•இது சடுதியானது அல்ல. போராளிகளை ஒன்றிணைத்து செயற்படுவது குறித்து ஒரு வருடத்துக்கு முன்பே தேசிய, யாழ் பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டிருந்தோம். ஜனாதிபதித் தேர்தல் சமயத்திலே குழப்பங்களை ஏற்படுத்த கூடாது என்பதற்காக வெளிப்படையான செயற்பாடுகளை தவிர்த்திருந்தோம்.
அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்திருந்தபோது சம்பந்தன் ஐய்யாவே, நான்கைந்து மாதங்களுக்கு முன்பே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் போது நீங்கள் என்னோடு பேசிய போது நான் அதை எதிர்த்தேனா, இல்லையே நானும் அதை நல்ல நடவடிக்கை என்று கூறியிருந்தானே என்று தெரிவித்திருந்தார். எனவே சடுதியான அரசியற் பிரவேசம் என்று சொல்லுவதற்கில்லை உரிய காலத்தில், உரியமுறையில் மேற்கொள்ளப்பட நடவடிக்கை.
மேற்படி ஒருவருட காலப்பகுதி உங்களை மக்களிடையே கொண்டு செல்லப்போதுமானதா?
மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய புதிய தேவை இல்லைஇ போராளிகள் மக்களுடன்தான் இருந்தவர்கள், மக்களோடுதான் நிற்கின்றார்கள். புதிதாக மக்களிடையே அரசியற்கட்சியாக வந்திருக்கின்றார்கள் என்ற விடயத்தை சொல்லவேண்டியிருக்கின்றது தவிர இது ஒரு புதிய ஆரம்பம், புதிய விடயம் இல்லை, மக்களோடு மக்களாக இருந்தவர்கள் யுத்தத்தின் காரணமாக அவர்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுருந்தன. அவர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்கள் வெளியில் வந்துள்ள நிலையில் அவர்களின் பணி ஆரம்பமாயிருக்கின்றது.
புதிய கட்சியாக வந்திருக்கின்றதென்பது அதனுடைய வடிவம்தான் புதிதாக இருக்கலாமே தவிர அவர்கள் மக்களோடு இருந்தவர்கள், ஆகவே மக்களிடம் புதிதாக எடுத்து செல்வதற்கு நீண்ட காலம் தேவை நீண்ட விடயம் என்று புதிய கட்சியாக பார்க்க வேண்டாம் புதிய கட்சியாக பார்க்கவில்லை ஆனால் அரசியற்களம் வேறு, போராட்டக்களம் வேறு, அரசியற்களம் என்று சென்று உடனடியாக குறிப்பிட்ட குறைந்த காலப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் அளவு மக்கள் ஊடாட்டம் போதுமானதாக உள்ளதா?
உங்களுடைய கேள்வி ஒரு வித்தியாசமான கேள்விதான், போராட்டக்களம் வேறு, அரசியற் களம் வேறு என்றுதான் அவர்கள் போராடிய காலத்திலும் அரசியல் நடத்தினார்கள், அவர்களது அரசியற் கருவிகள்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இருந்தது. அவர்களது ஆயுதப்போராட்டம் மௌனிக்கபட்டமையால், அந்த அரசியற்கருவியை அவர்கள் பயன்படுத்துகின்ற, நேரடியாக கையாளுகின்ற நிலமை இல்லாமல் போனது உண்மைதான்.
ஆனாலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஒரு போதிய கால அவகாசம் காணதென்பது, திடீர்த்தேர்தல்தான், நீண்ட காலமாக இருக்கின்ற கட்சிகளுக்கு இத்தகைய தேர்தலை எதிர்கொள்வது இலகுவாக இருந்திருக்கும், அரசியல் ரீதியாக போராட்டத்தில் ஒரு புதிய பாதைக்குள் வந்த போராளிகளுக்கு, இது குறுகியதென்றாலும் நான் நினைக்கின்றேன் அவர்களது செயற்பாடு மக்களை சந்திப்பதற்கு இந்த கால அவகாசத்துக்குள்ளேயே தங்களுடைய தொடர்பாடல்களினால், மக்கள் மனதில் அவர்களுக்குரிய இடத்தை தக்கவைத்து வெளிப்படுத்துவார்கள் என நாங்கள் எதிர்பாக்கின்றோம்.
அடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சி, முன்னாள் போராளிகளென்ற 12,000 வரையான எண்ணிக்கையான அனைவரையும் உள்வாங்கி அவர்களின் பிரதிபலிப்பாக செயற்படுகின்றதா? அல்லது குறிப்பிட்ட சில நபர்களின் கூட்டாக செயற்படுகின்றதா?
