பொருளாதார விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் அநுர
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2024 (வெள்ளிக்கிழமை)
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் இருந்து மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக கடன் நிலைத்தன்மை குறித்த மாற்று ஆய்வுக்கு செல்ல உள்ளதாக அவர்கள் தெரிவித்து வந்தனர்.
ஆனால் இதுவரை அவர்கள் அத்தகைய மாற்று ஆய்வுக்கு செல்லவில்லை. மேலும், கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான மாற்றங்களைச் செய்ய அவர்கள் தலையிடுவதில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எவ்வித மாற்றமுமின்றி முன்னோக்கி நகர்கின்றன.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு பெரிய மாற்றமாக, சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரி தொடர்பாக மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படலாம். ஆனால், முன்னைய அரசாங்கம் முன்வைத்த விடயங்கள் அடிப்படையில் அங்கும் என்ன நடக்கப் போகின்றன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும், மக்களுக்கு எத்தகைய வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவை எதனையும் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை என்பது புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளார் என்றே கூறலாம். ஆனால் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அவர் கடைப்பிடிக்கும் முறையில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனது கருத்துப்படி, அவரது நடவடிக்கைகள் பொருளாதாரப் பக்கத்திலிருந்து மிகச் சிறந்த முடிவுகளைத் தரும்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கடந்த அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையையே நடைமுறைப்படுத்துகின்றார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையுடன் தற்போதைய ஜனாதிபதியும் உடன்படுகின்றார் என்பது தெளிவாகின்றது. இந்நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாக மாற்றுவதற்கு, புதிய ஜனாதிபதி முன்னைய பொருளாதாரக் கொள்கையையே தொடர வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையில் செயற்பட்டு வருகின்றார்.
தேர்தல் மேடையில் எவ்விதமான வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், கடந்த அரசாங்கம் செய்தது போன்று பொருளாதாரத்தை பேணாவிட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்பதை ஜனாதிபதி உள்ளிட்டோர் புரிந்து கொண்டுள்ளனர். அத்துடன், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருக்கு பொருளாதார நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரிகள் நீண்ட காலமாக நாட்டுக்கு தமது பெறுமதியான சேவையை வழங்கினர்.
மேலும், அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட காற்றாலை மின் திட்டத்தை நிறுத்துவதாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தேசிய மக்கள் சக்தி கூறியது. ஆனால் அவர்களின் நிலை இப்போது மாறிவிட்டது. அதைப் பின் தொடர முடிவு செய்வதும் ஒரு நேர்மறையான அம்சமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.