதிய நேரம் பீ.ஏ தமிழ் பரீட்சைக்காக மணிவாசகரின் திருக்கோவையாரை படித்துக்கொண்டிருந்தேன்..
மத்தியானக் கள்ளால் வந்து கொண்டிருந்தார் பண்டிதர், அவர் குடிகாரர் அல்ல.. சிறிது குடிப்பார் அவ்வளவுதான்.. எனக்கு அருகில் வந்தார்.. என்ன படிக்கிறாய் என்று கேட்டார்..
திருக்கோவையார்.. 400 பாடல்கள் கொண்ட மிகப்பெரிய புத்தகம், கடுமையான தமிழ் நடையுடையது, அவ்வை துரைசாமி உரை எழுதியது.. அப்படியே நின்றார்.. போய்விட்டார்.. என்னுடைய தந்தையாரைக் கண்டு உனது மகன் நல்லா வருவான் என்று கூறியதாக பின்னர் அறிந்தேன்..
திருக்கோவையார் இறைவன் மீது மணிவாசகர் கொண்ட காதலை விளக்கும் ப்பாவத்தை விளக்கும் நூல்.. அதைப்படித்தால் வாழ்வில் தோல்வியே வராது என்பது அவர் கருத்து..
அதற்குப் பிறகு போர் தொடங்கிவிட்டது.. நான் டென்மார்க் வந்துவிட்டேன்.. மறுபடியும் சிதம்பராவில் படிக்காது விட்ட விஞ்ஞானத்தின் கணிதம், பௌதிகம், இரசாயனம் போன்றவற்றை படித்து, சிறப்பாக பௌதிகத்தின் உச்சங்களை படிக்க ஆரம்பித்தேன் அப்போது.. மணிவாசகர் என் உள்ளத்தில் மறுபடியும் திரும்பி வந்தார்.
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று பண்டிதர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன..
போப் ஐயர் என்ற ஆங்கிலேயர் மணிசாகசர் தமிழைப் படித்த பின்னர் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் நெஞ்சம் உறங்குகிறது என்று எழுதும்படி சொல்லிவிட்டு ஏன் மரணித்தார் என்பதும் தெரிந்தது.
" வேகம் கெடுத்தாண்ட வேந்தனே.." என்ற அவருடைய திருவாசகம் ஒளியின் வேகத்தை தடுக்கலாம் என்ற செய்தியை தொடர்ந்து பல இடங்களில் எடுத்துச் சொல்வதைக்கண்டு அதிசயித்தேன்..
சமயத்தை விளக்க விஞ்ஞானத்தையும் ஆழமாக படிக்க வேண்டும் என்பதையும் கண்டு கொண்டேன்..
பின்னாளில் ஒளியின் வேகத்தை குறைக்கலாம் என்பதை டென்மார்க்கில் உள்ள பெண் விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்து
நோபல் பரிசு வாங்கியபோது மணிவாசகர் வெகு பக்கத்தில் வந்தார். அவரை அழைத்து வந்தது நமது பண்டிதரின் கண்ணீர்தான்.
அன்று மணிவாசகர் முதல் அமைச்சராக இருந்த பாண்டி நாட்டில் போர் வந்தது.. மன்னனுக்கு ஆயுதம் வாங்க சென்ற பணத்தை ஆயுதம் வாங்காமல் கோயில் கட்டி போருக்கு எதிரான புதுக்குரலாக அவர் நின்றதும் நினைவில் வந்தது..
" ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே.." என்று கடவுளுக்கு மணிவாசகர் தந்த விளக்கம்.. அணு குண்டை உருவாக்கிய ஓபன் ஹீமர் வாழ்வை படித்தபோது வந்து நின்றது.. ஒன்றில் மூன்று அதுதான் அன்று அமெரிக்கர் முதலாவது அணு குண்டிற்கு வைத்த பெயர்.
எலக்ரோன், நியூட்டோன், புளுட்டோன்.. ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்...! இரண்டும் என் மனதில் மோதுகின்றன... என்ன பொருத்தமென அதிசயிக்கிறேன்.
அன்று அந்த அணு குண்டை வெடிக்க வைக்க வேண்டாமென ஒரு சக்தி ஓபன் ஹீமரிடம் கனவில் வந்து மன்றாடுகிறது.. ஓபன் ஹீமர் அந்தச் சக்திக்கு கட்டுப்படுகிறார்.. அன்று குதிரையை வாங்கச் சென்ற அதே மணிவாசகரை குருந்தமர நிழலில் ஆட்கொண்ட அதே பரம் பொருள் ஓபன் ஹீமரிடம் மன்றாடியிருப்பது தெரிகிறது..