அது உங்களுடைய அர்த்தத்தை பொறுத்தது, இங்கே பல தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன. பல கட்சிகளின் பெயரிலே அந்தக்காலங்களில் எல்லாம் பல்லாயிரம் போராளிகள் இருந்தார்கள். இப்போது அவை டசின் கணக்கான ஆட்களை வைத்துக்கொண்டு கட்சிகளின் பெயரிலே வேறேதோ செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை பற்றி யாரும் பேசுவதாக இல்லை. நான் முன்னாள் போராளிகள் இயக்கம் பலவற்றை பற்றி சொல்லுகிறேன்.
அவர்கள் எத்தனையாயிரம் பேரோடு இயங்கின இன்று எத்தனையாயிரம் பேர் அவர்களில் அங்கத்தவர்களாக போராளிகள் இருக்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும். ஆனால் இந்த போராளிகளை பொறுத்தவரை இது ஒரு ஆரம்பம்தான், 12,000 போராளிகளும் உடனடியாக வரக்கூடிய வழமையான நிலமை இல்லை. முதலிலேயே இரண்டு போராளிகள் ஒரு இடத்திற் கூடியிருந்து அரசியல் செய்யலாம் என்ற விடயத்தை வெளிக்கொண்டு வருவது ஒரு முக்கியமான விடயம் யுத்தத்துக்கு பின்னர். அதைச் செய்யவேண்டிய அரசியற் தரப்புக்கள் அவர்களை வைத்து அரசியல் செய்ததே தவிர அதைச்செய்யவில்லை.
நாங்கள் இப்போது நூற்றுக்கணக்கிலே பல நூற்றுக்கணக்கிலே போராளிகள் ஒன்றிணைந்து வீடுவீடாக செல்கிறார்கள். ஒருஇடத்தில் கூடியிருந்து அரசியல் பேசுகிறார்கள். அதுவும் சிறைகளுக்குள்ளே வாடிவதங்கி மிக நெருக்கடியான கால கட்டத்தை எதிர்கொண்ட போராளிகள் ஒன்றிணையக்கூடிய சூழல் இருக்கின்றது. கலியாண வீடுஇ செத்தவீட்டில் கூட அவர்கள் ஒன்றிணைந்து பேசலாம் என்ற நிலை இருக்கவில்லை என்ற மாயத்தோற்றம் இருந்தது. அதை உடைத்திருக்கிறோம்.
பல நூற்றுக்கணக்கில் திரண்டிருக்கிறார்கள். பல போராளிகளுக்கு உடனடியாக அரசியல் வேளைகளில் ஈடுபடுவதற்கு நெருக்கடி இருக்கின்றது. வாழ்வாதார சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுடைய சிக்கல்களிருந்து அவர்கள் வெளிப்பட்டு அரசியல் செய்வதற்கான பாதை திறந்திருக்கின்றது. அது வர்களுடைய அமைப்பு அவர்கள் கொஞ்சம் கொஞ்ச்மாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த தேர்தலையொட்டிய பிரச்சாரம் அவர்களை பெரியளவில் இணைக்கபண்ணியிருக்கின்றது. இது ஒரு பெரிய விஸ்வரூப நிகழ்வுக்கான ஆரம்பம் என்று நினைக்கின்றேன்.
ஒரு ஊடகவியலாளனுக்கு அர்த்தமில்லாத கேள்வி. 12,000 போராளிகளை இணைப்பத்துக்கு நான் ஒரு இராணுவ பிரதிநிதியாக இருக்க வேண்டும். நாங்கள் பகிரங்க அழைப்பு விட்டிருக்கின்றோம். பலநூற்றுக்கணக்கில் போராளிகள் திரண்டு வருகிறார்கள். அவர்கள் பிராந்தியரீதியாக இணைகிறார்கள். அவர்களுடைய கட்டமைப்பு ரீதியான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. போராளிகள் மாத்திரமல்ல போராளிகளினுடைய ஆதரவாளர்கள், போராளிகள் குடும்பங்கள், விடுதலைபுலிகளோடு ஆதரவாக நின்ற எங்களை போன்றவர்கள் போன்ற பலதரப்பினர் இருக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் இணைத்து கட்டமைப்பு ரீதியாக வருவார்கள்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றால் நாட்டிலுள்ள 2 கோடி மக்களால் அங்கீகரிக்கபட்டவர் என்று அல்ல, பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கபட்டிருக்கலாம். அது போன்றுதான் இதுவும். தமிழர்களுடைய உரிமை போராட்டத்தில் முக்கியமான பங்குதாரர்கள் போராளிகள்தான், அவர்ளை புறந்தள்ளி அரசியல் செய்யவேண்டும்மென்று அவசியமில்லை. அவர்களை புறக்கணிக்க வேண்டிய அரசாங்கமே அவர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கியிருக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட இடம் வழங்கப்படாமையை அடுத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பை நோக்கி முன்வைக்கப்படும் படும் மோசமான விமர்சனங்கள் பற்றி?
