மனப்பட மனிதர்கள் : நான்கண்ட சாக்கிரட்டீஸ் சாந்தமூர்த்தி மாஸ்டர் . பாகம் 11
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)
சாந்தமூர்த்தி மாஸ்டர்.. வல்வை தந்த மகத்தான ஆசிரியமணி.. இவரைப்போல எல்லா ஆசிரியர்களும் இருந்தால் மலை வாழை அல்லவோ கல்வி என்ற பாரதிதாசன் வரிகள் நிஜமாகிவிடும்.
அறுபதுகளில் சிதம்பராவில் படித்தவர்களுக்கு தெரியும், அதனுடைய இரும்புச் சுவர்கள் எவ்வளவு வலிமையானவை என்பது..
எட்டுப்பாடங்களும் தொடர்ந்து அடி வேண்டுவதும், அதிலிருந்து தப்பினாலே போதுமென காற்சட்டைக்குள் கடதாசி மட்டையை வைத்துக் கொண்டு போவது அந்தக்கால பிரம்படிக் கதைகள்...
கருங்கல்லில்தான் ஈரமும் இருக்கும் என்பார்கள்.. ஆம்... அந்தப் பாடசாலையின் கருங்கற்ககளோடு மோதிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு முன்பாக கல்லுக்குள் ஈரமாக வந்து சேர்ந்தவர்தான் சாந்தமூர்த்தி மாஸ்டர்.
இவரை ஏன் சாக்கிரட்டீஸ் என்று அழைக்கிறேன் என்று நீங்கள் சற்று அலட்சியமாகக் கேட்கலாம்.. இந்தக் கட்டுரையை படித்து முடிக்கும்போது அவர் வல்வையில் வாழ்ந்த சாக்கிரட்டீஸ்தான் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
"கூர்ந்து பாருங்கள்.. நாம் காண்பது உண்மையானவை அல்ல என்பது தெரியும்..." இதுதான் சாக்கிரட்டீசிடமிருந்து தான் பெற்ற கருத்து என்கிறார் தத்துவஞானி பிளேட்டோ..
கி.மு.5ம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் பிறந்த தத்துவஞானியான சாக்கிரட்டீஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு "இளைஞர்களைக் கெடுக்கிறார்" என்பதுதான்.. அவர் எங்கு சென்றாலும் இளைஞர்கள் கூடிநின்று அவருடைய பேச்சுக்களை கேட்கிறார்கள் அறிவு பெறுகிறார்கள்... அவர் ஒரு புரட்சிக்காரன் என்று குற்றம் சுமத்தி நஞ்சு கொடுத்து கொன்றார்கள்.
சாந்தமூர்த்தி மாஸ்டரும் சாக்கிரட்டீஸ் போலத்தான், எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்கச் சொன்னார், ஏனென்று கேள்வி எழுப்பச் சொன்னார்..
பாடசாலைகள் மீது மட்டுமல்ல பாடப்புத்தகங்கள் மீதும் கேள்வி எழுப்பினார்.. தான் பணியாற்றிய பாடசாலை ஒன்றில் படித்த மாணவர்களை காலையில் பற்களைத் தீட்டப்பழக்க முயற்சித்த கதையை சொன்னார்... முதலில் இந்தப் புத்தகங்களைத் தூக்கி வீசிவிட்டு தான் கூறுவதைக் கேளுங்கள் என்றார்...
"எல்லாவற்றின் மீதும் கேள்வியை முன் வையுங்கள் கேள்விக்குள்ளாகாதது உலகில் எதுவும் இல்லை.. "
அளவான உருவம்.. பின்புறமாக வழித்து வாரிய கேசம், இரண்டு பக்கங்களிலும் ஏறிய நெற்றி, வெற்றிலை போட்ட பற்களின் காறை அடையாளம், கேலியாக சிரித்த முகம், அருமையான கதாப்பிரசங்க ஆற்றல்.. "சாந்தமூர்த்தி மாஸ்டர் " இதோ நம் கண்களின் முன்பாக வந்துவிடுகிறார்.
