இன்றைய நாளில் வல்வையில் – பாக்குநீரிணையக் கடந்திருந்தார் நவரத்தினசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2019 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் நீச்சல் வீரன் நவரத்தினசாமி என அழைக்கப்படும் அமரர் நவரத்தினசாமி பாக்கு நீரிணையை இதே நாளான 25.03.1954 அன்று வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து நீந்தி ஒரு வழி கடந்திருந்தார்.
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை நீந்திக் கடக்க தனது முதலாவது முயற்சியை 1954ஆண்டு பங்குனி மாதம் 16ம் திகதி வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் ஆரம்பித்திருந்த போதிலும், இருபத்து மூன்றரை மணித்தியால முயற்சியின் பின் அசாதாராண காலநிலை காரணமாக முதலாவது முயற்சியைக் கைவிடவேண்டியிருந்தது.
மீண்டும் இன்றைய நாளில் 25 ஆம் திகதி மாலை மீண்டும் நூற்றுக் கணக்கான மக்கள் கூடி வாழ்த்துக்கூற நீந்த ஆரம்பித்து சிறிதும் இழைப்பாறாது அடுத்த நாள் மாலை 7மணிக்கு தமிழகத்தின் கோடிக்கரையைச் (கோடியாக்கரை) சென்றடைந்தார்.
இதன் மூலம் பாக்கு நீரிணையை முதன் முதலில் ஒரு வழி தூரம் கடந்தவர் என்ற பெயருக்கு உரியவர் ஆனார் நவரத்தினசாமி. மேலும் இதனைத் தொடர்ந்து இவர் 'நீச்சல் வீரன் நவரத்தினசாமி' என அழைக்கப்பட்டார்.
கோடியாக்கரையில் நவரத்தினசாமிக்கு பெரிதும் வரவேற்பு வழங்கப்பட்டது. இலங்கை மற்றும் தமிழக ஊடகங்களில் இவரின் முயற்சி பெரிதாகப் பேசப்பட்டது. இலங்கை, இந்தியப்பிரதம மந்திரிகள் பாராட்டுரைகளும் இவருக்கு கிடைத்தது. இவற்றுக்கும் மேலாக எலிசபேத் மகாராணி இலங்கைக்கு வந்தபோது இவ் வீரர் அவருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.
நீச்சல் வீரன் நவரத்தினசாமியைக் கெளரவிக்கும் முகமாக கடந்த 25.03.2014 ஆம் ஆண்டு நவரத்தினசாமியின் சிலை தொண்டைமனாற்றுச் சந்தியையொட்டி திறந்து வைக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.