இன்றைய வேவில் வேவில் வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் தெற்கு வீதியில் 16 படிகள் கொண்ட ஒரு குளமும் – குளத்துக்கு வடக்காக ஒரு சிறு மடமும் – குளத்துக்கு தெற்காக ஒரு நடைபாதையும் இருந்திருக்கின்றது.
மடத்தில் தம் மனைவியுடன் குடியிருந்த திரு ஆறுமுகக் குருக்கள் ஐயாவின் கனவில் விநாயகப் பெருமான் தோன்றி ‘தனக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடுவாயாக’ எனப் பணித்தார். குருக்களும் ஊரவர்களின் உதவியுடன் – அந்த மடத்திலேயே ஒரு கோவில் அமைத்து வழிபாடு செய்து வந்துள்ளார்.
பரம்பரையாக வந்த ஆதீன கர்த்தாக்களின் முயற்சியும், ஊரவர்களின் ஒத்துழைப்பும் இணைந்து கோவில் பல மாற்றங்களைப் பெற்றது.
அலங்கார உற்சவம் இடம்பெற்று வந்த கோவிலில், 1959 இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதுடன், கொடித் தம்பம் ஸ்தாபிக்கப்பட்டு மகோற்சவமாக மாற்றம் பெற்றது. 1980 இல் மீண்டும் ஒரு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1995 இல் புதிய சித்திரத் தேர் வெள்ளோட்டாமும் நடைபெற்றது. வல்வெட்டி கிராமத்தில் வேவில் என்னும் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளாதால் ‘வேவில் வீரகத்தி விநாயகர்’ என அழைக்கப்பட்டு வந்து அருள் பாலித்து வந்தார்.
இத்தகைய பழமைமிகு வேவில் வீரகத்தி விநாயகர் ஆலயத்துக்கு நூதன பஞ்ச தள அதி சுந்தர ராஜகோபுர கும்பாபிஷேகமும், சம்புரோஷண அஷ்ட பந்தன நவகுண்டபசஷி மகா கும்பாபிஷேகமும் 10-02-19 ஞாயிற்றுக் கிழமை தை மாதமும் ரேவதி நட்சத்திரமும் கூடிய காலை 08.58 – 10.08 வரையிலான சுப வேளையில் இனிதே நிறைவெய்தியது.
09.09.17 இல் புதிய கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, சரியாக ஒரு வருடமும் 4 மாதங்களில் 61 அடி உயரமும் 5 தளங்களும் கொண்ட கோபுரமாக நெடிதுயரந்து வானளாவி நிமிர்ந்து நிற்கின்றது.
நிறைய சிற்ப வேலைப்பாடுகளுடன் புத்தம் புது வர்ணத்தில் பளிச்சென பிரகாசிக்கும் கோபுரத்தின் அழகுக்கு ஏற்றபடி முன்புறம் அமைந்துள்ள வில்லு மண்டபபும் மெருகூட்டுகின்றது. கோபுரத்தின் அடியில் மண்டப வாசலின் இருபுறமும் கைகளில் கதாயுதங்களை ஏந்தியபடி துவாரா பாலகர்கள் காவற் கடமையில் ஈடுபட்டுள்ளனர். வில்லு மண்டபமும் - துவாரா பாலகர்களும் – தூண்களும் கண்ணைப் பறிக்கும் வர்ணத்தில் ஜாலம் காட்டுகின்றன.
தமிழ்நாடு – கொள்ளிடம் – சீர்காழியைச் சேர்ந்த திரு.K. புரூஷோத்தமனும் – அவரது குழுவினரும் துரிதமான கைவேலைகள் கோபுரங்களில் சிற்பங்களாகவும் முன் மண்டப மேல் விளிப்பில் காணப்படும் விநாயகரின் பல்வேறு திருவவதாரங்களாகவும் மிளிர்கின்றன. குறைந்த காலத்தில் நிறைவான பணி செய்துமுடித்துள்ள சிற்ப ஆசாரி திரு.K. புரூஷோத்தமன் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
பரம்பரை ஆதீனகர்த்தாக்களான சிவஸ்ரீ வேதாரணிய பாலசந்திர குருக்கள் அவர்களைத் தலைவராகவும், சிவஸ்ரீ திருச்சிற்றம்பல விக்னேஸ்வரக் குருக்கள் அவர்களை பொருளாராகவும், திரு.ம.தங்கராசா அவர்களை செயலாளராகவும் மற்றும் சில செயற்குழு உறுப்பினர்களையும் கொண்ட திருப்பணிச் சபையே – புதிய இராஜகோபுரம் – மணிக்கோபுரம் – முன்மண்டபம் – ஆலய கும்பாபிஷேகத்திற்கான அனைத்து காரியங்களையும் நிறைவாகச் செய்து முடித்துள்ளார்கள்.
