காலப்பெரு வெள்ளம் காட்டாறு போல கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.. அதை என்றுமே பின்னோக்கி இழுக்க யாராலும் முடியாது.. மனம் ஒன்றைத்தவிர.. அதை ஐம்பத்தி இரண்டு வருடங்கள் பின்னோக்கி இழுக்கிறேன்.. இன்றைய வல்வை மறைந்து அன்றய வல்வை மீண்டெழுகிறது..
கையில் ஒரு லாந்தர்.. அதிகாலை நான்குமணி.. கண்களில் தூக்கக் கலக்கம்.. தள்ளாடும் நடை... வழி நெடுக, பிடையன், நாகம், சாரை பற்றைகள் முழுவதும் ஆவென புரண்டு கிடக்கும் பாம்புகளின் கொட்டாவி நாற்றம்... "ஒடியல் பிட்டு வாசம் வந்தால் பாம்பு கிடக்கிறது.. நிலத்தைப் பார்த்து நடக்க வேண்டும்.." எச்சரிக்கை கேட்கிறது.. தூக்கம் பறந்து.. உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் வந்தது.. உயிரச்சம் இன்று மட்டுமா.. இல்லை அன்றும்தான்..
அந்தக்காட்டையும்.. இருளையும் கவலையுடன் ஊடுருவிப் பார்க்கிறேன்.. என்றுதான் இந்தப்பாடசாலைகளையும் பாடப்புத்தகங்களையும் குப்பையில் வீசிவிட்டு ஆனந்தமாக இந்த உலகில் சிறகடிக்கப்போகிறேன்.. அந்த இருட்டைக் கேட்கிறேன் அது பதில் இன்றி மாந்திக்கிடக்கிறது.
மானாங்கானை தாண்டி மணிக்கம்பி தோட்டத்திற்குள் இறங்கிவிட்டோம்.. ஆங்கிலம் படிக்க திசைவீர சிங்கம் மாஸ்டர் வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தோம்..
கட்டைச்சத்திவேலுக்கு ஆங்கில அறிவு போதாது, அதை மேலும் வளர்க்க வேண்டும் என்று அவருடைய தாய் மனோன்மணி விரும்புகிறார்.. அவர் அதிகாலை நான்கு மணிக்கே ஆங்கிலம் படிக்கப் போகவேண்டும்.. ஆனால் தனியே போக இயலாது.. கூடப்போக ஒருவன் துணைக்கு வேண்டும்.
எனது தாயாருக்கு மனோன்மணி ஆங்கிலக்கல்வியின் புகழை எடுத்துரைத்து இவனையும் கூட அனுப்பினால் ஆங்கிலத்தில் கெட்டிக்காரனாக வந்துவிடுவான்.. விளைவு எனது உறக்கம் பறிபோகிறது.. லாந்தருடன் நான் நடக்கிறேன் கட்டைச்சத்திவேல் ஆங்கிலம் படிப்பதற்காக..
கட்டைச்சத்திவேல்...
கட்டையான உருவம்.. கருமையான தோற்றம்.. வாய் நிறைய பற்கள்.. அகலமான மார்பு.. தூக்கலான பட நெற்றி, எல்லாத்திற்குமே பயம்.. ஆனால் அதன் மறுபக்கமாக கையில் எடுத்துள்ள வீரம்.. தூய பளிங்கு போல பழுதில்லாத குழந்தை மனது..
பயம் ஒருவனை சண்டியனாக்கும் என்கிறார் உளவியலாளர் பிராய்டு, இது சரியோ தவறோ தெரியாது ஆனால் அக்காலத்தே நான் கண்ட எண்ணற்ற வல்வை சண்டியர்களில் இவரும் ஒருவர்.. எனது ஒன்றுவிட்ட அண்ணன்.. எங்கள் இருவருக்கும் கூடப்பிறந்த ஆண் சகோதரங்கள் இல்லாத காரணத்தினால் அண்ணனும் தம்பியும் என்று சொன்னார்கள்...
