மாவீரர்களுக்காய் வீடுகளில் 06.05கு தீபச்சுடரேற்றுவோம் – தமிழ் தேசிய கட்சிகள் கோரிக்கை!
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2020 (வியாழக்கிழமை)
மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றையதினம் (25) வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலிலேயே மேற்கண்ட கோரிக்கை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈழமக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிக்காந்தா, செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் சிவஞானம் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து கார்த்திகை மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும், எம் இல்லங்களிலும் அஞ்சலித்து வந்துள்ளோம்.
நினைவஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு கோரி வட – கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் பொலிஸார் வழக்குகளை தாக்கல் செய்து தடை உத்தரவுகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மாவீரர் நினைவஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பது தொடர்பாக உரிய வழிகாட்டல்களை எமது மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எம்மைச் சார்ந்திருக்கிறது. அதேவேளை தென்னிலங்கையில் பாரிய அளவில் பரவியிருக்கும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தனது தீவிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது.
உலகளாவிய உயிர்க் கொல்லி நோயாக தீவிரமடைந்து நிற்கும் கொரோனா தொற்றினைப் பொறுத்தமட்டில் எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எம் அனைவருக்கும் உள்ள சமூகப் பொறுப்பினை நாம் உணர்ந்திருக்கின்றோம்.
மாவீரர் நினைவஞ்சலி என்பது எம் அனைவரினதும் உணர்வுகளோடு இணைந்திருக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில் அஞ்சலி செலுத்த வேண்டிய எமது தார்மீக கடமையை எந்தச் சூழ்நிலையிலும் நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
கடந்த சில வருடங்களாக அனுமதிக்கப்பட்டு வந்த இந்த நிகழ்வு தொடர்பில் புதிய அரசாங்கத்தின் அணுகுமுறை எம்மால் ஏற்றுக் கொள்ளப்படமுடியாததாக அமைந்திருக்கிறது.
சட்ட ஏற்பாடுகளை துஸ்பிரயோகம் செய்து எத்தனை தடைக் கட்டளைகளை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும், மரணித்த உறவுகளுக்கு நாம் அஞ்சலி செலுத்துவதற்கு எமக்குள்ள அடிப்படை உரிமையை அரசாங்கம் மறுத்து நிற்கமுடியாது. அந்த உரிமையை எமது மக்கள் நிலைநாட்டியே தீருவார்கள்.
இந்தச் சூழ்நிலையில் மாவீரர் நினைவஞ்சலியை தமிழர் தாயகமெங்கும் எதிர்வரும் 27ம் திகதி வெள்ளிக்கிழமை தமது இல்லங்களில் இருந்தவாறே முன்னெடுக்குமாறு நாம் எமது மக்களை வேண்டுகிறோம்.
வழக்கம் போல மாலை 6.05 மணிக்கு தம் இல்லங்களில் சுடர் ஏற்றி எம் மாவீர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துமாறு எமது மக்களை நாம் மேலும் வேண்டுகின்றோம்.
எமது தேசத்தின் விடுதலைக்கான நீண்ட பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து இலட்சியம் என்னும் இலக்கினை நோக்கி நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கும் மாவீரர்களின் கனவுகள் நனவாவதற்கும் அவர்களின் நினைவுகள் நிச்சயம் எமக்கு வலுவூட்டும்” என தெரிவித்துள்ளார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.