புதிய கோபுரம் - புத்தம் புது வர்ணங்களுடன் பொலிந்து காணப்படுவதுபோல கோவில் உட்புறமும் கண்ணைப்பறிக்கும் வர்ண வேலைப்பாடுகளுடன் ஜொலிக்கிறது.
உட்புற வீதியின் தெற்குப் பக்கச் சுவரில், கோவில் வரலாறு கூறி நிற்கும் விளக்கப்படங்களும், வீதி முழுவதுமுள்ள மட்டமான சீற்றுகளில் கீறப்பட்டுள்ள சித்திரங்களும், பரிவார மூர்த்திகளின் சந்நிதிகளின் தூபிகள் அனைத்தும் புது வர்ணம் பெற்று ஜொலிக்கிறது.
பரிவார மூர்த்தங்கள் ஒவ்வொன்றிற்கும் முன்பாக தனித்தனியான யாகசாலைகளும், கோவிலின் மைய மண்டபத்தில் கருவறை வீரகத்தி விநாயகருக்கான நவகுண்ட யாக சாலையும், வடகிழக்கு மூலையில் – வைரவர் சந்நிதி முன்பாக புதிய ராஜகோபுரத்திற்கான பஞ்ச குண்ட யாகசாலையும் அமைக்கப்பட்டு, 06-02-2019 இரவு யாக குண்டங்களில் கர்மாரம்பம் ஆரம்பமாகி 10-02-2019 காலை கும்பாபிஷேக வேளை வரை யாக குண்டங்களில் மந்திர உச்சாடனங்கள் நடந்தபடியே இருந்தது.
08-02-2019 வெள்ளிக்கிழமை காலை 7.௦௦ மணி முதல் இரவு 7.௦௦ மணி வரை எண்ணைக் காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்றது. 10-02-2019 காலை 8.58 -10.08 வரை உள்ள சுபவேளையில், கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு – கோவிலின் பரம்பரை ஆதினகர்த்தர்களில் ஒருவரான சிவஸ்ரீ வேதாரணீய பாலசந்திர குருக்களும், இன்னொரு ஆதீன கர்த்தராகிய சிவஸ்ரீ திருச்சிற்றம்பல விக்னேஸ்வரக் குருக்கள் புதிய இராஜ கோபுர கும்பாபிஷேகத்தினையும் நடாத்தி வைத்தனர். சிவஸ்ரீ தண்டபாணிக்க தேசிகரும், சிவஸ்ரீ சதா. மகாலிங்க சிவக் குருக்களும் துணை நின்று கருமங்கள் நிறைவேற்றி வைத்தனர். இவர்களை விட 50க்கும் அதிகமான குருமார்கள் பல்வேறு பணிகளையும் நிறைவு செய்யும் பணியில் முன் நின்றார்கள்.
ஆதினகர்த்தர்களான சிவஸ்ரீ பாலசந்திர குருக்களதும், சிவஸ்ரீ விக்னேஸ்வரக் குருக்களதும் ஒன்றிணைந்த செயற்பாட்டினால் மகா கும்பாபிஷேக பணிகள் பூரணத்துவம் பெற்றுள்ளன. சிவஸ்ரீ பாலசந்திர குருக்கரின் இரண்டாவது மகன் சிவத்திரு பா.பாலசஜீவ குருக்கள், தந்தையாருடன் நித்திய கோவில் பணிகளிலும் பூரண ஒத்துழைப்புடன் இருந்து வருகிறார். 23 வயதே நிரம்பப் பெற்று பா.பாலசஜீவ குருக்களது இறை பக்தியும் – கணீரென்ற குரலும் – அட்சரம் பிசகாத மந்திர உச்சாடனங்களும், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அவரது எதிர்காலம் ஒளி மயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உள்ளூரிலும் – வெளிநாடுகளிலும் உள்ள வல்வெட்டி வாழ் மக்களின் பூரணமான ஒத்துழைப்புடனும், உள்ளூரில் உள்ளவர்கலின் உடலுழைப்பும் சேர்ந்து இப்பாரிய பணி நிறைவுக்கு வந்திருக்கிறது. இத்திருப்பணியில் பங்கு கொண்ட எல்லா நல்ல உள்ளங்களுக்கும் விநாயகப் பெருமான் நல்லருள் என்றும் கிட்டுவதாக ....
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.