பல்வேறு குறுந்திரைகளிலும் அரங்காற்றுகைகளிலும் இலக்கியப் பரப்புகளிலும் தனக்கென ஒரு இடத்தை நிலைநாட்டி தாயகத்திலும் பல தடங்களைப் பதித்து தமிழ்நாட்டில் வசித்தவாறு மனித வாழ்வியலையும் அவர்களது துன்ப துயரங்களையும் திணிக்கப்பட்ட கொடூரங்களையும் கொட்டித் தீர்க்கும் அல்லது நடித்துக் காட்டும் பலரது மனங்கவர்ந்த வலிநிறைந்த கலைஞர் ஆறுமுகம் சீதாலட்சுமி தம்பதிகளின் மகன் தங்கவேலாயுதம் எனும் இயற்பெயரை உடைய வல்வையூரான், தேவரண்ணா என அழைக்கப்படும் தேவர் அவர்கள் பற்றிய கட்டுரை பிரசூரிக்கப்பட்டுள்ளது.
வாழ்விடமாக தமிழ்நாட்டைக் கொண்டிருந்தாலும் அவரது எண்ணங்கள் மேன்மை தாங்கிய சிந்தனைகள் அத்தனையும் தான் பிறந்து வழர்ந்த தாய்நாட்டையும் தன்னை நெறிப்படுத்திய ஈழ தேசத்தையும் அந்த வாழ்வியல் முறைகளையும் வலிமையான, எழிமையான மக்களின் வீரதீர செயல்களை எழுத்திலும் பேச்சிலும் அபிநயத்தின் ஊடாகவும் தன்னால் இயன்றவரை இவ்வுலகப் பரப்பிற்கு அள்ளித் தெளித்து வருகிறார்.
இவரது இலக்கியப் படைப்புகளாக….
* வாழ்க்கையின் சுவடுகள்
(வல்வையூரான் சிறுகதைகள்)
இப்படைப்புக்கான
வாழ்த்துரை -
திரு.கலைஞானி கலைச்செல்வன் தலைவர் தமிழ்நாடக விழாக்குழு, இலங்கை கலைக்கழகம், கலாச்சார அலுவலர் திணைக்களம்.
அணிந்துரை -
திரு. க.சிவத்தம்பி யாழ் பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர்.
வாழ்த்துரை - திரு.பழ.நெடுமாறன் தலைவர் உலகத் தமிழர் பேரமைப்பு.
என இலக்கியப் பரப்பில் எழுத்தாற்றலை நிலைநாட்டிய இவர் தனது அரங்க நாடகங்களில்
* 1965ஆம் ஆண்டில் தனது சகோதரனின் இயக்கத்தில் “சங்கிலியன்” எனும் வரலாற்று நாடகத்தில் பெண் பாத்திரமேற்று நடித்தார்.
* 1968ஆம் ஆண்டு “மகனே கண்” இவ் நாடகத்தில் பௌத்த மதகுருவாக பாத்திரமேற்று நடித்து வல்வை உதயசூரியன் மன்ற நாடகப் போட்டியில் இந்நாடகம் முதல் பரிசினை தட்டிச்சென்றது.
* 1969ஆம் ஆண்டு “அந்தக் குழந்தை” எனும் நாடகம் உதயசூரியன் மன்ற நாடக போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
* 1970ஆம் ஆண்டு கொழும்பில்
ஜீவா நாவுக்கரசன் எழுதிய
“நல்லதோர் வீணை” நாடகத்தினை தயாரித்து மேடையேற்றியிருந்தார். இதில் பிரபல நடிகர்களான திரு.சிறீ சங்கர், எஸ்.எஸ் கணேசபிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர்.