என்ன மோசமான குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறோம்.
உங்கள் ஊடக பேச்சாளர் துளசி ரிசாட் பதியுதீனை விட மோசமானவர்கள் கூட்டமைப்பு என்று கூறியது?
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்களே விடுதலைப்புலிகள்தான். அவர்களை சரியான திசையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. தேர்தலின் பின்னர் நாங்கள் வென்றதன் பின் நாங்கள் அதைச் செய்வோம். கூட்டமைப்பை வழிநடத்துகின்ற பொறுப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? எவ்வாறு வழிநடத்துவது தொடர்பான தந்திரோபாயங்கள் எம்மிடத்தே உண்டு. எங்கள் தேர்தல் பிரச்சார களத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
எங்களுக்கு போராளிகள் அதிகம் உள்ள இடம் வன்னி, போராளிகள் அதிகமாக இருக்கிறார்கள் கிழக்கில் ஆனால் நாங்கள் அங்கெல்லாம் தேர்தலில் குதிக்கவில்லை. காரணமிருக்கின்றது. நாங்கள் தமிழர்களுடைய ஐக்கிய தேசிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு பங்கம் வரக்கூடாதென்று கவனத்திலெடுக்கின்றோம் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் எவ்வளவு கரிசனையோடு இருக்கின்றோம் என்பதே, தனிநபர்கள் தமது ஆயுட்கால கதிரையை தக்கவைத்துக் கொள்வதற்காக கூட்டமைப்பை கருவியாக வைத்துக்கொண்டு தவறாக வழிநடத்தப்படுகின்றதே என்பதுதான் எமது குற்றச்சாட்டு ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்று அல்ல.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உங்களுக்கு தேர்தலில் இடம் வழங்க மறுத்திருந்த நிலையில் இன்னொரு தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை நாடாதது ஏன்?
அவர்களது கொள்கை நிலைப்பாடு சம்பந்தமாக நாங்கள் எந்த இடத்திலும் விமர்சிக்கவில்லை. ஆனால் நாங்கள் இப்போது முன்னெடுக்கின்ற அரசியல் பணியை செய்பவர்கள் முன்னாள் போராளிகள், அவர்களுடைய அரசியல் எல்லைகள், வீச்சங்கள் பற்றி இன்றைய நிலையிலே எங்களுக்குள் ஒரு முடிவு இருக்கின்றது. அவர்கள் சாகத்துணிந்தவர்கள், தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வந்தவர்கள் ஆனாலும் இரண்டு தேசம் ஒரு நாடு என்ற கொள்கை நிலைப்பாட்டிலே அவர்களை வைத்து அரசியல் செய்வது இன்றைய நிலையில் பொருத்தமானதும், பாதுகாப்பானதுமாக எங்களுக்கு தெரியவில்லை. அவர்களும் அந்த சிந்தனையில் இருக்கவில்லை. கஜேந்திரகுமார் தனது முயற்சியிலே வெற்றி பெற்றால் எங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் உண்டு
ஊடகங்கள் சம்பந்தமாக எங்களுக்கு சில மனக்கவலை இருக்கின்றது. யாரை வைத்து ஊடகங்கள் வணிகம் பண்ணினவோ, அவர்களை கைவிட்டுவிட்டு, அவர்கள் அவர்கள் அரசியல் வணிகம் நடத்துகின்றார்கள் என கவலை எமக்குண்டு, ஆனாலும் இதைத் தாண்டி மக்களை சென்றடையகூடிய வழியை நாங்கள் முன்னெடுப்போம்.
ஊடகங்களின் இவ்வாறான பிரதிபலிப்பது உங்களுக்கு எவ்வாறு எதிவினையாற்றுகிறது?
