“தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பது ஆன்றோர் வாக்கு. உலகத்தில் பலர் தோன்றி, மறைந்தாலும் ஒரு சிலர் மட்டுமே சாதனையாளராக மாறி வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் அமரர் வேதா என அன்பாக அழைக்கப்படும், டி.எம்.வேதாபரணம் அவர்கள் விளையாட்டுத்துறையில் இறுதிவரை ஒளி விடும் நட்சத்திரமாக விளங்கியவர் எனலாம்.
சிறுவயதில் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்த பெரிய குடும்பம். அது மட்டுமன்றி ஹாட்லிக் கல்லூரியில் அன்றைய சூழலில் இலகுவில் அனுமதி கிடைக்காது. அதுவும் அதிபர் பூரணம் பிள்ளையின் காலத்தில் மாணவர்களை வடிகட்டித்தான்; எடுப்பார். வேதாவின் திறமை காரணமாகவும் காலஞ்சென்ற ஜோசேப் மாஸ்ரறின் சிபார்சின் காரணமாகவும் 6ம் வகுப்பில் அவருக்கு அனுமதி கிடைத்தது. சில நாட்கள் பஸ்ஸிற்கு பணமில்லாத காரணத்தினாலும், பெற்றோருக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக கரவெட்டியில் இருந்து நடந்து போய் வந்ததாக சகோதரன் மூலம் அறிந்தேன்.
தமையனார் அமரர் வேதாரணியம் ஆசிரியரின் சிறந்த வழிகாட்டலினால் வேதா உட்பட சகோதரர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சிறப்புப் பெற்றிருந்தனர். வேதாவிற்கு கல்வியை விட காற்பந்தாட்டம், துடுப்பந்தாட்டம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்ட படியால், அந்த விளையாட்டுக்களின் இயல்புகளை அப்போது விளையாட்டுப் போதனாசிரியராக இருந்த தேவா அவர்களிடம் கற்றுக் கொண்டதுடன் அவரது அபிமானத்தையும் பெற்றுக் கொண்டார்.
அமரர் இரத்தினசிங்கம் ஆசிரியர் இடமும் பயிற்சி பெற்று காற்பந்தின் நுட்பங்களை அறிந்து கொண்டார். அது மட்டுமன்றி அவர் வாழ்ந்த சூழலில் மிகவும் திறமை வாய்ந்த கழகங்களான மனோகரா, பொம்பேர்ஸ், டைமண் ஆகிய கழகங்கள் இருந்த படியால் அவரின் விளையாட்டுப் பசிக்கு அவையும் தீனி போட்டன. சிறப்பாக காற்பந்தாட்டத்தையும், துடுப்பந்தாட்டத்தையும் தனது கண்களாகப் பாவிக்கும் அளவிற்கு நேசித்தார்.
அதற்குச் சான்றாக கல்லூரியின் முதலாவது பிரிவின் கப்ரினாகவும், நியமிக்கப்பட்டதுடன், முதலாம் பிரிவில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே 2வது பிரிவு காற்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக அதிபராலும், விளையாட்டுப் போதனையாளராலும் நியமிக்கப்பட்டார். அதுமட்டு மன்றி துடுப்பந்தாட்டத்திலும் சிறந்த பந்து வீச்சாளராகவும், ஆட்டக்காறரானாகவும் விளங்கியதுடன் 2முறைகள் நடராஜசுந்தரத்துடன் சேர்ந்து 100 சதங்களையும அடித்து சாதனை படைத்தார்.
கல்லூரியில் விளையாட்டில் சிறப்புக் காட்டியவர்களுக்கான கலர்ஸ் எனப்படும நிற விருதினையும் பெற்றார். இதே காலத்தில் உத்தியோகப் பற்றற்ற முறையில் காற்பந்தாட்டத்திற்கும், துடுப்பந்தாட்டத்திற்கும் மத்தியஸ்தராகக் கடமையாற்றி அநுபவம் பெற்றார்.
