யாழில் சிவாஜிலிங்கத்தின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2019 (புதன்கிழமை)
கடந்த கால விடயங்களை மறந்து மன்னிக்க வேண்டும் என பசில் ராஜபக்ச கூறியுள்ள கருத்தை நிராகரித்துள்ள சிவாஜிலிங்கம், போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னர் அவர்களை மன்னிப்பதா இல்லையா என்பதை பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
யாழ் சங்கிலியன் பூங்காவில் தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை இன்று ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு ,கிழக்கு தமிழர் தாயக மக்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள போர்க் குற்றவாளியான கோத்தபாய ராஜபக்சவை ஓரங்கட்ட வேண்டும் என்று சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமக்கு வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கும் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த விடயம் சாத்தியமற்றது என்றும் தெரிவித்தார்.
அரைகுறை வாக்குறுதிகளை பெற்று சிங்கள தலைமைகளிடம் தமிழ்த் தலைமைகள் ஏமாந்து விடக் கூடாது என்றும் எம்.சிவாஜிலிங்கம் எச்சரித்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சிற்றூழியர்களாக பெரும்பான்மையின சிங்களவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறித்தும் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்கென தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை உள்ளடக்கப்படாமை குறித்து சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலாவது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். (IBC Tamil)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.