தமிழ், சமயம், இலக்கியம் இவைகள் இவருடைய பாடங்கள்.. வகுப்பு வந்ததும் மேசையில் ஏறி அமர்ந்து கொள்வார்..
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பெண் பார்க்கப்போகிறார்கள்.. இரண்டு உழுத்தம் புட்டுகள் நடுவில் ஒரு கப்பல் வாழைப்பழம்... நிசப்தம்...
எல்லோரும் கவனத்தை திருப்பி ஒரு நிலைக்கு வந்துவிடுவார்கள்.. ஏதோ ஆபாசக்கதை வரப்போகிறதென... "இரண்டு உழுத்தம் புட்டு என்றால் இரண்டு நீத்துப்பெட்டி உழுத்தம்புட்டு, ஒரு வாழைப்பழம் என்றால் ஒரு சீப்பு கப்பல் வாழைப்பம் புரியுதுதானே.. ?"
வகுப்பில் மாணவர்கள் தங்களை மறந்து வாய்விட்டுச் சிரிப்பார்கள், ஒரு சூறாவளி வீசியது போல மாய அலை ஒன்று வீசும்... எல்லா மாணவர்களையும் பாடம் என்ற சமுத்திரத்தில் இறக்கிவிடுவார், சாந்தமூர்த்தி மாஸ்டர்.
அவர் படிப்பித்தால் "ஐயையோ பெல் அடிக்கக்கூடாது.. மற்ற ஆசிரியர் வரக்கூடாது.." என்று மனம் படபடக்கும்.
இந்தக்காலத்தே வசதிகள் கட்டணப் பணம் என்று சிறிய தொகை கட்டணம் பாடசாலையில் வசூலிப்பார்கள், அதை ஒழுங்காகக் கட்டாதவர்களை அதிபர் வந்து வீட்டுக்கு விரட்டியடிப்பார்.
அடித்தது தாயமென புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு ஓடி, குளம் குளித்து, கடற் குளித்து வீடுபோவது வழமை, அதிபர் வருவாரா நம்மைத் துரத்துவாரா என்று வழி மேல் விழிவைத்து காத்திருக்கும் மாணவர்கள் மாறாக சாந்தமூர்த்தி மாஸ்டரின் வகுப்பென்றால் அதிபர் வரக்கூடாது என்று ஆண்டவனை மன்றாடுவார்கள்.
இதுதான் சாந்தமூர்த்தி மாஸ்டர்..
ஒரு நாள் அதிபர் அருட்சுந்தரம் பணம் கட்டாத மாணவரின் பெயர் பட்டியலுடன் வரவில்லை.. " பணம் கட்டாதவர்கள் எழும்புங்கள் "என்றார்.. எழும்பினேன் என்னை விரட்டினார், மற்றவர்கள் எல்லாம் பணம் கட்டிவிட்டதாக பொய் சொல்லி இருந்துவிட்டார்கள்.
காரணம் என்ன.. அப்போது வகுப்பில் சாந்தமூர்த்தி மாஸ்டரின் இராமாயணக்கதை போய்க் கொண்டிருந்தது..
பாடம் முடிய கேள்விகள் தருவார், அடுத்த நாள் எழுதிக்கொண்டு போவோம்.. என்ன எழுதியிருக்கிறோம் என்று படித்துப் பார்க்கமாட்டார், எல்லோருக்கும் ஒரு கையெழுத்து போட்டுவிடுவார்.
இதனால் பிழையாக எழுதிவிடுவோமோ என்ற அச்சம் இருக்காது, பக்கம் பக்கமாக எழுதிக் கொடுப்போம்.. சிரித்தபடி கையெழுத்து போடுவார்..
