வணிகக்கப்பற்துறை செயலகத்தின் சான்றிதழ்கள் இனி கணனிமுறையில்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2017 (புதன்கிழமை)
வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் (Shipping office) வழங்கப்படும் சான்றிதழ்களை கணனி முறையில் வெளியிட்டுவைக்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் வணிகக் கப்பல்களில் பணிபுரிவோரை பதிவுசெய்து வழங்கும் இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC - Crew discharge certificate) மற்றும் தகுதிச் சான்றிதழ்களை (Certificate of competency) கணனி முறைமையில் ஜனாதிபதி வெளியிட்டுவைத்தார்.
இலங்கை சமுத்திர வணிகக் கப்பற் துறை அலுவல்களை நிர்வகித்தல் மற்றும் அதற்கான சட்டதிட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பு துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சின் கீழ் இயங்கும் வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
கப்பல்களில் தொழில்களுக்காக செல்லும் அனைத்து கப்பற் துறையினரும் இந்த இடையறாத விலக்கற் சான்றிதழைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இதுவரையில் நவீன தொழில்நுட்ப முறைமைகள் பின்பற்றப்படாத காரணத்தினாலும் உயர்தரம் வாய்ந்த பாதுகாப்பு அடிப்படைகளுடன் கூடிய சான்றிதழ் பத்திரங்கள் வழங்கப்படாத காரணத்தினாலும் வணிக கப்பற் துறையினரும் கப்பல் உரிமையாளர்களும் சான்றிதழ்களை வழங்கும்போது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது.
இதன் மூலம் இலகுவாக போலிச் சான்றிதழ்களை தயாரித்தல் மற்றும் தகுதியற்றவர்கள் தொழில்களுக்கு நியமிக்கப்படுதல் போன்ற காரணங்களினால் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும்; தகுதியானவர்கள் தொழில் பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகவும் காரணமாக அமைந்தது.
புதிய சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதுவரை வணிக கப்பற் துறையினர், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்கள் குறிப்பாக வெளிநாட்டு துறைமுகங்களில் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கும் நிலை குறைவடைந்துள்ளதுடன், இலங்கை வணிகக் கப்பற்துறையினருக்கு சர்வதேச ரீதியில் கேள்வி அதிகரிப்பதன் மூலம் தொழில் வாய்ப்புகள் அதிகரித்து பெருமளவு அந்நிய செலாவணியும் நாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இந்நிகழ்வில் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, வணிக கப்பற் துறை செயலகத்தின் செயலாளர் பீ ஜயம்பதி, பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன ஆகியோரும்; கலந்துகொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.