திசைவீரசிங்கம் மாஸ்டர் எங்கள் இருவரையும் ஏறெடுத்துப் பார்க்கிறார்.. அவருடைய மூக்குக் கண்ணாடி கீழே விழ கண்ணாடி இல்லாமலே இருவரையும் ஊடுருவுகிறார்.. அவருடைய மனம் உள்ளுக்குள் சிரித்திருக்க வேண்டும்.. என்னோட்ட வயதில் அங்கு யாருமே இல்லை.. அருகில் அந்தக்கால ஆங்கில மன்னன், என்று அழைக்கப்பட்ட சிறீதரன் என்ற மாணவர் இருக்கிறார்..
இங்கிலீஸ் பள்ளிக்கூடம் என்ற சிதம்பராவில் யாராவது ஆங்கிலத்தில் உருப்பட்ட ஒருவரை காட்ட முடியுமா என்றால்.. கணேசுப்பத்தரின் உறவினரான சிறீதரன் ஒருவரைத்தான் அடையாளம் காட்டுவோம்.. அது சரியான இங்கிலீஸ் பள்ளிக்கூடம் என்றால் அங்கிருந்து ஒரு மாணவனாவது ஆங்கில இலக்கியத்தில் துறைபோக கற்று, அந்த இலக்கியத்தின் சுவையை விளக்கும் ஓர் ஆங்கில படைப்பிலக்கியத்தை தந்திருக்க வேண்டும்..
காலத்தை நினைவுகளால் குடைகிறேன்.. எவனும் இல்லை.. மறுபடியும் திசைவீர சிங்கம் மாஸ்டர் வீட்டு மாமரத்திற்குக் கீழே இருந்த வாங்கிற்கு திரும்புகிறேன்.. எனக்கு தனியாக ஒரு பயிற்சி.. கட்டைச்சத்திவேலுக்கு வேறொரு பயிற்சி... பாடம் தொடங்கியது..
என்ன படித்தோம்.. ஏன் படித்தோம் என்பது தெரியவில்லை.. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.. " சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது " போல இருந்தது.. அதிகாலை ஆறு மணிக்கு பாடம் முடிகிறது..
தரையில் வெளிச்சம் படர்கிறது.. ஏராளம் மாங்காய்கள் தரையில் கொட்டுப்பட்டு கிடக்கின்றன.. எடுக்கலாமா.. பயமாக இருக்கிறது.. அந்த மாங்காய்களே தனது காலைச்சாப்பாடு என்றும் அதை சாப்பிட்டுவிட்டு மணிக்கம்பி தோட்டத்தில் இருந்து கால் நடையாக சிதம்பராவை அதிகாலை எட்டுமணிக்குள் போய் பிடித்துவிடுவதாகவும் திசைவீரசிங்கம் மாஸ்டர் சொல்லுகிறார்.
இனி வீடுபோய் குளித்து.. மறுபடியும் முதிரைக்கட்டையில் இருந்து சிதம்பரா போய், மாலை ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்வதை நினைத்தால்.. ஏன்டா பிறந்தோம் என்றிருக்கும்.
அடுத்த எட்டுப்பாடங்களும் முதுகும், கைகளும், காதும், கன்னமும் புளிக்க வாங்கப்போகும் அடிகளும், அக்கால ஆசிரியர்களின் உளவியல் நோய்களும் நம்மைப்பலி எடுக்கப்போகிறதே என்று அந்த சிறு பிள்ளை மனம் பயப்படுகிறது..
கண்டிப்பாக நான் ஆசிரியராக வரவேண்டும்.. கற்பித்தலுக்கு அன்பை ஆயுதமாக்க வேண்டும்.. இந்த ஆசிரியர்களிடமிருந்து பிரம்புகளை திருப்பி வாங்க வேண்டும்.. மாணவர்களை படிக்க விடவேண்டும்.. இவர்களிடமிருந்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன்..
ஒவ்வொரு ஆசிரியர்களுடைய பெயரிலும் எங்கள் வீட்டில் நின்ற பூவரசு, முள்முருக்கு மரங்களுக்கு பெயர் சூட்டியிருந்தேன்.. கடதாசியில் செய்த மூக்குக்கண்ணாடியை போட்டுக்கொண்டு தடியால் இந்த மரங்களுக்கு அடித்து மனம் ஆறுவது எனது அக்கால பொழுது போக்குகளில் ஒன்று..
இவ்வளவு பின்னணியிலும் ஊறித்திளைக்காவிட்டால்.. அன்றய வல்வைக்குள் உங்களைக்கூட்டிப்போக முடியாது..
