வல்வெட்டித்துறையில் வாழ்ந்து இயற்கையின் நியதிக்கு அமைய வல்வெட்டித்துறையை தாயூராகக் கொண்ட நாம் பல நாடுகளில் வாழ்கிறோம். எம் தாயூரின் வீரியம் பற்பல வடிவங்களாக உலக சமுதாயத்துக்கு பதியப்பட்டு கொண்டு இருக்கிறது. இதற்கமைய இங்கிலாந்தில் வாழும் வல்வையர்கள் தங்களுக்கான நலன்புரிச் சங்கத்தை அமைத்து பரம்பரையினரின் முன்னேடிச் சிந்தனையாக தாயூரில் வல்வை ஒன்றியத்தை பத்து வருடங்களுக்கு முன்னரே ஸ்தாபித்து இருந்தார்கள்.
ஜக்கிய இராச்சியத்தில் வருடா வருடம் ஒன்றுகூடல்கள் கோடைவிழாக்களை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இக்கோடை விழா எதிர் காலத்தில் லண்டன் வல்வையரால் இந்திர விழா என்று பெயர் சூட்டப்படவேண்டும் என்ற ஒரு மிகச்சிறப்பான அவிப்பிராயத்தை கனடாவில் தீவிர வல்வை உணர்வாளராக செயல்படும் கலைஅரங்கு விஸ்ணு செல்லம் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
எம் கல்விக்கோயில்களின் மறுபக்கத்தை சிந்திப்புச்செய்யும் இவ்வரலாற்று ஆவணத்தில் தலைவன் விரும்பிய இளைய சமுதாயத்தினருக்கு இவ்விடயத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.
இலண்டன் வல்வையரின் அடுத்த கட்ட சிறந்த பணியாக கணனிப்பத்திரிகையை ஆரம்பித்து தேசிய செய்திகளுடன் வல்வையர்களின் ஆவணங்களையும் பதிவு செய்துகொண்டு இருக்கிறார்கள். இதில் இந்த சிதம்பராவும் நானும் என்ற பகுதி வல்வையரின் வாழ்வியல் ஆவணங்களை பதிவு செய்து தேசியத்தின் ஆவணக்காப்பகத்துக்கு வலுவான சான்றுகளை சென்றடையச் செய்யும்.
எம் கல்விவாழ்வு சிதம்பராவில் ஆரம்பமாவதற்கு முதல் நாம் குட்டிப்பாடசாலைகளில் மூன்று வருடங்கள் படித்தாக வேண்டும். நாங்கள் கொண்டைக்கட்டை ஒழுங்கையில் வாழ்ந்தபடியால் அதன் பக்கத்தில் அமைந்த அரியகுட்டிப்பாடசாலையில் படிக்கும் பாக்கியம் பெற்றேன்.
அரியோட்டிப் பாடசாலைக்கு உத்தியோக பூர்வமாக யா- அமெரிக்கன் மிசன் பாடசாலை என்றுதான் பெயர். இந்த கல்விக்கோயிலை விட்டு வந்து 51 வருடங்கள் கடந்து விட்டாலும் அரியோட்டியில்தான் ஆரம்பக்கல்வி படித்தோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
எம் ஏட்டு படிப்பு கோயில் ஜயர்களின் கைபிடிப்பில் அரிசியில் அ எழுதுவதுடன் ஆரம்பிக்கின்றது. ஜயர் தந்த பனை ஓலை ஏட்டுடன் அரியகுட்டிக்கு போன ஞாபகம். அங்கு இரண்டு பகுதியாக இருந்த கட்டித்தின் நடுப்பகுதியல் இரண்டு திண்ணைகள் இருந்தன. அதில்தான் பனை ஓலையை வைத்து கப்பல் ஓடி விளையாடினோம்.
சிதம்பரா வாழ்க்கையும் முடிந்து 1977ல் தான் திரு. தாமோதரம்பிள்ளை மணிவாசகர் அவர்கள் மூலம் முதலில் நாகெட் என்ற கப்பலுக்கு சென்றேன். இக்கப்பல் அவுஸ்திரேலியாவில் சுமார் 7000 ஆடுகளை எற்றிக்கொண்டு சவுதிஅரேபியாவில் சென்று இறக்குவேம்.
நம் அன்னபூரணிக்காலத்தில் வாழ்ந்தவர்கள் போல் எமது இயந்திரகப்பலின் வாழ்கையும் சுவையும் சுவாரசியமானதும். நாளை ஒரு நாள் இவ் இணையம் மூலம் கடலோடிகளின் சிந்திப்புகள் பகிர்ந்து கொள்ளும் போது குச்சம் குட்டித்துரையாக குதுகலிப்பேன்.
