இன்று கார்த்திகை விளக்கீடு (சொக்கப்பனை) தினமாகும். இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவு கூரும் வகையில் இன்று மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் கார்த்திகை விளக்கீடானது விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளான கார்த்திகை 27 ஆம் திகதியில் அமைந்து சல சலப்பினை குறிப்பாக யாழ் தீபகற்பத்தில் ஏற்படுத்திருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.
திருக்கார்த்திகை விளக்கீடு - சிறு விபரணம்
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நன்நாளில், இந்துக்கள் தமது இல்லங்களிலும் கோயில்களில் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைக்கப்பட்ட "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு, சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் மிதக்கவைத்து வழிபடுவர்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் மகாதீபம் ஏற்றப்படுவது சிறப்புடன் நோக்கத்தக்கது.
திருக்கார்த்திகை விளக்கீடை முன்னிட்டு, விளக்கீட்டினை சிறப்பித்து விளக்கும் வகையில் எம்மால் நேற்று வெளியிடப்பட்ட கவிதை பின்வருமாறு.
கார்த்திகைத் திருநாளாம்"விளக்கீடு"
கார்த்திகை மாதக் கார்த்திகை அமைந்த பெளர்ணமியாம்
நற்றினம் இதனில் ஒளி வீசிடுமே கார்த்திகை திருநாளாம் விளக்கீடு
பக்தி மிகக் கொண்டு பணிந்து நின்றனர் இரங்கினான் இறைவன்
இவர்களுக்காய் யாவருக்கும் அருள் மழை பொழிந்தான்
யாவரும் மகிழ்ந்தனர் இறைவன் கருணை கண்டு களிப்பு மிகக்கொண்டனர்
இவர்தம் வேதனையாம் இருள் அகல மகிழ்ச்சி ஒலி போற்றியதே
பார்க்கும் இடம் எல்லாம் பேரொளியாய் பரவியது
இத்தினமே திருக்கார்த்திகைத் திருநாளாம் விளக்கீடு
புராணங்கள் பேசிடுமே விளக்கீட்டின் பலன் யாவும்
பணிந்திடுவோம் - நாமும் எலாம் விளக்கீட்டின் பலன் பெற்றிட
ஏற்றிடுவோம் தீபங்கள் இருள் மங்கிட ஒளி பொங்கிட
"இறையருள் தேக்கிடுவோம் அக இருள் போக்கிடுவோம்"
மகாவெலியை மனதிற் கொண்டு நாமும் இறையருள் பெற்றிட
வீடுகளில் தீபமேற்றி -வீட்டு வாசலிலே பெருந்தீபம் அமைத்து
அதனை சுற்றி வலம் வந்து பெரியோரும் சிறியோருமாய் பக்தி சிரத்தையுடன்
"மகாவெலி கண்பார் - எங்கும் கண்பார் - எங்களையும் கண்பார்"
எனபக்தியுடன் கைதட்டி பாடிமகிழ்ந்திடுவோம்.
சொர்கப்பனைப் பேரொளி
ஆலயங்களிலே வீதி வலத்திற்காக இறைவன் எழுந்தருளி வருகையில் ஆலய முகப்பிலே பெருவடிவிலே செயற்கை விருட்சம் ஒன்று அமைத்து சொர்கப்பனையான இவ்வமைப்பை பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் சூழ நின்று எரியூட்டிப் பேரொளி வீசச்செய்தல் விளக்கீட்டின் ஆலய நிகழ்வுகளின் உற்சமானது இப்பெரோளியாம் சோதிவடிவிலே யாவரும் இறைவனைக்கண்டு - வணங்கிடுவோம் பணிந்திடுவோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.