நிச்சயமாக ஊடகங்களை தாண்டி செல்லுவது ஒரு நெருக்கடியான விடயமாக இருந்தாலும் கூட எங்களுடைய பார்வையை மக்களுக்கு எடுத்து செல்வோம். மேலும் ஊடகங்கள், விளம்பரங்களை வளைத்து போடுவதற்கான நிதிபலத்துடன் நாங்கள் வரவில்லை.
இளைஞர்களினுடைய வரவேற்பு?
இது புரிகின்றது அவர்களுக்கு கடந்த காலம் தெரியாமல் இருக்கலாம். இளைஞர்களால் பெரிதும் வரவேற்க்கப்படும் அமைப்பாக போராளிகள் கட்சி இயங்கும் என்ற நம்பிக்கை என்னுடைய அனுபவத்தில் எனக்குண்டு.
கட்சியை ஆரம்பிக்கமுன் சுவிற்ஸர்லாந்து, நோர்வேயில் நடந்த கூட்டங்கள் பற்றிய மர்மம் என்ன?
நான் வெளிநாடு சென்றது என்னுடைய புத்தக வெளியீட்டிற்காக, அங்கு புதிய கட்சி பற்றி எழுப்பபப்ட்ட கேள்விகளுக்கே நான் பதிலளித்தேன்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பெயரிலேயே முன்னாள் போராளிகளை கூட்டி கட்சி ஆரம்பித்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி?
இது மட்டுமல்ல சம்பந்தன் ஐயா, ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இயங்கும் புலனாய்வுத்துறையின் வழிகாட்டலில் இயங்குகின்றோம் என்ற குற்றச்சாட்டையும் வைத்திருந்தார். இவையனைத்தும் எவ்வித ஆதரமில்லாமல் முன்வைக்கப்படும் அபத்தமான குற்றச்சாட்டு.
எதிர்வரும் தேர்தலில் உங்களின் வெற்றிவாய்ப்பு?
நாங்கள் வெற்றிவாய்ப்பை மாத்திரம் நம்பி களத்தில் இறங்கவில்லை. மக்களிடையே போராளிகள் என்ற உரிமை இருக்கின்றது, மக்களிடையே போராளிகள் மீது இருக்கின்ற அபிமானத்தையும், உண்மைத்தன்மையையும் விளங்கபடுத்தக்கூடியவாறு மக்களிடையே சென்றடைந்து உண்மையை சொல்லுவோமேயானால் யாழ் மாவட்டத்தில் அதிக ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் அதற்குரிய வசதி, வாய்ப்புகள் இல்லாது இருக்கின்றது. தேர்தலில் வெல்லுவது, தோற்பதை தாண்டி 50 போராளிகள் ஓரிடத்தில் கதைக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றோம். இதுவே தேர்தலை தாண்டி மிகப்பெரிய வெற்றி என்று நினைக்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலின் பின் எதிரகாலத்திட்டங்கள்?
நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்த கட்டுறுதியாக்க வேண்டும். மேலும் தென்னிலங்கையிலும் எங்கள்மீது நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கி, மக்களினுடைய உடனடிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு, நீண்டநோக்கிலே குறைந்தபட்சம் மூன்று தசாப்தங்களுக்காவது ஒரு இணக்கமான நிலை வரக்கூடிய தீர்வை நோக்கிய நகர்வை விட்டுக்கொடுப்போடும், அதேநேரம் பேரம் பேசும் சக்தியினுடைய முன்னெடுக்கவேண்டும்
நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக போராளிகள் கட்சி தோல்வியடையுமாயின், விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்கின்றார்கள் என்ற பரப்புரை எல்லா மட்டங்களிலும் மேற்கொள்ளப்படும், இது தொடர்பில்?
இதற்காக தமிழர்கள் எல்லோரும் எங்களை வெல்லவைத்து தங்கள் கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.
நாடாளமன்ற தேர்தலில் ஜனநாயக போராளிகள் கட்சி தோல்வி அடையுமாயின், விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்கின்றார்கள் என்ற பரப்புரை எல்லா மாவட்டங்களிலும் மோற்கொள்ளப்படும். இது தொடர்பில் ?
இதற்காக தமிழர்கள் எல்லோரும் எங்களை வெல்ல வைத்து, தங்கள் கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக ஜனநாயக போராளிகள் கட்சி எவ்வாறான தீர்வை முன் வைக்கின்றது?
இது ஒரு நல்லதொரு கேள்வி. நாம் இது தொடர்பாக ஏற்கனவே விவாதித்துள்ளோம். இது தொடர்பாக சரியான வார்த்தைகள், வடிவங்களில் வெளியாகவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது பற்றிக் குறிப்பிடவுள்ளோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.