கப்பல் வாழ்கையை மூன்றாவது சமையல்காரனாக ஆரம்பித்து எழுவருடங்களின் பின் நீராவிஇயந்திரக் கட்டுப்பாட்டாளராக வேலை செய்து ஆயிரம் ஆயிரமாக நினைவலைகளைச் சுமந்து இல்லற வாழ்வில் பிரவேசம் செய்தேன். கப்பல் வாழ்க்கையில் ஜந்துகண்டங்களையும் சென்றடைந்த மனநிறைவுண்டு. ஆனால் பனாமாக்கால்வாயை கடக்காத படியால் கப்பலால் உலகை சுற்றியபெருமை கிடைக்கவில்லை.
எம்வல்வையர்கள் பலர் பனாமாக்கால்வாயை கடந்தன் மூலம் உலகை கடலால் கடந்த பெருமைகயுடன் வாழ்கிறார்கள். என்னுடன் 10ம் வகுப்புவரை பள்ளித்தோழர்களாக வாழ்ந்த சிவகுரு பாஸ்கரன்- நராயணசாமி கலைநேசன் போன்றோர் வல்வைமண்ணில் தற்போது புதிய மாலுமிகளை ஆரம்பத்திலேயே கடேர் ஓபிசர்களாகவே அனுப்புவதற்கு பயிற்சி வகுப்புகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். புலம்பெயர்ந்த வல்வையர்கள் இவர்களுக்கு எப்போதும் ஊறுதுணையாக இருப்பார்கள் என்பதை உறுதி கூறிக்கொள்கிறோம்.
இன்னும் வல்வையின் வாசமுடைய என் பள்ளித்தோழர்கள் பலர் இத்தொடரில் சிந்திப்புச் செய்யப்படுவார்கள். நாம் ஏட்டுன் ஆரம்பக்கல்வி தொடங்கிய போது பலர் போச்சியால்தான் பால் தேனீர் குடித்துக்கொண்டு இருந்தோம்.
வல்வை புளுஸ் பொன்விழா மலரில் பாராட்டுக்குரிய வீரனாக பதிவு செய்யப்பட்டவர் அப்பாடசாலையை விட்டு விலகுமட்டும் போச்சிதான் பாவித்தார். நாம் அரியகுட்டியில் படித்து விலகுமட்டும் திரு.இராஜதுரை அவர்கள் பெரியவாத்தியாராக இருந்தார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிங்கப்பூர் வாத்தியார் என்று அழைக்கு அப்புசுந்தரம் இங்கிலிசு வாத்தியாரும் திரு.வேதநாகயம் வாத்தியாரும் படிப்பித்தார்கள். சிங்கப்புர் மாஸ்டரின் மகன் ஒருவர் பிரான்சில் வசிக்கின்றார். இவரை திருமதி முருகதாஸ் தவமணி அவர்களின் ஈமக்கிரிகைக்காக 01.02.2012ல் சென்ற போது சந்தித்திருந்தேன். வேதநாயகம் வாத்தியரின் மகன் விமலநாதன் என் சிதம்பாராவின் பள்ளித்தோழன்.
புலம்பெயராமல் வல்வை மண்ணில் வர்ததகராக வாழ்ந்து வருகின்றார். இவர் வல்வை முத்துமாரியில் அக்கறையான பக்தி கொண்டவர். அம்மனுக்கு செய்யும் சில சமஸ்கிருதமந்திரங்களும் மனப்பாடம் கொண்டவர். திருவிழாக்காலங்களில் சில வருடங்கள் காளஞ்சி அறையின் பொறுப்பாளராக இருந்து கோடியக்கரையில் இருந்து எம் மன்னுக்கு வந்து மாரித்தாய்க்கு சேவைகள் செய்தவர். இவரைப் போல் என் சிதம்பராவின் பள்ளித் தோழன் பாலசுப்பிரமணியம் உதயகுமாரும் 2007ல் திருவிழாவுக்கு ஊர் போனபோது வல்வை முத்துமாரி தேவஸ்தானத்தின் மணியமாக வல்வை வரலாற்றில் அலங்காரம் செய்து இருந்தார்.
வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் பதிவேட்டில் பல காலம் மணியமாக வ.இ.ராமசாமி அப்பா செய்த சேவையை நண்பன் பகிர்ந்து கொண்டது ஊர் வாசம் நுகரப்போன எனக்கு பெரும்மனநிறைவை தந்து. அதே வருடம் 2007ல் சிதம்பரக்கல்லூரிக்கு போன போது திரு ஜயங்கார் திரு அருள்சுந்தரம் திரு நடராஜா திரு செல்வநாயகம் திரு சண்முகராஜா திரு யோகச்சந்திரன் எனது அண்ணா அலங்கரித்த அதிபர் மேசையில் என் பள்ளித்தோழன் திரு.அரியரெத்தினம் தலைமை ஆசிரியராக இருந்தார்.