அந்தக்காலத்தில் வல்வையில் ஒழுங்கைக்கு நான்கு சண்டியர்கள் இருந்தார்கள்.. ஊர் நம்மை திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால் படிக்க வேண்டுமா இல்லை யாருக்காவது அடிக்க வேண்டுமா..?
" டேய் கிளியா...(இது எனக்கு அக்காலப் பெயர்.) இந்த ஊரிலை படிச்சவனுக்கு ஏதாவது மரியாதை இருக்கோ சொல்லு பாப்பம்.. எங்கே ஒரு படிச்சவனின் பெயரை சொல்லு பாப்பம்... "
என்னால் சொல்ல முடியவில்லை.. ஊறணியில் இருந்து ஊரிக்காடுவரை எல்லாச் சண்டியர்களுடைய பெயர்களையும் என்னால் சொல்லமுடிந்தது.. ஐயனார் சாமி போல ஊரின் காவல் தெய்வங்கள் இவர்களே.. என்று பெருமையுடன் வணங்கிக் கொண்டேன்..
சண்டியன் ஆனால் ஊர் சலாம் போடும் என்றால் படிப்பெதற்கு சத்திவேல் பாடசாலையை விட்டு ஓடிப்போக சண்டியர்களுக்கு மரியாதை கொடுத்த நமது ஊரவர்களே காரணம்.
ஒரு நாள் சி.ரி.பி பஸ் ஒன்று நெடியகாடு சோதிப்பரமானந்தர் வீட்டுக்கு அருகில் நிற்கிறது.. சனம் ஓடிக்கொண்டிருக்கிறது..
" கட்டைச்சத்திவேல் ஆருக்கோ அடிக்கிறாராம்.. அட.. நமது அண்ணனா..?" தோள்கள் தினவெடுக்கிறது.. ஓடிப்போகிறேன்..
பேருந்திற்குள் அதன் நடத்துனர் அலறியபடி கிடக்கிறார்.. சக்திவேல் பேருந்தின் இருக்கையை கழற்றி அவருக்கு ஓங்கி ஓங்கி அடிக்கிறார்.. நடத்துனர் கதறி அழுகிறார் யாரும் பிடித்துவிடவில்லை.. வாயாலும் தலையாலும் இரத்தம் பீறிட்டு ஓடுகிறது..
கட்டைச்சத்திவேலை அன்றுள்ள ஊர் திரும்பிப் பார்க்கிறது.. ஷேக்ஸ்பியரின் ஆங்கில இலக்கியத்தை மேடையில் சுத்தமாக பேசும் ஆங்கில மாணவன் சிறீதரனைவிட நமக்கு பெரியவனாக சத்திவேல் தெரிகிறார்.
அவருடைய இன்னொரு நண்பனாக வெள்ளை நிறமான உயரமான நெட்டைச்சத்திவேல் மாறுகிறார்.. இப்படி சண்டியன் கட்டைச்சத்திவேலைச் சுற்றி ஒரு கூட்டம்..
படிக்க வேண்டிய தேவையில்லை காரணம் பொருளாதாரம் அவருடைய தமக்கை தவக்கிளி மூலமாக அவருக்கு மலர்கிறது..
அவரைக்கட்டலாமா.. விடலாமா.. பலத்த யோசனை கடைசியில் துரைராசா என்ற பச்சை வள்ளத்துரையை தவக்கிளி மணமுடிக்கிறார், காலம் பணத்தை கொட்ட ஆரம்பிக்கிறது.
அவரை மணமுடித்த யோகம் துரைராஜா இந்திய வியாபாரத்தில் கொடிகட்டிப்பறக்க ஆரம்பிக்கிறார்.. வல்வை புகழ் விஷ்ணுசுந்தரமும், காட்டுவளவு அருணாசலம் செட்டியாரும் ஆரம்பித்த வர்த்தகம் கோடிகளை புரளவைக்கிறது..
அந்த ஏற்றுமதி இறக்குமதியில்.. ஒரு சண்டியன் பாத்திரமாக கட்டைச்சத்திவேல் பிரகாசமடைய ஆரம்பிக்கிறார்.. கைகளில் டெக்கர் மோதிரங்கள் பளபளக்கின்றன.. கழுத்தில் இரட்டை வடம் சங்கிலி.. நைலோன் ஷேட்.. பழையகாட் வெள்ளைச்சாரம், இழுத்தால் வாயில் புகை குளிர வைக்கும் மல்பரோ சிகரட் பாக்கட்.. சிவாஜிகணேசன் ஊதுவது போல சுருண்டோடும் புகை..