* 1973-1977காலப்பகுதியில் மட்டக்களப்பில் கலைவட்டம் எனும் அமைப்பில் இணைந்து நாடகங்களில் நடித்து வந்த இவர் கலைஞர் கருணாநிதி எழுதிய “கண்ணகி” நாடகத்தில் பாத்திரமேற்று நடித்ததோடு அதன் தயாரிப்பு இயக்கத்தினையும் முன்னெடுத்திருந்தார். இவ் நாடகம் காரைதீவு கண்ணகி அம்மன் திருவிழாவில் அரங்காற்றுகையானது.
* 1980ஆம் ஆண்டு யாழில் அமரர் எஸ்.எஸ்.கணேசபிள்ளை அவர்களின்
“சண்டியன் சின்னத்தம்பி” மற்றும் பல நாடகங்ளில் தனது தடத்தைப் பதித்த இவர் தமிழகத்திலும் அதனது கலைப் பணிகளை ஆற்றியுள்ளார்.
அந்தவகையில்….
* 1984இல் சென்னை தியாகராஜநகர் வாணி மஹாலில்
“ரத்தம் சரணம் கச்சாமி” எனும் பெயரில் ஒரு நாடகத்தை எழுதி தயாரித்ததோடு அதில் பிரதான பாத்திரமும் ஏற்று நடித்திருந்தார்.
* 1985ஆம் ஆண்டு தமிழகத்தின் பாண்டிச்சேரியில் கவிஞர் ஆதவனின் “சங்காரமே” நாடகத்தை தயாரித்து மேடையேற்றியதோடு அந்நாடகத்தில் தமிழ்த்திரை உலகின் பிரபல நடிகர் நாசர் அவர்கள் சிறப்புப் பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.
* 1989ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.
* 1990ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வீரன் “புலித்தேவன்” கதையை இளைஞர்களை வைத்து இயக்கி அதில் புலித்தேவனாக பாத்திரமேற்று நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றதோடு மறக்கமுடியாத நினைவுகளையும் அந்த நாடகம் பெற்றுத் தந்தை பெருமிதத்தோடு கூறுகின்றார்.
* 1990இல்
அமரர் பொன்.கணேசமூர்த்தியின் “சந்தனக்காடு” நாடகத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்ததோடு அதன் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். இந்நாடகம் நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டதாக பெருமிதத்தோடு கூறுகின்றார்.
வானொலி நிகழ்ச்சிகளில் உரைச் சித்திரங்களை எழுதி அதனைத் தயாரித்தும் வழங்கியுள்ளார். இவர் எழுதி தயாரித்த “மண்ணுக்காக” நாடகத்தை பின்னாளில் திரைப்படமாக தயாரித்து அதன் பிரதான பாத்திரமாக தானே நடித்திருந்தார். அத்திரைப்படம் தாயகத்தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.
தாயக வானொலி ஒன்றிற்கு தொடர் நாடகமாக யாழ் ஊரெழு தர்சினியால் எழுதப்பட்ட “சிந்தாமணி” நாடகத்தில் கணவர் பாத்திரமேற்று நடித்திருக்கிறார். அதனை வானொலிக்கென இவரே தயாரித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பவன் கணேசமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட இராவணன் பற்றிய வரலாற்றுத் தொடரை இவரே தயாரித்தளித்ததோடு இராவணனாக நடித்தும் உள்ளார். இந்நாடகமானது 54வாரங்கள் தொடர் நாடகமாக ஒலிபரப்பப்பட்டது.
2004ஆம் ஆண்டு இளைஞர்கள் யுவதிகளுக்கு சிங்களம் கற்பிக்கின்ற வாய்ப்பும் இவருக்குக் கிடைத்திருக்கின்றது. இதன் பின்னர் தலைநகர் கொழும்பில் இருந்தவாறு நமது ஈழநாடு, ஈழநாதம் போன்ற பத்திரிகைகளின் செய்தியாரளராகவும் பணிபுரிந்த இவர்…
2004-2008 காலப்பகுதியில் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கிய இலங்கைக் கலைக் கழகத்தின் ஓரு பகுதியாகிய தேசிய நாடக சபையின் செயற்குழு அங்கத்தவர்களில் ஒருவராக பணிபுரிந்தார்.