" ஏன்... படிக்காமல் கையெழுத்துப் போடுகிறார்... நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்.. கண்டிப்பாக சரியாக பதில் எழுத வேண்டும்..!" போராடினோம் கண்டு பிடித்தோம்.. காரணம் அதுவும் ஒரு கற்பித்தல் கலையே...
எப்போதும் மாணவன் தான் எழுதும் பதில் மீது தானே கேள்வி எழுப்ப பழகவேண்டும்.. இதுதான் கற்பித்தலின் மகத்தான தத்துவம்..
கேள்விகள் இரண்டு வகைப்படும்.. ஒன்று நாம் எழுப்பும் கேள்வி, மற்றையது நாம் மற்றவரிடம் செவி வழியாகக் கேட்பதும் கேள்விதான் அது கேள்விச் செல்வம்.
இரண்டு செல்வங்களையும் ஒன்றாக அள்ளி வழங்கியவர்தான் சாந்தமூர்த்தி மாஸ்டர்.
அக்காலத்தே சிதம்பராக்கல்லூரிக்கான புதிய ஆய்வுகூடத்தை கட்டுவதற்காக இரண்டு நாட்கள் கொண்ட பாரிய கலைவிழா ஒன்று நடைபெற்றது, அதில் சாந்தமூர்த்தி மாஸ்டரின் நேசக்கரங்கள் என்ற நாடகம் மேடையேறியது.
முன்னாள் நகரபிதா திரு. இரத்தினவடிவேல், அனந்தண்ணா, சிவசோதி, குட்டிக்கிளி போன்ற அக்காலத்து வல்வையின் பெருங்கலைஞர்கள் எல்லாம் நடித்தார்கள், அதில் வந்த பாடல்களும், கதை அழகும், காட்சிக் கோர்வையும், இயக்கமும் இன்றும் ஆச்சர்யத்தையே தருகிறது.. அரங்கு நிறைந்த மக்கள் கூட்டத்தோடு பெரும் பாராட்டும் பெற்றது அந்த நாடகம்.
இன்றைய சிதம்பராவின் ஆய்வு கூடத்தின் ஒவ்வொரு கற்களிலும் சாந்தமூர்த்தி மாஸ்டரின் சாந்தமான முகம் தெரிகிறது.
ஒரு பாடம் மாணவனுக்கு விளங்கவில்லை என்றால் உண்மையில் அப்பாடமானது ஆசிரியரால் சரிவர விளங்கிக் கொள்ளப்படவில்லை என்றும் சொல்வார்கள், ஆனால் சாந்தமூர்த்தி மாஸ்டர் படிப்பித்த பாடங்கள் விளங்கவில்லை என்று சொன்ன மாணவர் எவருமே கிடையாது.
காரணமென்ன அவர் ஒவ்வொரு வினாடியும் தேடிக்கொண்டிருந்தார் என்பதை அவருடைய ஒவ்வொரு வகுப்பிலும் எம்மால் புரிய முடிந்தது.
"ஒரு நாள் நீ இந்த நாட்டின் பிரதமரானால் என்ன செய்வாய்..?" எல்லா மாணவர்களையும் கருத்துச் சொல்லும் படி கேட்டார்..
எனது தவணை வந்தது "நான் பிரதமரானால் மதுபானத்தை தடை செய்வேன்.." என்றேன்.. "சபாஸ்" என்றார், ஆனால் அவர் மதுபானம் அருந்துபவர் என்பது அப்போது எனக்குத்தெரியாது.
பின் ஒரு நாள் உங்கள் ஆசிரியர் எங்களோடு கள்ளுக்கொட்டிலில் இருக்கிறார் என்று சிலர் கூறினார்கள்... உண்மையா..? உண்மைதான். ..!
குடித்தால் ஒருவன் கெட்டவன் அல்ல.. குடிக்காததால் ஒருவன் நல்லவனாகவும் முடியாது.. நல்லவன் கெட்டவன் என்பதற்கும் குடிக்கும் தொடர்பில்லை.. அது மனத்தையும் நடத்தையையும் சார்ந்த விவகாரம்.
