காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள கலாநிதி நடிகைமணி வைரமுத்து சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2022 (வியாழக்கிழமை)
யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா, ஆச்சிக்குட்டி தம்பதியினருக்கு மகனாக வைரமுத்து பிறந்தார்.
காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1932 இல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் 3 ஆம் வகுப்பில் சேர்ந்தார்.
பாடசாலைக் காலத்தில் அப்பூதியடிகள் என்ற இசை நாடகத்தில் அப்பூதியடிகளாக நடித்தார். 1938 ஆம் ஆண்டு தனது 14 ஆம் வயதில் சங்கீத கோவலன் என்னும் இசை நாடகத்துக்கு முதன் முதலாக ஆர்மோனியம் வாசித்துள்ளார்.
இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 1941 தொடக்கம் 1942 வரை தமிழகம் சென்று மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கருநாடக இசை பயின்றார். இரண்டு ஆண்டுகளில் சங்கீத வித்துவானாகவும், ஒரு நடிகனாகவும் நாடு திரும்பினார். 1944 இல் அண்ணாவியார் சின்னய்யாவின் மகள் இரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
அரிச்சந்திரா, அல்லி அர்ஜுனா, பக்தநந்தனார், பவளக்கொடி, அருணகிரிநாதர், பூதத்தம்பி, கண்டி அரசன் ஆகிய நாடகங்கள் மூலம் மங்காப் புகழ்பெற்றவர் நடிகமணி வி.வி.வைரமுத்து. இவர் நடித்த மயானகாண்டம் 3,000 தடவைக்கு மேலாகவும், பக்த நந்தனார் 1,000 தடவைக்கு மேலாகவும் மேடையேறியது.
1950 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் மேடையேற்றப்பட்ட சம்பூர்ண அரிச்சந்திரா நாடகத்திலேயே வைரமுத்து முதன் முதலாக அரிச்சிந்திரனாக நடித்தார். வைரமுத்துவின் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது மயான காண்டம் என்னும் இசை நாடகம். இது இலங்கை முழுவதும் 3000 இற்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டது.
ஈழத்தின் இசை நாடக வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாபெரும் கலைஞராகத் திகழ்ந்தவர் அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றும்கூட ‘அரிச்சந்திரா” நாடகமென்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது வைரமுத்து அவர்கள்தான்!.
கலைஞர்கள் பல நாடகங்களில் பல பாத்திரங்களில் நடிப்பார்கள். ஆனால் அரிச்சந்திரனாக நடித்தால் மட்டும் அவர்களை நடிகமணி வைரமுத்து அவர்களுடன் ஒப்பிட்டே பார்ப்பார்கள். அப்படியாக மக்கள் மனங்களில் எல்லாம் அரிச்சந்திரனாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர்.
இவர் நடித்த ‘அரிச்சந்திரா மயானகாண்டம்” நாடகம் மட்டும் 3000க்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டு பெரும் சாதனையை நிலை நாட்டியிருப்பதோடு,
இலங்கை வானொலியிலும் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டிருப்பதும் இலங்கையில் தயாரான நிர்மலா” என்னும் திரைப்படத்தில் இன் நாடகத்தின் ஒரு சிறு காட்சி இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நாடகமே இலங்கை ரூபவாகிணி கூட்டுத்தாபனம் ஒளிபரப்பு செய்த முதல் தமிழ் நாடகமும் ஆகும்.
எவ்வளவுதான் புகழ் உச்சியில் இருந்தபோதும் சிறிதேனும் தலைக்கனம் இல்லாத அர்ப்பணிப்பு மிக்க கலைஞர் நடிகமணி அவர்கள்.
பாடி நடிப்பது மட்டுமல்ல! மிருதங்கம் ஆர்மோனியம் வயிலின் ஜலதங்கரம் போன்ற வாத்தியங்களை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்.
சிறந்த நாடக நெறியாளரான இவர் கலைப்பணிமீது கொண்ட பற்றால் தான் பணிபுரிந்து வந்த ஆசிரியத் தொழிலைத் துறந்து ‘வசந்தகான சபா” என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்து சரித்திர புராண இதிகாச நாடகங்களை தத்ரூபமாக நடித்து மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தார்.
கலையரசு சொர்ணலிங்கம் ஜயா அவர்களே இவருக்கு நடிகமணி என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தார். பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் எழுதிய நாடக தீபம் என்னும் நூலில் ‘தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல்” என்று வைரமுத்து அவர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கின்றார்.
அது மாத்திரமல்ல பேராசிரியர் திரு வித்தியானந்தன் அவர்கள் ‘கலைக் கோமான்” என்னும் விருதையும் பேராசிரியர் திரு கைலாசபதி அவர்கள் நவரச திலகம்” என்னும் விருதையும் தென்னிந்திய தமிழ் மூதறிஞர் திரு.மா.பொ.சிவஞானம் அவர்கள் நாடக வேந்தன்” என்னும் விருதினையும்
முன்னாள் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் நடிப்பிசைச் சக்கரவர்த்தி” என்னும் விருதினையும் பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் ‘முத்தமிழ் வித்தகர்” என்னும் விருதினையும் வழங்கி வைரமுத்து அவர்களைக் கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள்.
இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 2004ம் ஆண்டில் இவருக்கு “கலாநிதி” பட்டத்தை வழங்கி கௌரவித்திருந்ததும் நடிகமணி அவர்களின் கலைப்பணிக்குக் கிடைத்த மேலதிக சிறப்பாகும்.
கலையரசு சொர்ணலிங்கம் இவருக்கு நடிகமணி என்னும் பட்டத்தை 1960 ஆம் ஆண்டில் வழங்கிக் கௌரவித்தார்.1964 ஆம் ஆண்டு அமைச்சர் எஸ். தொண்டமான் நாடகச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் வழங்கினார்.1970 ஆம் ஆண்டு தந்தை செல்வா நடிப்பிசை மன்னன் எனும் பட்டத்தை வழங்கினார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி "நாடக தீபம்" என்னும் வி.வி வைரமுத்துவின் நினைவு நூலில் தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல் என்று வைரமுத்து அவர்களுக்குப் புகழாரம் சூட்டியிருக்கின்றார்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் கலைக் கோமான் என்னும் விருதையும் பேராசிரியர் க. கைலாசபதி நவரச திலகம் என்னும் விருதையும், தென்னிந்திய தமிழ் மூதறிஞர் ம. பொ. சிவஞானம் நாடக வேந்தன் என்னும் விருதினையும், திருநாவுக்கரசு அவர்கள் நடிப்பிசைச் சக்கரவர்த்தி என்னும் விருதினையும்
பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் முத்தமிழ் வித்தகர் என்னும் விருதினையும் வழங்கிக் கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2004 ஆம் ஆண்டில் இவருக்கு “கலாநிதி” பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தது.
வைரமுத்து வானொலி நாடக ஒலிப்பதிவுக்காகக் கொழும்பு சென்ற போது மாரடைப்பால் 1989 சூலை 8 அன்று அன்று காலமானார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.