"தம்பி சுகமோ.. " ஊர் கைகளைக்கட்டி அவருக்கு இராஜமரியாதை கொடுக்கிறது.. படித்து பட்டமெடுத்து, கொழும்பில் வேலை செய்து லீவில் வந்து நிற்கும் அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்களை அங்கு யாருமே நெருங்க விரும்பவில்லை.. "பாவம் மாதச்சம்பளகாறர்.. என்ன செய்ய அதுகளின்ரை தலையெழுத்து.." பணம் அவர்களை ஓரங்கட்டுகிறது.
அப்பொழுது படிப்பதைவிட நானும் சண்டியனாகிவிடலாமா என்று யோசித்தேன்.. இதனால் நெடியகாடு வீதி, காட்டுவளவு, கந்தவனம், மதவடி ஆகிய இடங்களில் பல மோதல்களில் குதித்து பலதில் வென்று சில இடங்களில் சணல் அடிவாங்கி முன்னேறிக்கொண்டிருந்தேன்.
இருந்தாலும் நமக்கு ஏதாவதென்றால் அண்ணன் சத்திவேல் இருக்கிறார் என்ற துணிச்சலும் அக்கால சண்டியனான எனது உறவினர் கடைக்கார ராமு பக்கத்திலேயே இருந்ததாலும் நான் அதி தீவிர சண்டியனாக வேண்டிய தேவை இருக்கவில்லை..
"சண்டியனாக இருப்பது கடைசியில் மரணத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.. மாறாக சண்டியனுக்கு பின்னால் திரிபவர்கள் ஆபத்தின்றி வாழ்வதை அவதானித்துப்பார்.. "
"இப்ப இருக்கிற சண்டியன்களில் யார் மோசமான சண்டியனோ அவனின் பின்னால்தான் அதிகமான சனம் நிற்கும்.." எனது அம்மாச்சி ஆச்சிமுத்து சொல்கிறார்.
வரலாற்றை மேலும் ஒரு ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி தள்ளுகிறேன்.. கட்டைச்சத்திவேல் யார்.. அவருடைய தந்தை யார்..
அவருடைய தந்தையாரும் இவரைப்போலத்தான் ஒரு விறுக்கான தோற்றம் உடையவர் அவருடைய சகோதரரான மேஸ்திரியார் ஒருவருடன் நடந்த மோதலில் வீட்டின் இறப்பில் தொங்கியபடி இவருடைய நெஞ்சில் அந்த மேஸ்திரியார் மிதித்த காரணத்தினால் சில காலத்தில் நெஞ்சு நோவு ஏற்பட்டு இளவயதிலேயே அவர் இறந்தாக சொல்கிறார்.
ஆகவே இந்தக் கேவலமான சண்டியன் வாழ்வில் இருந்து கட்டைச்சத்திவேலை திருப்ப வேண்டும் என்று எண்ணுகிறேன்.. காரணம் கட்டைச்சத்திவேலைப் போல ஒரு நல்ல, அன்புள்ள இதயத்தை வேறு எவரிடமும் காண முடியாது.. அவருடைய இதயம் மாசற்ற மாணிக்கம், ஆனால் சூழல் சண்டியனாக வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது.
" டேய் கிளியா.. ஓடி வாடா.. " கட்டைச்சத்திவேல் கூப்பிடுகிறார்.. ஓடிப்போகிறேன்.. வெள்ளை நிற திரிச்சீலையால் சுற்றியபடி கையில் ஏதோ வைத்திருக்கிறார்.. காட்டுவளவு கடற்கரைக்கு போகிறோம்.. அங்கு ஒரு பொது மலசல கூடம் கட்டப்பட்டிருந்தது.
அதற்குள் மறைந்து நிற்கிறோம் சீலையை அவிழ்த்து ஒரு பொருளை வெளியே எடுக்கிறார்.. கன்னங்கரேல் என்ற கைத்துப்பாக்கி.. எங்கு வேண்டினார்.. யாரைச்சுட. ஒன்றும் தெரியவில்லை..
