சர்சைக்குரிய வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா வழக்கு நாளை மறுதினம் பருத்தித்துறை நீதிமன்றில் எடுக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அண்மையில் வல்வை நகரசபையால் அங்குராற்பணம் செய்யப்பட்டிருந்த ‘’தீருவில் பொதுப் பூங்கா’’ சம்பந்தப்பட்ட வழக்கு நாளை மறுதினம் 20 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் எடுக்கப்படவுள்ளது. வல்வை நகரசபைக்கு எதிரான இந்த வழக்கினை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வல்வை நகரசபை வட்டாரங்களின் தகவல்களின் படி சம்பந்தப்பட்ட தீருவில் பொதுப் பூங்கா அமைந்துள்ள பகுதி தனியார்களுக்கும், வல்வை சிவன் கோவிலுக்கும் சொந்தமானவை. இதில் வல்வை சிவன் கோவிலுக்கும் சொந்தமான நிலம் 99 வருட குத்தகை அடிப்படையில் வல்வை நகரசபையால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
தீருவில் பொதுப்பூங்கா அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அதனைப் புனரமைப்புச் செய்வதற்கு வல்வெட்டித்துறை நகரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் குறித்த நிலப்பரப்பு முழுவதும் தமக்கு சொந்தமாக்கப்பட வேண்டும் என்று கோரி பருத்தித்துறை மாவட்ட நீதி மன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய இந்த நிலப்பகுதியின் ஒரு பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான திரு.குமரப்பா, மற்றும் திரு.புலேந்திரன் உட்பட்ட பன்னிருவரின் நினைவுத்தூபியும், மற்றும் கிட்டு என அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னுமொரு சிரேஷ்ட உறுப்பினரான திரு.சதாசிவம் கிருஷ்ணகுமார் அவர்களின் நினைவுச் சின்னம் ஒன்றும் அமைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தீருவில் பொதுப்பூங்காவின் சர்ச்சை தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து முதலாவது விசாரணை இடம் பெற்ற அன்று இரவு "தீருவில் பொதுப் பூங்கா'' என்ற பெயர்ப்பலகைகளில் இரண்டில் ஒன்று இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.