பேராசிரியர் சிவத்தம்பியின் 88 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2018 (வியாழக்கிழமை)
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்திருந்தார். முன்னணி தமிழ் அறிஞராக கருதப்பட்ட திரு. சிவத்தம்பி அவர்கள் கரவெட்டியில் ஆரம்ப படிப்பினையும் கொழும்பில் மேல் படிப்பினையும் மேற்கொண்டிருந்தார்.
கொழும்பில் பேராசிரியராக பணியாற்றிய இவர் கண்டி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முனைவர் பட்டத்தைப் பெற்றிருந்தார். அத்துடன் இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் Doctor பட்டமும் பெற்றிருந்தார்.
சுமார் 17 ஆண்டு காலம் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். பலவேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றிய இவர் மேடை நாடகங்கள், மற்றும் வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஈழத்தமிழ் தொடர்பாக சுமார் 70ற்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளதுடன், 200 ற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
இவர் இறுதியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, இந்தியாவின் தமிழகத்தின் கோவையில், அப்போதைய திமுக ஆட்சியின் பொழுது நடைபெற்றிருந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆகும். ஆரம்பத்தில் இந்த மாநாட்டிற்கு சமூகமளிக்க விரும்பாத இவர், பின்னர் சமூகமளித்திருந்தமை இலங்கை தமிழர்கள் மத்தியில் ஒரு சிறு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனாலும் பொதுவாக இலங்கை தமிழர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டிருந்த இவர் ஜூலை மாதம் 6 ஆம் திகதி 2011 ஆம் ஆண்டு காலமானார். அப்பொழுது அவர் கொழும்பிலுள்ள தெகிவளையில் வசித்து வந்திருந்தார்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மனைவி திருமதி விமலாதேவி சிவத்தம்பி அவர்கள் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் நினைவுத்தினம் இங்கு ஊடகங்களினாலோ அல்லது இவர் சார்ந்திருந்த துறையினராலோ சிறந்த முறையில் நினைவு கூறப்படாதது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.