அப்போது எடுத்த புகைப்படத்தையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்தப்படம. என் வாழ்வில் நான் நேசித்த புகைப்படங்களில் ஒன்று. அந்த இடத்தில் நின்றுதான் பல தடைவ நேரம் பிந்திப்போனமைக்காக அடி வாங்கியிருக்கிறேன். என்னைப் போல் சிலரும் வழமையாக அடி வாங்குவதுதான்.ஆனால் எப்போதும் நாங்கள் அடி வாங்குவதில்லை எங்கள் வறுமைதான் அடிவாங்கியது. அந்த வீரம் விளைவித்த கல்லூரி மண்ணில் நிகழ்ந் காதல்கள் களியாட்டங்கள் வீரதீரங்கள் கன்னிவெடிகளுக்கான பரீட்ச்சிப்புகள் இன்னும் சொல்லுவேன்.
இன்னும் ஒரு பள்ளித்தோழன் அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச்சங்கம் வெளியீடு செய்தது திரு.சக்திவடிவேல் மாஸ்டர் முயற்சியில் வெளிவந்த மலரில் பெருமைப் படுத்தப்பட்ட துரைசாமி சக்திவேல் இது வரை 40 தடவைகள் இரத்ததானம் செய்து யாழ் சுகாதார சேவையால் கொடையாளி என்று கௌரவப் பட்டம் வாங்கியிருந்தான். 2007ல் ஊர்த்திருவிழாவுக்கு போன போது சுமார் 4நாளில் 12மணிநேரம் வீடீயோ பதிவு செய்து இருந்தேன். அங்கு ஊர் நண்பர்கள் உறவினர்களுன் உரையாடச் சந்தர்பமே இல்லாமல்போச்சு. ஊரையும் திருவிழாவையும் கண்டகாட்சியை இவ் இணையம் மூலம் பார்க்கப் போகிறீர்கள்.
சிதம்பராவும் நானும் என்று எம் சிந்தனை பதிவுகள் எவ்வளவு நிளமாக பதிவு செய்யப்படபடுமோ தெரியவில்லை. ஊரை விட்டு ஓடிப்போகாமல் வாழ்ந்து தாயூரைப் பெருமைப் படுத்திய என் பள்ளிநண்பர்களை ஆரம்பத்தில் பதிவு செய்தது மனநிறைவைத் தருகிறது.
நாங்கள் அரியகுட்டியில் முதலாம்தரமோ இரண்டாம் தரமோ தெரியவில்லை ஒரு குண்டு ரீச்சர் படிப்பித்தவ கொஞ்சநேரம் படிப்பிப்பா நாங்கள் பிரளிசெய்தால் வாங்கில் இருந்த படியே படுக்கவிடுவா. பல சமயங்களில் நீண்ட நேரம் தூங்கி எழுந்திருக்குpறோம். அந்த குண்டு ரீச்சர் தனது பிடவைத் தொங்கலை ஒரு முக்கோண வடிவமாக பின்புறம் செருகி விட்டிருப்பா. சுமார் 45 வருட புகைப்பட கலைவாழ்வில் அப்படி ஒரு அழகான மனப்பதிவை யாருமே பதிவு செய்யவில்லை.
என்னைப் போல் நிறமும் கட்டையான ஞானப்பிரகாசம் வாத்தியார் தமிழ் படிப்பித்தவர் மேசை லாச்சியில் தோடம்பழபுட்டாசி வைத்திருந்து இடைக்கிடை வாயில் போட்டுத்தான் படிப்பித்துக்கொண்டுடிருப்பார். அவர்கள் இனிமையாக படிப்பித்த ஆரம்பத்த தமிழ்தான் இன்று வல்வையராகிய உங்களுடன் கவிதையாக கட்டுரையாக தேசியத்துக்கு எழுதி அனுப்பி தேசியகீதப்பாடலாக என் கல்வி மலர்ந்து கொண்டு இருக்கிறது.
தேசியம் 18 வரியில் தேசியத்திற்கான கீதம் கேட்டிருந்தார்கள். உடுக்கு மெட்டிசையில் பாடல் எழுதி உரிய விளக்கமும் தாயக முகவரியும் இணைத்திருந்தேன். அதன் பின்னர்தான் தேசியம் புதிதாக நாலு தேசிய சின்னங்களை அறிமுகம் செய்திருந்தார்கள். புதிய தேசிய சின்னங்களுக்கு அமைய தேசியகீதத்தை புதிதாக வடிவமைத்து வல்வை மண்ணில் ஒருவனாக பதிவுசெய்திருந்தேன்.
