9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகரின் உதவியாளர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அர்ச்சகரின் உதவியாளர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பிணை விண்ணப்பம் செய்தபோதும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்த நிலையில் சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரித்து விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்தது.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாடசாலையில் சிறுமி அலைபேசி வைத்திருப்பதை ஆசிரியர் கண்டறிந்தார். இதுதொடர்பில் சிறுமியிடம் விசாரித்த போது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் அர்ச்சகர் உதவியாளர் வாங்கி கொடுத்ததாகவும் அவர் அலைபேசி மூலம் பிரசாதம் தர கூப்பிடுவதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவித்தார். அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அர்ச்சகரின் உதவியாளர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது சித்தப்பா ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் சிறுமி தெரிவித்திருந்தார்.
அத்துடன், அர்ச்சகரின் உதவியாளரால் வழங்கப்பட்ட பணம் ஒருதொகையையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சிறுமியின் அலைபேசி சிம் அட்டை அர்ச்சகர் உதவியாளரின் பெயரிலேயே இருந்துள்ளது.
இந்த நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 72 வயது அர்ச்சகர் உதவியாளரும், சிறுமி சித்தப்பாவான 50 வயதுடைய குடும்பத்தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த 30ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்று, சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (டிசெ.12) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன்சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷும் முன்னிலையானார்கள்.
சந்தேகநபர்கள் இருவர் சார்பிலும் பிணை விண்ணப்பம் செய்து மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா சமர்ப்பணம் செய்தார்.
“முதலாவது சந்தேகநபரான அர்ச்சகர் உதவியாளர் 72 வயது நிரம்பியவர். அவர் வன்புணர்வுக்குட்படுத்தியதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் சிறுமி தெரிவிக்கவில்லை. சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மன்றுரைத்தார்.
“சிறுமி ஆலய அர்ச்சகர் உதவியாளரால் 2 வருடங்களாக தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் வழிபடும் ஆலயத்துக்குள் இவ்வாறான சமூகப்பிரள்வு இடம்பெற்றுள்ளமை பாரதூரமான விடயம். இதனை சமூகத்தில் அனுமதிக்கவே முடியாது.
சிறுமி பராயமடையாதவர். அவருக்கு அர்ச்சகர் உதவியாளரால் தனக்கு இழைக்கப்பட்ட பாதிப்பை விவரிக்க முடியாது. அதனால்தான் சட்ட மருத்துவ அறிக்கையைக் கோருகின்றோம்.
பராயமடையாத சிறுவர்களின் காப்பகமாக நீதிமன்றமே உள்ளது. எனவே முதலாவது சந்தேகநபரான அர்ச்சகர் உதவியாளரும், அவருக்கு உடந்தையாகவிருந்த சிறுமியின் சித்தப்பாவையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று சட்டத்தரணி சுகாஷ் மன்றுரைத்தார்.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்து அவர்களது விளக்கமறியலை வரும் 20ஆம் திகதிவரை நீடித்தார்.
அத்துடன், சிறுமியின் சட்ட மருத்துவ அறிக்கையையும் அவரது வாக்குமூலத்தையும் வரும் 20ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.(onlinejaffna,ibctamil)
மேற்கண்டவாறு செய்தி இணையதளங்களில் இன்று நண்பகல் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.