பொலித்தீன் பாவனைக்கு தடை விதித்த வல்வெட்டித்துறை மரக்கறி சந்தை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2019 (வியாழக்கிழமை)
இலங்கை உதவு ஊக்க மையத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் சூழலை மீட்டெடுப்பதை நோக்கி உள்ளூராட்சி மன்றங்களும் அதன் வலைப்பின்னல்களும் திட்டத்தின் ஒரு பகுதியாக வல்வெட்டித்துறை நகரசபையில் கடை உரிமையாளர்களுக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான தெளிவூட்டல் கடந்த வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோ.கருணானந்தராசா தலைமையில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நகரசபையில் நிறைவேற்றப்பட்ட லஞ்சிற் பாவனையை தடை செய்யும் தீர்மானத்தை அடிப்படையாக வைத்து கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது. கடை உரிமையாளர்களின் ஆரோக்கியமான கருத்துக்களுடன் முதற்கட்டமாக வல்வெட்டித்துறை மரக்கறி சந்தையில் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கு கடை உரிமையாளர்கள் முழு ஆதரவு தந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
தி.யோகசபாபதி (ஸ்ரீலங்கா)
Posted Date: May 17, 2019 at 13:23
எமது அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுப்போகக்கூடிய தேவையற்ற சுமையின் ஒரு சிறு பகுதியையாவது குறைக்கும் இந்த நன்முயற்சி பெரிதும் பாராட்டப்படவேண்டிய ஒன்று. அண்மையில் வாசித்த ஓர் அதிர்ச்சி தரும் செய்தி.
அமெரிக்காவின் அரச சார்பற்ற ஓர் அமைப்பின் ஆராய்ச்சியின்படி ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் வருடமொன்றுக்கு சுமார் 40 கோடி தொன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாகவும் (நிலத்தில் புதைவது தனி) பத்து இலட்சம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் இது அனைத்திற்கும் மனிதன் மட்டுமே காரணம் என்றும் விரைவில் இப்பூமி மனிதர் வாழ முடியாத இடமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடை உரிமையாளர்களின் முழு ஆதரவு பாராட்டத்தக்கது. இங்கே ஊர் மக்கள் எல்லோரிடமும் மனமாற்றம் வேண்டும். எமது ஊர் முன்மாதிரியாக வேண்டும். அண்மையில் நடந்த இந்திரவிழாவில் மட்டும் எனது குத்து மதிப்பாக 6000 இற்கு மேற்பட்ட பிளாஸ்டிக் "கப்" பாவிக்கப்பட்டன. ஒரு கோப்பிப் பந்தலில் மட்டும் 2000 இற்கு மேல் பாவிக்கப்பட்டதை அறிவேன். பழையபடி மூக்குக் குவளைகளுக்கோ அல்லது எவர்சில்வர் டம்ளர்களுக்கோ நாம் (நானுட்பட) மாறினால் மிக நன்று. ஊரில் ஒரு கல்யாண சபையில் குறைந்தது 600 லன்ச் சீற், 1000 "கப்" பாவிக்கப்படுகின்றன. மாற்றம் நிச்சயம் வேண்டும். எங்கேயோ யாரோ ஒரு புள்ளியில் தொடங்கவேண்டும். தொடங்கப்பட்டுள்ளது சந்தோசம். நாம் எல்லோரும் வீடுகளில் குறிப்பாக சிறுவர்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் முன்னுதாரணமாக வேண்டும். பாதிப்பு தற்கால சிறுவர்களுக்கே அதிகம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.