பொலிகண்டி குடியேற்றத்திட்ட பகுதிக்கு குடிநீர் குழாய் பொருத்தும் செயற்திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2019 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்
பொலிகண்டி குடியேற்றத்திட்ட பகுதிக்கு குடிநீர் குழாய் பொருத்தும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் முன்மொழியப்பட்டு, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை – 2018 இன் கீழ் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மூலம் நடைமுறைப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பொலிகண்டி குடியேற்றத்திட்ட பகுதிக்கு குடிநீர் குழாய் பொருத்தும் செயற்திட்டம் இன்றைய தினம் (01.07.2019) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான நிதி ரூபா. 25 லட்சம் கடந்த ஆண்டு மாகாண சபையால் நகர சபைக்கு விடுவிக்கப்பட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் மூலம் குடியேற்றதிட்ட பகுதியில் சுமார் 800 மீற்றர் நீளமான நீர்வழங்கல் குழாய்கள் பொருத்தப்படவுள்ளன. குழாய் நீர் இணைப்பை பெற்றுக்கொள்ள விருப்புபவர்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையுடன் தொடர்பு கொண்டு தமது வசிப்பிடங்களுக்கான தனிப்பட்ட இணைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மூலம் பிரதான வீதியிலிருந்து தமது வீடு வரை செய்யப்படவேண்டிய குழாய் இணைப்புக்காக மக்கள் செலவிட வேண்டிய பெருந்தொகைப்பணம் மீதப்படுத்தப்பட்டு மக்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் கோ.கருணானந்தராசா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் கம்பொறளிய திட்டத்தின் கீழ் குறித்த வாவினி வீதி 10ம் குறுக்கு (வாகனத்தரிப்பிட) ஒழுங்கை புனரமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதால் குடிநீர் இணைப்பு தேவைப்படுவோர் விரைவாக இணைப்புக்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன் வீதி புனரமைக்கப்பட்டதும் ஒருவருட காலத்திற்கு வீதியை வெட்டுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.