வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் ஆரம்பம், மகோற்சவ விஞ்ஞாபனம் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2016 (புதன்கிழமை)
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 30.09.2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் கொடியேற்றம் தொடக்கம் 5 ஆம் திருவிழா வரை சுவாமி உள் வீதியும், 6ஆம் திருவிழா முதல் 16ஆம் திருவிழா வரை வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.
வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா 14.10.2016 அன்றும், சமுத்திர தீர்த்தம் திருவிழா 15.10.2016 அன்றும், கேணித் தீர்த்தத் திருவிழா 16.10.2016 அன்றும் நடைபெறவுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மகோற்சவ விஞ்ஞாபனம் கீழே இனைக்கப்படுள்ளது
வல்லிபுர ஆழ்வார் ஆலயம்
பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் கோயில், இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் வரலாற்று பிரசித்தி விஷ்ணு ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.
வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
பருத்தித்துறையில் இருந்து சுமார் 4 மைல் தொலைவில் இக்கோவில் உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையைக் கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் விளங்குகிறது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும்.
வல்லிபுர ஆழ்வார் கோவிலின் ஐதீக வரலாறு அற்புதமானது. தற்போது இக் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்து, ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. கற்கோவள கடலோடிகள் அந்த மச்சத்தைப் பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கை கூட வில்லை.
இவ்வேளையில் வராத்துப் பளையைச் சேர்ந்த நாகசாபம் பெற்ற லவல்லி எனப்படும் வல்லி நாச்சி பயபக்தியுடன் தவமிருந்தார். அவர் கனவில் தோன்றிய பகவான் சிலவற்றைக் கூறி மறு நாள் குறித்த இடத்திற்கு வருமாறு பணித்தார். மறு நாள் காலை அங்கு சென்று கரையில் உட்கார்ந்து பகவானின் திருநாமங்களை உச்சரித்தார். அப்போது அந்த மச்சம் கடலில் இருந்து அவர் மடியில் துள்ளிக் குதித்து அழகிய குழந்தையாக மாறியது.
கண்ணன் உதித்தான் என ஆரவாரம் செய்த அடியவர்கள் குழந்தையை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றனர். களைப்புற்ற மக்கள் ஓர் இடத்தில் பல்லக்கை வைத்து இளைப்பாறினர். பின்னர் பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தபோது பல்லக்கு மாயமாக மறைந்தது. சக்கரம் ஒன்று தோன்றியது. எனவே அம்மக்கள் அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை அமைத்து அச்சக்கரத்தை வழிபடத் தொடங்கினார்கள். இக்கதை ஐதீகக் கதையாகக் காணப்படுவதனால் அன்று தொட்டு இன்று வரை செவி வழியாகப் பேணப்பட்டு வருகிறது.
வைஷ்ணவ ஆலயங்களிலும் அக்காலங்களில் பிள்ளையாருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆலமரம், அழகிய குளம், நெல் வயல்கள் என இயற்கையின் அரவணைப்பில் உள்ள குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் வல்லிபுர ஆழ்வாருக்கு பூசை செய்வது வழக்கமாகும்.
புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் திருவிழா நடைபெறும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும். இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும்.
நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு சிறப்பான நாளாகும். இவ்வாறு இறைவன் ஒருவனே என்ற கருத்தின் அடி நாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சிவனும் திருமாலும் ஒருவரே என்ற உண்மையை வெளிப்படுத்தும் திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது.
இங்கு விபூதியும் திருநாமமும் பிரசாதமாக வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும்.
பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் கோவில் சமுத்திர தீர்த்தம் 2013 - (1)
பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் கோவில் சமுத்திர தீர்த்தம் 2013 - (2), கற்கோவளம் சமுத்திரப் பகுதி
பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் கோவில் சமுத்திர தீர்த்தம் 2013 - (3), கற்கோவளம் சமுத்திரப் பகுதி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.