க.பொ.த (சா/த) விஞ்ஞான பாடவினாத்தாள் விவகாரம் ஜனாதிபதியிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2012 (திங்கட்கிழமை)
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாள், குறித்த பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதா என எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியான உண்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரி இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடமும், ஜனாதிபதியின் செயலாளரிடமும் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
இது விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும், இந்த விசாரணைகள் உண்மையானதாக இருக்கவேண்டுமெனக் கோரியே தாம் முறைப்பாடு செய்தார் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜோசப் ஸ்டாலின் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடப் பரீட்சை நேற்று (நேற்றுமுன்தினம்) நடைபெற்றது.
இந்தப் பரீட்சை வினாத்தாளில் வழங்கப்பட்ட வினாக்களுள் 18 வினாக்களும் அதற்குரிய படங்களும் உள்ளடக்கப்பட்ட மாதிரி வினாத்தாளொன்று கம்பஹா மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிறுவன ஆசிரியரால் வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞானப் பாடப் பரீட்சை வினாத்தாளிலுள்ள கேள்விகள் மட்டுமல்லாது, அதிலுள்ள படங்களும் குறித்த ஆசிரியர் வழங்கியுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ளடங்குகின்றது.
எனவே, இதனை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது விஞ்ஞானப் பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. இது விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இது போதாது. இது தொடர்பில் எமக்கு உடனடியான உண்மையான விசாரணை இடம்பெறவேண்டும். இந்த விசாரணையை வலியுறுத்தி பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடமும், ஜனாதிபதியின் செயலாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம்.
மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பரீட்சைகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறுவதானது, பரீட்சைகள் தொடர்பில் மாணவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இல்லாதொழிக்கின்றது என்றார்.
இதேவேளை, பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்படவில்லை. எனது அறிவு, அனுபவத்திற்கேற்பவே நான் விஞ்ஞானப் பாட மாதிரி வினாத்தாளை தயார்செய்து மாணவர்களுக்கு வழங்கினேன் என்று கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்டவாறு பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.