இதே காலப்பகுதியில் இலங்கை கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கும் “கலாபூசணம்” விருது இவருக்கு வழங்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு நான்காம் மாதம்(04) 21-25ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெற்ற தேசிய தமிழ் நாடகவிழா போட்டிகளுக்கான பொறுப்புகளையும் அது தொடர்பான சிறப்புமலர் பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.
தற்போது நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல பக்கங்களைக் கொண்டிருக்கும் இவர் தமிழ்நாட்டில் இயக்குனர் தமிழ்வேந்தனின் “இனவெறி” குறும்படத்திலும், இயக்குனர் கலைவேந்தனின் “ஈழக்கனவுகள்” குறும்படத்திலும் நடித்திருக்கிறார். அது மட்டுமன்றி கொழும்பில் இருந்த காலப்பகுதியில் இயக்குனர் செல்வம் சுப்பையாவின் “இராமேஸ்வரம்” எனும் தாயகம் பறிய திரைப்படத்தில் நடித்த இவர் நடிகர்களான
மணிவண்ணன்,ஜீவா, பாவனா,
போஸ் வெங்கட் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்ததினையும் நினைவூட்டுகின்றார்.
அதன் பின்னர்
இயக்குனர் இகோரின் இயக்கத்தில் “தேன்கூடு” திரைப்கடத்தில் கதாநாயகியின் தந்தையாகவும் நடித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் இயக்குனர் புதியவன் இராசையாவின்
“ஒற்றைப் பனைமரம்” படத்தில் இராணுவ உயர் அதிகாரியாகவும் நடித்திருக்கின்றார்.
தொடர்ந்து இவரது நண்பரும் இயக்குனருமான ஹர்சத் கானின் இயக்கத்தில் “மீண்டும் புன்னகை” முழுநீளத் திரைப்படத்தில் ஓவியக் கலைஞராக மாறுபட்ட சதோற்றங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து
“மீண்டும் வருவோம்”, “தமிழினி” ஆகிய குறும்படங்களை இவரே எழுதி தயாரித்து நடித்தும் இருக்கிறார். பேராற்றல் கொண்ட இவரது கலைப்பயணங்களின் தொடர்ச்சியாக கவிஞர் தீபச்செல்வனின் திரைக் கதையில் உருவான “பிஞ்சு” குறும்படத்தை தயாரித்து இயக்கியுமுள்ளார்.
இவ்வாறாக கலைப்பயணங்களோடு ஒன்றித்துப் பயணித்த இவர் வலிநிறைந்த வாழ்வியல் பயணத்தைக் கருவாகக் கொண்டு தானே எழுதி தயாரித்து அதன் பிரதான பாத்திரத்தையும் ஏற்று நடித்திருந்த “என்ற மகன் எழிலன்” குறும்படமானது சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள திரைப்பட இயக்குனர்கள்சங்க மண்டபத்தில் ஆகஸ்ட் 30ஆம் திகதியன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளன்று வெளியிடப்பட்டது. வெளியீட்டின் பின் இந்திய மற்றும் சர்வதேச குறும்படப் போட்டிகளில் “என்ற மகன் எழிலன்” எனும் குறும்படம் ஒன்றாகி நின்றது.
இதுவரை இக் குறும்படம் 60 இற்கு மேற்பட்ட விருதுகளை வென்றாகி நிற்கிறது.
இவ்வாறாக பல்வேறு தளங்களில் தனது கலைப் பயணத்தை முன்னெடுத்து வரும் திரு ஆறுமுகம் தங்கவேலாயுதம் (தேவர் அண்ணர்) அவர்களை வாழ்த்தி நிறைவதோடு இன்னும் பல படைப்புகளை கலை உலகிற்கு வழங்குமாறு வேண்டி நிற்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.