அவருடைய சமயத்தில் சொல்லப்படாத யாரொன்றே தெரியாத கனவில் வநத அந்த முக்கண்ணனை அறியாது தடுமாறுகிறார் ஓபன் ஹீமர்..
மேலும் மேலும் ஆழம் ஆழம்.. ஆழம்.. மணிவாசகர் விழாக்களில் தொடர்ந்து பேசுகிறேன்.. சுவிற்சலாந்தில் பரிசோதனை செய்யப்பட்ட நிலத்தடி அணு வெடிப்புப் பரிசோதனையையும் மணிவாசகரையும் தொடர்புபடுத்தி சிகரம் தொட்ட சிந்தனையாளர் என்ற நூலில் முக்கிய கட்டுரை ஒன்று எழுதினேன்..
பண்டிதர் சங்கரவைத்தியலிங்கன் அன்று ஜி.யு.போப் என்றதும், மணிவாசகர் என்றதும் ஏன் குலுங்கிக் குலுங்கி அழுதார்.. நுண் தமிழையும் விஞ்ஞானத்தின் நுண்பாகங்களையும் ஒன்றாகப் படித்தபோதுதான் எனக்கு அந்த அழுகையின் இரகசியம் புரிந்தது..
இன்று இந்த இருவர் பெயர்களையும் கேட்டால் எனது தேகமே நடுங்க ஆரம்பித்துவிடுகிறது.. காரணத்தை என்னால் என்னைச் சுற்றியுள்ள நண்பர்களுக்கு விண்டுரைக்க முடியவில்லை..
" அண்டங்கடந்த பெரு வெளியில் அங்கு நீயும் நானுமாக நிற்றல்.." என்ற தத்துவத்தைப் பாடிய மணிவாசகர்தான் " தென்னாடுடைய சிவனே.." என்று போற்றி சிவனை தமிழனாகக் கண்டவர்..
இப்படிப்பட்ட பேராழத்தைப் புரிந்து கனிந்து உருகிய ஒரு பழுத்த தமிழ் பழம் நமது ஊரில் நம்மிடையே வாழ்ந்து போயிருக்கிறது என்பதை டென்மார்க்கில் இருந்துதான் எண்ணிப்பார்க்கிறேன்..
இவரை நாம் பயன்படுத்தினோமா.. புரிந்து கொண்டோமா.. அவரை போற்றினோமா.. எதுவும் இல்லை..
அவர் பேச்சை விளங்காது கடலை அவலுக்காக கைகளை தட்டிய மாணவர்கள் கண்களின் முன்னால் வந்து போகிறார்கள்.. அறிஞர்களை கூச்சத்தம் போட்டு ஒட்டுகளில் இருந்து கேலி செய்த பழைய காலமும் மனதில் வருகிறது..
ஒரு நாள் பண்டிதர் நமக்கு ஓம் நான் சொல்லுகிறேன் என்ற கதையைச் சொன்னார்..
ஒருவன் ஏழையாக இருந்தான் அவனை யாருமே மதிக்கவில்லை.. அவனே திடீரென ஒரு நாள் பணக்காரனாக மாறினான் அவ்வளவுதான் எல்லோரும் பல்டியடித்து அவனை ஆகா ஓகோ என்று போற்றினார்கள்.. அப்பொழுதெல்லாம் அவன் அவர்களிடம் ஓம் நான் சொல்லுகிறேன் என்று சொல்லி விடைபெற்று வந்தான்.
ஏன் அப்படிச் சொல்கிறான் யாருக்குமே புரியவில்லை.. இறக்கும்போதுதான் காரணத்தை சொன்னான்.. அவர்கள் பாராட்டுக்களை வீடுவநத்தும் பணப்பெட்டிக்கு சொல்வது தனது வழமை என்றும்.. ஊரவர் தரும் போலி மரியாதை எனக்குரியதல்ல என்னுடைய பணத்திற்குரியதென்பதாலேயே ஓம் நான் சொல்லுகிறேன் என்று அவர்கள் எல்லோருக்கும் சொல்லி வந்தேன் என்று கூறி இறந்தான் என்றார்.
ஓம் நான் சொல்லுகிறேன்.. சேர்...
சுமார் ஐம்பது வருடங்கள் கழித்து இதோ அவர் கதையை நான் சொல்லுகிறேன்..
கி.செல்லத்துரை 26.04.2016
அடுத்த வாரம் எட்வேட் மன்னர் என்று போற்றப்பட்ட எட்வேட் தங்கவடிவேல்...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.