ஓராண்டு கால சேவையை கௌரவத்துடன் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் - ந.சிவரட்ணம் (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)
Valvettithurai.Org
எனும் குழந்தையே உனது 1ம் ஆண்டு நிறைவு முதிர்ச்சியின் முதற்படியாகட்டும்
மனித வாழ்க்கை என்பது மனித மனத்தின் தன்மையது. அதனை ஒரு விளையாட்டாகவும் கொள்ளலாம் அல்லது போராட்டம் எனவும் அழைக்கலாம். எது எவ்வாறாயினும் வெற்றி ஒன்றே இலக்காக இருக்கும். வெற்றி சில வேளைகளில் மகிழ்ச்சி கொடுப்பதாகவும் சில வேளைகளில் இழப்புக்களை ஏற்படுத்துவதாகவும் அமையலாம். ஆனால் அதனை அடைய நாம் அனுபவிக்கும் வலி, சுமந்த நினைவுகள் என்பன வரலாற்று வரிகளை அமைத்துக்கொடுக்கும்.
இன்று வல்வை மண் அந்த இரண்டையும் சுமந்து தன் வரலாற்று வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறது. அவற்றின் கதாநாயகர்கள் விட்டுச்சென்ற விழுமியங்கள் சாதனைகள் எத்தனையோ!..............
'ஆழிக்குமரன் ஆனந்தனினதும்', இரட்டைப் பாய்மரக்கப்பல் 'அன்னபூரணியினதும்' இலங்கை மக்களுக்கே உணவு கொடுத்த எமது மரக்கல மறவர்களது சாதனைகளும் கடல்மீது எழுதப்பட்ட சாதனைகளுள் சில..
இன்னும் பல சாதனைகள் எழுதப்படாமலே உள்ளன. எது எவ்வாறாயினும் அவை எழுதப்பட்ட வரலாற்றிலிருந்து தான் ஆரம்பமாகும்.
கடந்த மூன்று தசாப்த வலி சுமந்த நினைவுகள் என்றாலும் அதற்கு முன்னர் சாதனை படைத்த நாயகர்கள் வரலாறு என்றாலும் அவை வல்வை மாதாவின் பெருமையை சுவீகரித்தவைதான். சாதனைகள் பட்டியலிட்டால் இப்படியுமா என்று உலகு தனது கண்களை அகல விரித்து ஆச்சரியப்படும்.
இந்த வகையில் உலகை கைக்கண்ணாடியாக்கி தனது இணையதளத்திற்குள் (சிறப்பாக) எமது வல்வெட்டித்துறையின் கடந்தகால வரலாறுகளையும் சமகால நாளாந்த வல்வை நிகழ்வுகளையும் பக்கச்சார்பின்றி சிறந்த நெறியாள்கையுடன் எமக்கு தந்துவரும் Valvettithurai.org யின் ஓராண்டு கால சேவையை கௌரவத்துடன் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
எதிர்காலத்திலும் 'காய்தல் உவர்தலின்றி' விமர்சனங்களுக்குட்படாமல் தொடர்ந்து மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.
நடராஜா சிவரட்ணம் (வல்வை ஜெயம்)
முன்னாள் இலங்கை வங்கி உதவிப் பொதுமுகாமையாளர் (வடமாகாணம்)
சர்வதேச இணைப்பாளர் - வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.