சாந்தமூர்த்தி மாஸ்டர் மதுபானம் அருந்தி வீதியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தாகவோ தூஷண வார்த்தைகளை பேசி காற்று வெளியை அசிங்கப்படுத்தும் ஒருவராகவோ இருக்கவில்லை இது போதும் நமக்கு....
" ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - ஒரு
கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு - நான்
பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு.. "
கண்ணதாசனின் வரிகள் என் நினைவுக்குள் வந்தன.. கண்ணதாசன் போலவே இவரும் ஓர் அழகியல் கலைஞராகவே இருந்தார், அவருடைய நேசக்கரங்கள் நாடகத்தில் வரும் ஒரு காதல் பாடல் அதை சரிவர உணர்த்தியது.
அந்தக் காலத்தே நாடகப் போட்டிகள் நடக்கும் பிரதான மத்தியஸ்த்தராக சாந்தமூர்த்தி மாஸ்டரே இருப்பார், அவர் நடுவராக இருந்தால் தீர்ப்பு யாருமே குறைகூற முடியாதளவுக்கு சரியாக இருக்கும்.
கலையரசு சொர்ணலிங்கம், பேராசிரியர் கா.சிவத்தம்பி இருவரும் நாடகத்தின் மத்தியஸ்த்தம் பற்றி பேச வர முன்னரே கொடிகட்டிப்பறந்தவர் சாந்தமூர்த்தி மாஸ்டர் என்ற பெருமை இருப்பதால் அவரை ஒரு மது போதகர் என்ற பெட்டிக்குள் எங்களால் அடைத்துவிட முடியவில்லை..
"ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும் இருந்தால் கவி படிப்பேன் "என்று கண்ணதாசன் சொன்னார்.
கண்ணதாசனைப்போல மது கையில் இருக்கிறது மாது.. ஆம் சாந்தமூர்த்தி மாஸ்டருக்கு இரண்டு மனைவிகள் என்று சொன்னார்கள்...
"காவியத்தாயின் இளைய மகன் - காதல்
பெண்களின் பெருந்தலைவன் .."
கண்ணதாசன் பாடலின் வரிகள் இந்தக் கலைஞனுக்கும் பொருந்தி வருகிறது..
" ஏற்றமிகு ஏதென்சு நகரத்து வாலிபர்களே.. சமூகத்தின்
நாற்றம் அகற்ற வந்த நல்லவர் கூட்டமே.. " என்று ஏதன்சு நகர வாலிபர்களைப் பார்த்து சாக்கிரட்டீஸ் கேள்வி கேட்டார் அன்று..
அது போல வல்வை சிதம்பரா வந்து, அன்றைய வல்வை இளைஞர்களைப் பார்த்து "ஏற்றமிகு வல்வை வாலிபர்களே.. சமூகத்தின் நாற்றம் அகற்ற வந்த நல்லவர் கூட்டமே.. " என்று என்று குரல் கொடுத்தார்... பல பயிர்கள் விளைந்தன..
சாக்கிரட்டீசிற்கு இந்த உலகம் என்ன கொடுத்தது.. விஷம்..!
அதுபோலத்தான் சாந்தமூர்த்தி மாஸ்டருக்கும் இந்த சமுதாயம் என்ன கொடுத்தது .. விஷம்..!
ஒரு நாள் செய்தி வருகிறது.. சாந்தமூர்த்தி மாஸ்டர் விஷம் குடித்து செத்துவிட்டார் என்று.. என்ன விஷம்.. ரன்பக் மூட்டைப்பூச்சி கொல்லும் மருந்து..
ஓடிச்சென்று வீதியில் நிற்கிறேன்.. ஊறணி நோக்கி சவம் போகிறது.. வைத்த விழி மூடாது பார்க்கிறேன்.. மௌனித்துக்கிடக்கிறார் அந்த மாபெரும் கலைஞானி..
