ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட செல்வச் சந்நிதி சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2016 (சனிக்கிழமை)
கடந்த 31 ஆம் திகதி ஆரம்பமான கந்தசஷ்டி விரதத்தை தொடர்ந்து தொண்டைமானாறு செவ்வசந்நிதி முருகன் ஆலயத்திலும் சூரன் போர் இன்று மிகுந்த பக்தர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று பிற்பகல் சுமார் 0500 மணியளவில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து முருகன் பெருமான் கேடய வாகனத்தில் எழுந்தருளி சூரனோடு போர் புரியும் நிகழ்வு சுமார் 7 மணியளவில் இடம்பெற்றது.
முதலில் தாரகாசூரனுடன் பின்னர் சிங்கமுகனுடனும் அதனைத் தொடர்ந்து இறுதியில் சூரபத்மனுடன் போர்நிகழ்வு நடைபெற்றது.
சூரசங்காரத்தில் முருகப்பெருமான் பெற்ற வெற்றியால், சூரசம்கார தினத்தன்று முனிவர்களும் தேவர்களும் மகிழ்ச்சி கொண்டதாகப் புராணக் கதைகளில் கூறப்படுவதைப்போல், இன்று செல்வச்சந்நிதி ஆலயவீதியில் முருகப்பெருமான் அடியார்கள் பக்திமயப்பட்டிருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது.
இன்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இரவு முழுவதும் நான்கு சாமமும் பூசைகள் நடைபெற்று, அடியார்களின் கந்தசஷ்டி விரதத்தை முடித்து வைக்கும் முகமாக இன்றும், நாளையும் ஆலயத்திலும், ஆலயத்தைச் சுற்றியுள்ள மடங்களிலும் அன்னதானம் (பாறணைச் சாதம்) வழங்கப்படுவது வழமையானவொன்று என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
படங்களில் சூரசம்காரத்தைப் பார்ப்பதற்கும், தெய்வ தரிசனத்தைப் பெறுவதற்கும் யாழ் தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்களையும், முருகப்பெருமானின் சூரசம்காரத்தையும் காணலாம்.
முருகப் பெருமானின் ‘திருக்கல்யாண வைபவம்’ நாளை நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.