வதிரி பொம்பேர்ஸ் கழகத்தின் முன்னணி வீரராக விளங்கியதுடன், கழகத்தின் வெற்றிகளுக்கு இவரின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. சாதுரியமாக விளையாடும் திறமை மிக்கவர். அத்துடன் கடமைக்கு விளையாடாமல் உணர்வு பூர்வமாக விளையாடும் மனப்பான்மை கொண்டதுடன் வீரர்களையும் உற்சாகப் படுத்தி விளையாட வைக்கும் ஆற்றல் கொண்டவர். அவர் விளையாடிய காலத்தில், அவருக்கு எதிராக விளையாடினேன் என்ற பெருமை எனக்குண்டு. இவரின் காற்பந்தாட்டச் சிறப்புக் காரணமாக சீனாவில் இருந்து வந்த காற்பந்தாட்ட அணியுடன் மோதிய வடமாராட்சித் தெரிவுக் காற்பந்தாட்ட அணியில் வேதாவும் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியை விட்டு நீங்கிய பின்னரும் அங்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். இவரின் சிறப்புக் கருதி ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதனை விட ஒரு மாணவனுக்கு சிறந்த அங்கீகாரம் எதுவும் கிடையாது.
கல்லூரியில் பெற்ற அநுபவங்கள், தலைமைத்துவப் பயிற்சி, வுpளையாட்டில் இருந்த ஆர்வம் போன்றன அவரைப் பல பணிகளைச் செய்ய ஊக்குவித்தன எனலாம். பருத்தித்துறை காற்பந்தாட்டக் கழகத்தை முன்னின்று அமைத்ததுடன் அதன் செயற்குழுவிலும் அங்கம் வகித்தார். பின்னர் 1993ல் வடமராட்சி காற்பந்தாட்ட கழகமாக மாற்றம் பெற்ற போது அதன் தலைவராக ஏறக்குறைய 25 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் காலத்தில் தான் இலங்கை வரலாற்றில் தமிழர் பிரதேசத்தில் இருந்து சென்ற அணியொன்று (வடமாராட்சி) அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற காற்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது இதுவே முதற் தடவையாகும். இவரின் திறமை காரணமாக வடமாகாண காற்பந்தாட்டப் பேரவையிலும் கடந்த 4 வருடங்களாக பொதுச்செயலாளராத் தெரிவுசெய்யப்பட்டு கடமையாற்றி வருகின்றார். வேதாவின் 25 வருட சேவையை பாராட்டும் வண்ணம், இலங்கை காற்பந்தாட்டச் சம்மேளனம் வங்காள தேசத்திற்கான விளையாட்டு சம்பந்தமான பயணம் ஒன்றை வழங்கி கௌரவித்தது. விளையாட்டு வீரராக மட்டுமில்லாமல், சிறந்த பயிற்சியாளராகவும், காற்பந்தாட்டம், துடுப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் தேர்ச்சிபெற்ற மத்தியஸ்தராகவும் விளங்கி விளையாட்டையே சுவாசித்த ஒரு வீரனின் அகால மரணத்தை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
வேதா ஒரு சபையில் நின்றால் அது கலகலப்பாகவும், பொலிவாகவும் இருக்கும். அவரின் புன்னகை மற்றவர்களை வசீகரிக்கும். வேதா. தமையனார் வேதாரணியம், தம்பிமார்கள் கற்பநாயகம், வித்தியாதரன் ஆகியோர் எங்கள் குடும்பத்துடன் மிகநெருக்கமாகப் பழகியவர்கள், பழகிறவர்கள். ஒருவரை உயிருடன் இருக்கும் போது பாராட்ட வேண்டும் என்ற கொள்கை உடையவன் நான். வருகின்ற சிவகாமி பவுண்டேசன் விருது விழாவில் விளையாட்டுச் சாதனையாளராக பாராட்டுவதற்காக D.K. வேதாபரணம் தெரிவு செய்யப் பட்டிருந்தார். ஆனால் இப்படி ஏமாற்றி விட்டுச் செல்வார் என நான் நினைக்கவில்லை. நான் ஊரில் நின்ற போது வதிரி பொம்பேர்ஸ் கலாநிலைய வீதியூடாக ஓட்டோவில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எதிராக வேதா அண்ணர் நடந்து வந்து கொண்டிருந்தார். நான் ஓட்டோவில் இருந்து இறங்கி அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டேன். அது தான் எனது கடைசிச் சந்திப்பு என நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனாலும் என் மனம் நிறைந்துள்ளது. அன்னாரின் பிரிவினால் வாடுகின்ற அனைத்து அன்பு உறவுகளுக்கும் எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.