" ஏன் சேர் நீங்கள் மதுவைக்குடிக்கலாம் ஆனால் நஞ்சைக் குடிக்கலாமா..?" அவருடைய சவ ஊர்வலத்தைப் பார்த்து மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்..
நாடகப் போட்டியில் யாருடைய கையில் தங்கப்பதக்கம் இருக்க வேண்டுமென தீர்மானிப்பது நடுவர்.. அதுபோல வாழ்க்கையும் ஒரு போட்டியே..
நான் கண்ணதாசனிலும் வேறுபட்டவன் " ஒரு கையில் மது மறு கையில் விஷம்.. " எதை அருந்துவதென தீர்ப்பளிக்கும் மத்தியஸ்த்தனும் நான்தான்...
"ஒரு கையில் மது. மறு கையில் விஷம்..". பறை ஒலியும் அதையே பாடுவது போல இருந்தது..
இருப்பினும் அவர் ஏன் விஷம் குடித்தார் என்பதற்கு ஐம்பது வருடங்களாக பதில் கிடைக்கவில்லை.. கடந்த வாரம் இவரை எழுத வேண்டும் என்று நினைத்தது போது " நான் கண்ட சாக்கிரட்டீஸ் சாந்தமூர்த்தி மாஸ்டர் " என்ற தலைப்பு வந்தது.
அதை தலைக்குள் அனுப்பிய தபால்காரன் யார்..? அதுதான் விளக்கிற்குள் அடங்காத விளக்கமில்லா தத்துவமே என்ற கலை... நடராஜரின் மகிமை போன்றது..
அவர் ஏன் நஞ்சு குடித்தார்...
சாக்கிரட்டீஸ் ஏன் நஞ்சைக்குடித்தார்... சந்தர்ப்பம்.. அவரால் தவிர்க்க முடியாத நிலை... மகிழ்வுடன் குடித்துவிட்டு நடந்தார்... சிறைச்சாலையிலேயே மடிந்தார்.
ஒருவர் குடிக்க வைக்கப்பட்டார் இன்னொருவர் குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.. ஈற்றில் இருவரையும் கொன்றது விஷம்தான்..
ஏதென்ஸ் நகரத்து தத்துவஞானி சாக்கிரட்டீசின் முடிவு மட்டுமல்ல நமது வல்வை நகர சாக்கிரட்டீசின் முடிவும் நஞ்சினால்தான் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.. அவருக்கும் அழிவில்லை இவருக்கும் அழிவில்லை இதுதான் இருவருக்குமுள்ள அடுத்த ஒற்றுமை..
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை.. "
கண்ணதாசன் போலவே சாந்தமூர்த்தி மாஸ்டரும் இறக்கவில்லை என்பதற்கு அவர் இறந்த அரை நூற்றாண்டின் பின் வரும் இந்தக் கட்டுரையே சாட்சியம்..
"குடிப்பவர் எல்லாம் கெட்டவர்கள் இல்லை.. அதுபோல
குடிக்காதவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை.. "
நான் இயக்கிய உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் நிறைவு டயலக் இதுததான், படம் விரைவில் இலங்கை வருகிறது தவறாது பாருங்கள்.. சாந்தமூர்த்தி மாஸ்டரின் நேசக்கரங்களின் நிழலும் அதில் தெரியும்.
அடுத்த வாரம் யார்.. ஆவலுடன் காத்திருங்கள்... அதற்கு முன் இந்தக் கண்ணதாசன் பாடலையும் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ramesh Manivasagam (Danmark)
Posted Date: June 18, 2016 at 18:00
அருமையான பதிவு
N.Kalainesan (Sri Lanka.)
Posted Date: June 09, 2016 at 23:19
I am very proud to you, that I am also one of his favorite student in Chithambara college...
N.Kalainesan (Sri Lanka.)
Posted Date: June 09, 2016 at 23:18
I am very proud to you, that I am also one of his favorite student in Chithambara college...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.