காட்டுவளவு கடற்கரையை நோக்கி ஒரு வேட்டைத் தீர்க்கிறார்.. படீர் என்ற சத்தம் காகங்கள் மேலே எகிறிப்பறக்கின்றன.. கடல் சூடு வாங்கிக்கொள்கிறது..
சரியான வாத்தியார் இல்லாமல்.. தானாகவே பழக ஆரம்பித்தார்.. யாரைச்சுடப்போகிறார்..?
இன்னொரு சண்டியன் நேற்று கத்தியுடன் சத்திவேலை தேடி வந்திருக்கிறான்.. அப்போது சத்திவேல் வீட்டில் இல்லை.. நாளை வருவதாக சொல்லிப்போயிருக்கிறான் அந்தச் சண்டியன்... அவனுடைய தங்கைக்கு கட்டைச்சத்திவேல் காதல் கடிதம் கொடுத்ததற்காக..
அந்தச் சண்டியனின் பெயரை இங்கே எழுத முடியாது.. ஆனால் அந்தச்சண்டியனும் இக்கட்டான நிலையில் இருந்தான்... இவரை போரில் வெல்லாவிட்டால் தனது ஒழுங்கையில் உள்ள சண்டியன் பெயரை அவன் இழந்துவிடுவான்.. எனவே மோதலில் வென்றால்தான்.. நம்மை சுற்றி நிற்கும் கூட்டத்தை வைத்திருக்கலாம் இல்லையேல் இந்தக் கூட்டம் அந்தச் சண்டியனுடன் ஒட்டிக்கொள்ளும்.
வெற்றி அல்லது மரணம்.. அதற்கு மேல் அந்த ஆடுகளத்தில் அவருக்கு எதுவும் இருக்கவில்லை.. நாளை அவன் வருவான்.. வந்ததும் அவன் வாளை எடுக்க முன் தலையில் துப்பாக்கி வேட்டை இறக்கலாம்.. இது சத்திவேலின் முடிவு.
காரணம் அவரோடு மோதலுக்கு வந்த சண்டியன் பின்னாளில் இன்னொரு மோதலில் கொலை செய்யப்பட்டுவிட்டார், நல்லவேளை துப்பாக்கி வெடி சண்டையை நிறுத்திவிட்டது.
வெடிச்சத்தம் காட்டுவளவில் கேட்டது.. அப்படியே வாள் வெட்டு சண்டியனுக்கும் போய்விடுகிறது.. துப்பாக்கியால் சுட 24 மணி நேரமாக உறக்கமின்றி காத்துக்கிடக்கிறார்.. சண்டியன் வரவில்லை.. பிரச்சனை முடிகிறது..
கட்டைச்சத்திவேலுக்கு ஏது காதல்.. விசாரித்துப் பார்த்தேன்.. அக்காலத்தே அழகான பெண் ஒருத்தி பாடசாலைக்கு பேருந்துல் சென்றிருக்கிறார்.. வேம்படியில் நின்று பார்த்தாற் போல் காதல் வயப்பட்டிருக்கிறார், ஒரு தலைக்காதல்.
தான் சாக்ளேட் சாப்பிட இதுதான் தருணமென, அருகில் நின்ற நண்பர் ஒருவர் இவரை உசுப்பேற்றி விட்டிருக்கிறார்.. தினசரி இவர் கன்டொஸ் சாக்ளேட் வாங்கி அந்த நண்பரிடம் கொடுத்து பஸ்டிக்கட்டும் கொடுத்து அந்தப் பெண் வரும் பேருந்தில் ஏற்றி விடுவார்.
அவரும் அவளிடம் கொடுப்பதாக சொல்லி, பஸ்சில் ஏறி கன்டொஸ் சாக்ளேட்டை அவளிடம் கொடுக்காமல்.. நெடியகாட்டில் இறங்கி கன்டொஸ்சை தான் சாப்பிட்டுவிட்டு அவள் ஆசையாக வாங்கியதாக ரீல் விட்டு சுகபோகம் அனுபவித்து வந்துள்ளார்.
காதல் தூதுவர் நூற்றுக்கணக்கில் கன்டொஸ்சை ஏப்பம் விட்டுவிட்டார்.. அவளிடமிருந்து ஒரு கடிதம் கூட இல்லை..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.