வல்வை மக்களாகிய நாம் ஆரம்பத்தில் ஒன்ரரை மைல் நீளமும் அரை மைல் அகலமும் கொண்ட கடலோர பட்டினசபைக் கிராமம். கடலோரம் வாழ்ந்தபடியால் எமக்கு குடிநீர் ஒரு பிரச்சனை.
அரியோட்டியில் படிப்பவர்களுக்கு காட்டு வளவிலிருந்து வரும் ஒரு கிழவியாச்சி பால் காச்சிதாரது. ஆச்சி தந்தபாலை இன்று எத்தனை பேர் ஞாகத்தில் வைத்திருப்பீர்களோ. அரியோட்டிக்கு தெற்கு எல்லையில் வாழ்ந்தவர்கள்தான். வணங்காமண் கப்பலில் சென்று வந்த உதயணன் மற்றும் உதைபந்தாட்ட வீரன் அன்பழகன். மேற்குஎல்லையில் நந்தபாலன் இருந்தார். இவர் படிக்கும் காலங்களில் பகிடிகள்விட்டுக் கதைக்கக் கூடியவர். என்னுடன் இரண்டாவது கப்பலிலும் வேலை பார்த்தவர்.
குருசேரோடுசல் என்ற கப்பல் மணியண்ணாக்கள் குத்தகைக்கு ஓடியது. மலேசியாவில் செம்மண் பொக்சையிட் ஏற்றிக்கொண்டு சிங்கப்பூரில் பதிவுகள் முடித்துக்கொண்டு ஜப்பானின் பல பகுதிகளுக்கு சென்றேன்.
என் ஆரம்பக்கல்விக்கோயில் இன்று அழகாக திருத்தப்பட்டு வடிவாக இருப்பதாக அறிகிறேன். 2007ல் ஊர் போனபோது அரியகுட்டியில் வைத்து வல்வைபுளுஸ் இளைஞர்கள் திரு.முத்துக்குமார் தங்கவேல் தலைமையில் வெளி நாட்டிலிருந்து திருவிழாவுக்கு போனவர்களை சந்தித்து கூட்டம் கூடி மகிழ்ந்தோம்.
கல்லூரி என்ற சினிமாவில் அதன் இயக்குனர் தங்கபந்நன் கடைசிக்கட்டத்தில் தான் படித்த வாங்கிலிருந்து இளமைக்காலத்தை மீட்ட காட்சி அற்புதமாக்கியிருந்தார். இது போல் எங்கள் எல்லாருக்கும் இனிமையான மறுபக்கம் நிறைய உண்டு. இவ் இணையமூடாக பகிர்ந்து கொள்வோம்.
நாம் குட்டிப்பாடசாலைகளை 3ம் வகுப்பில் நிறைவு செய்துதான் இங்கிலீஸ் பள்ளிக்கூடம் 4ம் வகுப்புக்கு போவோம். முதல் நாள் போனபோது பிரமாண்டமான கட்டிடம் நிறைய பெரியண்ணாக்கள் அழகான இரட்டைப்பின்னல் அக்காக்கள் எங்களைப் போல் குட்டித்தங்கைகள் எல்லாமே பிரமிப்பாக இருந்தது.
சினிமா இயக்குனர் இமையம் பாரதிராஜா எல்லா நடிகைகளையும், இரட்டைப் பின்னலில் அழகுபடுத்திப்பார்த்தவர். நாம் தாயகத்தில் இரட்டைப்பின்னல் அழகை போதுமானளவு ரசித்தவர்கள்.
இரண்டாம் நாள் சிதம்பரா போன போது குட்டிமாமா என்று அன்பான உரமான குரல் அன்று அழைத்தது முதல் வல்வையருக்கும் குட்டிமாமாவான விதை அன்றுதான் விதைக்கப்பட்டது.
என்னை குட்டிமாமா என்று கூப்பிட்டது யார் ஏன் அடுத்த சிந்திப்பில். குட்டிமாமாவின் சிதம்பரா என்ற வல்வைச் சிதம்பரத்தின் மகிமைகள் இனிமைகள் இனியவர்களுடன் சிந்திப்புகளுடன் சுவைபடத்தருகிறேன்.
சிதம்பராவுக்கு போக அரியகுட்டி கிட்டங்கி பீச்சிவாத்தியார் கடையடியில் நின்று பஸ் ஏறினால் பஸ் ரிக்கற் 3சதம்தான் 5சதம் கொடுத்தால் 2சதம் மிச்சம் தருவார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.