எமது இணையதளத்தின் முதலாவது ஆண்டு நிறவையொட்டி, திரு.குலநாயகம் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்துச்செய்தி தவறுதலாக இடம்பெறவில்லை. தற்பொழுது பிரசுரிக்கின்றோம்.
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் - சூ.சே.குலநகயகம் சமாதான நீதவான்
இன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையில் குறிப்பாக இணையத் தளங்கள் பெருகி வருகின்ற போதிலும் அவை உண்மையான நோக்கங்களை நோக்கியதா என்பது சந்தேகமே? உண்மையான நடுநிலையான பாரபட்சமற்ற செய்திகளை வெளியிடும் அதேவேளை சமூகத்திற்கு ஏற்புடையதல்லாதவற்றை பிரசித்தப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பாகும்.
விமர்சனங்கள் ஆக்கபூர்வமானவையாகவும் வெளியிடும் கருத்துக்கள் சமூகத்திற்கு பயனுடையதாகவும் இருக்கவேண்டுமேயன்றி அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் சொல்லப்படவேண்டிய உண்மைகளை வேண்டுமென்றே சொல்லாமல் விடுவது பாரிய பொய்யுமாகும்.
இந்த வகையில் valvettiturai .org இணையத்தளம் கடந்த ஒரு ஆண்டாகச் சிறப்பாகச் செயற்பட்டு வருவதை நான் பார்க்கிறேன். குறிப்பாக வல்வெட்டித்துறைச் செய்திகளை வெளியிடும் முறை மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. இவ் இணையத்தளம் செய்திகளோடு புகைப்படங்களையும் மிகச் சிறப்பாகவே உடனுக்குடன் வெளியிட்டு வந்திருக்கிறது.
வெளிநாடுகளில் வாழுகின்ற வல்வெட்டித்துறை மக்களும் செய்திகளை விரும்பி வாசிக்கும் ஏனையவர்களும் இங்குள்ள உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றவகையில் எமது ஊரின் களநிலையை நன்கு அறிந்து வெளியிடப்படவேண்டியது மிக முக்கியமானது.
இது எமது ஊர் தொடர்பாக மட்டுமன்றி இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களின் செய்திகளும் உண்மையான களநிலை விடயங்களை வெளிக்கொண்டு வரக்கூடியதாக இருக்கவேண்டும். இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள வளரும் தமிழ்ச்சமூகம் தம் இருப்புக்களை பூரணமாகத் தெரிந்து கொள்ள முடியம்.
தரமான ஊடகங்கள் இவ் உலகில் பல புரட்சிகள் செய்திருப்பதைப் பார்த்திருக்கின்றோம். நான் தொழில் நுட்பக் கல்லூரியில் கற்ற நான்கு ஆண்டுகளும் 'லேக் கவுஸ்' நிறுவனத்தின் வல்வெட்டித்துறை குறூப் நிருபராகச் செயற்பட்டபோது அன்றைய தினகரன் பிரதம ஆசிரியர் அமரர் ஆர். சிவகுருநாதன் கூறி வைத்தவைகளை நான் மறக்கவில்லை.
தரம் கெட்ட பரப்புரைகளால் (அல்லது செய்திகளால்) எமது சமூகம் பிழையான வழியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. ஆகையால் ஊடகத்துறையினர். பொறுப்போடு செயற்படவேண்டுமென நான் நினைக்கிறேன். valvettiturai .org அத்தகைய பொறுப்போடு செவ்வனவே சேவையாற்றி வருகிறார்கள் என்பது மிக மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அரசியல் பரப்புரை என்பதைத் தவிர்த்தாலும் தமிழ் இனத்தின் விடிவை நோக்கியதான விடயங்களும் வெளிக்கொண்டு வரப்படவேண்டும் எனவும் நான் கருதுகிறேன். இந்த வகையில் வல்வெட்டித்துறை கடந்தகாலங்களில் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வந்திருப்பதை நாம் கண்டுள்ளோம்.
எந்தச் செயல்பாடுகளிலும் இளம் சந்ததியினரது பங்களிப்பு முக்கியமானது. அவர்களது ஈடுபாடுகள் ஏதுமின்றி எந்தக் காரியமும் முழுமை பெறாது என்பது அனுவபரீதியான உண்மை. எனவே அவர்கள் மத்தியில் ஆர்வத்தையம் நெஞ்சுரத்தையம் ஊட்டி வளர்க்கும் செயற்பாட்டை ஊடகங்களால் செய்யமுடியும்.
வல்வெட்டித்துறையில் சிறு வயது முதல் இற்றை வரைக்கும் பலதரப்பட்ட பொது விடயங்களிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஊடாக அரசியலிலும் பங்கு கொண்டு வரும் நான் என்போன்ற திரு.அதிரூபசிங்கம் மாஸ்ரரையும் ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன். அவரது ஆசியுடன் நடாத்தப்பட்டுவரும் valvettiturai .org தொடர்ந்தும் சிறப்பாகச் செயல்படும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.
கடந்த ஒரு ஆண்டு காலமாக சிறப்பாகச் செயல்பட்டமைக்காக எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடும் மேலும் சிறப்புக்கள் பல பெற ஆசி கூறி நிற்கின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.