உங்களின் ஒவ்வொரு அடியும் மிகவும் உறுதியாகவும் தெளிவானதாகவும் தொடர்ந்தும் இருக்கவேண்டும் - Capt.S.Manivannan (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2013 (வெள்ளிக்கிழமை)
(Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
உங்களின் ஒவ்வொரு அடியும் மிகவும் உறுதியாகவும் தெளிவானதாகவும் தொடர்ந்தும் இருக்கவேண்டும்
முதல் அகவையை சிறப்புடன் பூர்த்தி செய்து, பல் நோக்கிலான வல்வையின் வளர்ச்சி, அதற்குத் தேவையான சேவை முயற்சி என்ற தன்னார்வ நோக்கில் தைரியத்துடன் முன் நகர்ந்து கொண்டிருக்கும் Valvettithurai.org இற்கு, அதன் சீரிய, நற்பண்புடன் கூடிய சேவை மென்மேலும் சிறப்புடன் பல் கோணத்திலும் விரிந்து, வளர்ந்து தொடர்ந்து வளர்ந்திட எனது மனங்களிந்த நல்வாழ்த்துக்கள்!
வல்வையின் இளம் கல்விச்சமுதாயம், தொழில்சார் புலமை, பொருளாதாரம், வளப்பயன்பாடு, விளையாட்டு, கலை கலாச்சாரம் என பல்முனை வளர்ச்சி மற்றும் தொன்மை, பாரம்பரிய விழுமியங்கள், மிச்சம் மீதிகளின் காப்பு அவற்றை அடையாளப்படுத்தி வைத்தல் என மிகவும் அகன்ற, யதார்த்தமான குறிக்கோளுடன் நீங்கள் மிகவும் முயற்சி எடுத்து முன்னகர்லதனை, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் உங்கள் இணையத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் என்னால் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக தனிநபர்கள் பற்றிய மிதமிஞ்சிய புகழ்பாடல்களைத் தவிர்த்து யாருடைய சங்கு என்று அடையாளப்படுத்தப்படமால், அதே நேரத்தில் தனிநபர் காழ்ப்புணர்பு, சக்தி வீச்சுக்களையும் கவனமாக தவிர்த்து அவற்றை வெறுத்து நிதானமாக, பண்பாக, ஒரு ஊடகத்திற்கு இருக்கவேண்டிய சமுதாய கடப்பாட்டுடன் முன்னேறுகின்றீர்கள்.
உங்களுடைய ஒவ்வொரு அடியும் மிகவும் உறுதியாகவும் தெளிவானதாகவும் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பது எனது அன்பானதும், ஆதரவானதுமான வேண்டுகோள்.
வாசகர் கருத்துக்களைப் பற்றிய என் எண்ணம் மற்றைய பல வாசகர்கள் போலவே நானும் ஓவ்வொரு செய்திப்பதிவு மற்றும் ஆக்கங்களுக்கு வாசகர் கருத்துப் பதிவுக்கும் சந்தர்ப்பம் இடம் ஒதுக்கிதருமாறு முன்பு கேட்டிருந்தேன். நீண்ட தயக்கத்தின் பின் வாசகர் கருத்துக்களம் திறக்கப்பட்டதும் அதன்பின் நீங்கள் எதிர்பார்த்திருந்த அசெளகாரியங்களை சந்தித்ததனையும் அவதானிக்கமுடிந்தது.
வாசகர் கருத்துக்களம் என்பது இணையத்தின் முக்கியமான ஆரோக்கியமான அம்சம்.
குதர்க்கமான, சிறுமைத்தனமான, தனிமனிதகாழ்ப்புணர்பு சகதிவாருதல், இலக்கு/விடயம் தவறிய,சமுதாயத்தில் எதிர்மறையான தாக்கத்தினை உருவாக்கக்கூடிய வாசகர்களின் கருத்துக்களை நீக்குவதற்கான பொறிமுறையும் அதற்கான துணிச்சலுடன் கூடிய அதிகாரமும் உங்கள் கையில் இருக்கும் போது இந்த வாசகர் கருத்துப்பகுதி எப்போதும் ஆரோக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.அப்படி ஒரு குதர்க்கமான, குழப்பமான வாசகர் குறித்து பகுதியிலிருந்து நீக்கப்படுமிடத்து அது யாரிடமிருந்து வந்தது என்ற அடையாளத்தை அப்படியே விட்டு வைத்து "கருத்து ஆசிரியரால் நீக்கப்பட்டது" என்ற குறிப்பை அங்கு நீங்கள் வைத்தால் யதார்த்தம் மற்றய வாசகர்களுக்கு தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மேலும் ஒரு அன்பான வேண்டுகோள். உங்கள் இணையத்தளத்தின் மரண அறிவித்தல்களை (வல்வை வாழ் மக்களின்) கட்டணவிளம்பராக அன்றி, மேலும் ஒரு போது நோக்கு சேவையாக நீங்கள் வழங்க முன்வாருங்கள். (வல்வையின் ஒரு செய்தி போலவே இதனை வெளியிடுங்கள்) இந்த சேவை வல்வைக்கு வெளியே இலங்கையில் வாழும் வல்வை மக்களுக்கும், புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வல்வை மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இணையத்தள மூலமான இந்த அறிவிப்பு முறையை பற்றி தெரிந்து கொள்ளமுடியாத வறுமைக்கோட்டிக்குக் கீழே அல்லது அதனுடன் ஒட்டியே நகர்ந்து கொண்டிருக்கும் எம் சமுதாய அங்கத்தவர்க்கும் இது பெரிதும் நன்மை தரும். அவர்களது குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் , அயலவர், முகளித்தவர் என பலரும் இந்த செய்தியை அறிந்து கொள்ளமுடியும். அதற்கு ஒரு படி மேலாக அனுதாப செய்திகளை பதிவதற்கும் அந்த மரண அறிவித்தல் செய்திகளின் கீழே பதிவதற்கு இடம் ஒதுக்கித்தந்தால் அது இன்றும் சாலச்சிறந்தாக இருக்கும்.
மேலும் நான் கப்பலுக்கு புறப்பட ஒரு நாள் முன்பாக ஒருவருடன் Admin உடன் தொலைபேசியில் கலந்துரையாடிய போது வல்வையில் தற்போது அடையாளம் மறக்கப்பட்டது போல தோன்றும் கல்வி/ அரச உயர்பதவி வகித்த பெருமைக்குரியவர், தொழில் முனைவர் மற்றும் பராம்பரிய நாட்டுக்கூத்து, கரகப்பாடல் கலைஞர் என எம் காலப்பகுதியில் வாழ்ந்து மறைந்த சிலரது சிறிய குறிப்புக்களை சொல்லியிருந்தேன்.
அவர்களை போன்ற இன்னும் பலரை Valvettithurai.org எமது சமுதாயத்திற்கு மீண்டும் அடையாளப்படுத்தி வைக்கும் பெருமைபடுத்தி வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.இம்மடல் வரையும் போது தென் அமேரிக்கா, வடமேற்கு ஓரமாக கப்பலில் நகர்ந்து கொண்டிருக்கிறேன். மீண்டும் நாடு திரும்பி வந்து உங்களுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தும் வரை, நேரில் சந்திக்கும் வரை விடை பெறுகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.